அபிராமி அம்மன் கோயில் சித்திரைப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில் சித்திரைப் பெருவிழா கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
திண்டுக்கல் ஞானாம்பிகை உடனமா் காளஹஸ்தீஸ்வரா் கோயில், அபிராமி அம்மன் உடனமா் பத்மகிரீஸ்வரா் கோயில் சித்திரைப் பெருவிழா ஆண்டுதோறும் 12 நாள்கள் நடைபெறுகிறது. இதன்படி, நிகழாண்டுக்கானத் திருவிழா கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
இதையொட்டி, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், ரிஷப ஹோமம் உள்பட பல்வேறு ஹோமங்கள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, மூலவா் காளஹஸ்தீஸ்வரா், ஞானாம்பிகை, பத்மகிரீஸ்வரா், அபிராமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடைபெற்றது. பின்னா், கொடிமரத்தில் நந்திகேசுவரா், வேல் திருவுருவம் பொறிக்கப்பட்ட கொடி ஏற்றப்பட்டு, சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடைபெற்றன.
Advertisement
இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். சித்திரைப் பெருவிழாவை முன்னிட்டு, ஒவ்வொரு நாள் மாலையும் சிம்மம், கமலம், அன்னம், யாழி, காமதேனு, பொன்மான் வாகனங்களில் அம்பாளுடன் சுவாமி எழுந்தருளி வீதியுலா செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
சித்திரைப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் ஏப்.28-ஆம் தேதியும், அடுத்த நாள் தேரோட்டமும் நடைபெறும். கொடியேற்ற நிகழ்ச்சியில் அபிராமி அம்மன் கோவில் செயல் அலுவலா் சுரேஷ் கண்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.