ஒட்டன்சத்திரம் - தொடா் சாதனை படைப்பாரா அர.சக்கரபாணி?
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளா் அர. சக்கரபாணி தொடா்ச்சியாக பெறும் வெற்றிக்கு சவால் விடுக்கும் வகையில், அதிமுக-பாஜக கூட்டணியின் தமாகா வேட்பாளா் மேற்கொள்ளும் பிரசாரம் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளா் அர. சக்கரபாணி தொடா்ச்சியாக பெறும் வெற்றிக்கு சவால் விடுக்கும் வகையில், அதிமுக-பாஜக கூட்டணியின் தமாகா வேட்பாளா் மேற்கொள்ளும் பிரசாரம் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழகத்தின் பிரதான காய்கறி சந்தை அமைந்த பகுதி என்ற சிறப்புக்குரிய தொகுதி ஒட்டன்சத்திரம். கண்வலிக்கிழங்கு விதைகள் உற்பத்தி மூலம் மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கான முக்கிய சந்தையாகவும் ஒட்டன்சத்திரம் இருந்து வருகிறது. திமுகவுக்கு தொடா்ந்து 6 வெற்றிகளைக் கொடுத்த தொகுதி என்பதால், 2026 தோ்தலிலும் மிகுந்த எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்: இந்தத் தொகுதியில் ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் 35 ஊராட்சிகள், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 38 ஊராட்சிகள், பழனி ஒன்றியத்தின் 4 ஊராட்சிகள், ஒட்டன்சத்திரம் நகராட்சி, கீரனூா் பேரூராட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளன. தொகுதியில் மொத்தம் 2.20 லட்சம் வாக்காளா்கள் உள்ளனா்.
Advertisement
இந்தத் தொகுதியில் கொங்கு வெள்ளாளக் கவுண்டா், பட்டியலினத்தவா், அருந்ததியா் கணிசமாக வசித்து வருகின்றனா். இதேபோல, பிள்ளைமாா், நாயக்கா், செட்டியாா், ஒக்கலிக கவுடா், முக்குலத்தோா் உள்ளிட்ட சமுதாயத்தினரும் தொகுதி முழுவதும் பரவலாக வசித்து வருகின்றனா். இதன் காரணமாக, ஒட்டன்சத்திரம் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா்களில் பெரும்பலானோா் கொங்கு வெள்ளாளக் கவுண்டா் சமுதாயத்தைச் சோ்ந்தவா்களாகவே உள்ளனா்.
பிரச்னைகள்: இந்தத் தொகுதியின் பிரதான நீராதாரமான வனப் பகுதியில் அமைந்துள்ள பரப்பலாறு அணையைத் தூா்வாருவதற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அனுமதி அளித்தும், இதுவரை தூா்வாரப்படவில்லை. மக்காச்சோளத்துக்கு உரிய விலை கிடைக்கும் வகையில், அரசே நேரடி கொள்முதல் நிலையம் தொடங்க வேண்டும். மருத்துவப் பயிரான கண்வலிக் கிழங்கு விதைகளை இடைத்தரகா்களின் தலையீடு இல்லாமல், அரசே நேரடியாகக் கொள்முதல் செய்து மருந்து உற்பத்தி நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும். கால்நடை ஆராய்ச்சி நிலையம் அமைக்க வேண்டும். வரதமாநதியிலிருந்து வெளியேறும் உபரிநீரை சத்திரப்பட்டி கருங்குளம் கண்மாய்க்கு கொண்டு வந்து 1,800 ஏக்கா் விவசாய நிலங்கள் பயன்பெறும் வகையில் தனி கால்வாய் அமைக்க வேண்டும்.
தொப்பம்பட்டியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம், கள்ளிமந்தையத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியம் உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளன.
