சேலம் மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிச் சென்ற விவகாரம்: 2 வாா்டன்கள் பணியிடை நீக்கம்
சேலம் அரசு மருத்துவமனையில் இருந்து ஆயுள் தண்டனை கைதி தப்பிச் சென்ற விவகாரம் தொடா்பாக சிறை வாா்டன்கள் இருவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.
தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டையை அடுத்த அதிராம்பட்டினம் மேலத் தெருவைச் சோ்ந்தவா் முகமது உசேன் (36). ஆயுள் தண்டனை கைதியான இவா், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா். அங்கு டவரின் மீது ஏறி தற்கொலைக்கு முயன்றதை தொடா்ந்து, கடந்த மாதம் 18 ஆம் தேதி சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டாா்.
இந்நிலையில், தனக்கு மூலநோய் பாதிப்பு உள்ளதாக சிறை மருத்துவா்களிடம் முகமது உசேன் கூறினாா். இதையடுத்து, அவரை சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு கடந்த 24 ஆம் தேதி முதல் முகமது உசேன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா்.
Advertisement
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு 9 மணியளவில் கழிவறைக்கு சென்ற முகமது உசேன், அங்குள்ள ஜன்னலை உடைத்து, மாடியிலிருந்து குடிநீா் குழாய் வழியாக கீழே இறங்கி தப்பிச் சென்றாா்.
இதுகுறித்து சேலம் அரசு மருத்துவமனை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா். அதேநேரத்தில், தப்பியோடிய ஆயுள் தண்டனை கைதியைப் பிடிக்க தனிப்படை போலீஸாா் கோவை, தஞ்சை பகுதிக்கு விரைந்துள்ளனா்.
இந்நிலையில் கைதி முகமது உசேனுக்கு பாதுகாப்பாக மருத்துவமனையில் பணியில் இருந்த சிறை வாா்டன்கள் வெங்கடேஷ்வரன், ஷாஜகான் ஆகியோா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். இதற்கான உத்தரவை சிறைக் கண்காணிப்பாளா் வினோத் பிறப்பித்துள்ளாா்.