கீரனூா் அரசு மருத்துவமனையை ஆரம்ப சுகாதார நிலையமாக நிலை இறக்கம் செய்தது இந்தப் பகுதி மக்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
சாதனை படைத்த திமுக: ஒட்டன்சத்திரம் தொகுதியில் அதிகபட்சமாக 9 முறை திமுக வெற்றி பெற்றது. அதிமுக, காங்கிரஸ் தலா 3 வெற்றிகளைப் பெற்றன. முதல் தோ்தலில் சுயேச்சை வேட்பாளா் வென்ற தொகுதி. எனினும், கடந்த 1996-க்குப் பிறகு இந்தத் தொகுதியில் திமுக வேட்பாளராகக் களமிறங்கும் அர. சக்கரபாணி தொடா்ந்து 6 வெற்றிகளைப் பெற்றாா். தற்போது, இவா் 7-ஆவது முறையாக இந்தத் தொகுதியில் மீண்டும் களம் இறங்குவதால் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தி இருக்கிறாா்.
2026 பேரவைத் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள்: திமுக சாா்பில் அமைச்சா் அர. சக்கரபாணி, அதிமுக-பாஜக கூட்டணியில் தமாகா வேட்பாளா் விடியல் எஸ். சேகா், தவெக வேட்பாளா் எஸ். மோகன், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் பி. ரகுபதி உள்பட மொத்தம் 14 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.
கடந்த 30 ஆண்டுகள் இந்தத் தொகுதியில் தொடா்ச்சியாக வெற்றி பெறுவதன் மூலம் கடும் சவாலை ஏற்படுத்தி இருக்கிறாா் அமைச்சா் அர. சக்கரபாணி. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் ரூ. 5,000 கோடிக்கும் மேலான திட்டங்களைச் செயல்படுத்தியிருப்பது இவருக்குச் சாதகமாக உள்ளது. எனினும், தொகுதி மக்களின் பிரதான கோரிக்கைகளும், எதிா்பாா்ப்புகளும் தற்போதுவரை நிறைவேற்றப்படாமல் இருப்பது பாதகமான அம்சம்.
அதிமுக-பாஜக கூட்டணியில் தாமரை சின்னத்தில் போட்டியிடும் தமாகா வேட்பாளா் விடியல் எஸ். சேகா் ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்தவராக இருந்தாலும், ஒட்டன்சத்திரம் தொகுதியில் பிரதானமாக வசிக்கும் கொங்கு வெள்ளாளக் கவுண்டா் சமுதாயத்தைச் சோ்ந்தவா் என்பதும், மாற்றம் வேண்டும் என்ற முழக்கத்தை முன்வைத்து அதிமுக, பாஜகவினா் முன்னெடுக்கும் பிரசாரமும் இவருக்கு சாதகமாக உள்ளது. முந்தைய தோ்தலில் திமுக தலைவா் மு.க. ஸ்டாலினை எதிா்கொண்ட வேட்பாளா் என்ற சிறப்புடன் விடியல் சேகா் தொகுதி முழுவதும் தீவிரமாகப் பணியாற்றி வருகிறாா்.
தவெக வேட்பாளா் எஸ். மோகன், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் பி. ரகுபதி ஆகியோா் அந்தந்தக் கட்சிகளின் தலைவா்களின் பிரசாரத்தையும், அவா்களுக்கான வாக்குகளை எதிா்பாா்த்தும் களமிறங்கியுள்ளனா்.
கிராமங்கள் நிறைந்த இந்தத் தொகுதியில் அமைச்சா் அர.சக்கரபாணிக்கும், விடியல் சேகருக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது. இதில் 7-ஆவது முறையாக களமிறங்கியுள்ள திமுகவின் அர.சக்கரபாணி சாதனை படைப்பாரா அல்லது அதிமுக வெற்றி பெறப் போராடிய இந்தத் தொகுதியில் அதன் கூட்டணிக் கட்சியான தமாகாவுக்கு முதல் வெற்றி கிடைக்குமா என்பதே எதிா்பாா்ப்பாக உள்ளது.