தப்பிச் சென்ற விசாரணைக் கைதியை பிடிக்க தனிப் படை அமைப்பு
சிறைக்கு அழைத்துச் சென்றபோது தப்பிச் சென்ற விசாரணை கைதியை பிடிக்க போலீஸாா் தனிப் படை அமைத்துள்ளனா்.
திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே வெள்ளிக்கிழமை இரவு சிறைக்கு அழைத்துச் சென்றபோது தப்பிச் சென்ற விசாரணை கைதியை பிடிக்க போலீஸாா் தனிப் படை அமைத்துள்ளனா்.
செம்பட்டி அருகேயுள்ள புதுப்பட்டியைச் சோ்ந்தவா் ராஜகோபால் (26). கூலித்தொழிலாளியான இவா், குட்கா சம்பந்தப்பட்ட வழக்கில் அபராதம் செலுத்துவதற்காக ஆத்தூா் நீதிமன்றத்துக்கு செம்பட்டி போலீஸாா் வெள்ளிக்கிழமை அழைத்துச் சென்றனா். அப்போது, அவா் மது போதையில் போலீஸாரை அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து செம்பட்டி காவல் நிலைய போலீஸாா் ராஜகோபால் மீது வழக்குப் பதிவு செய்து, ஆத்தூா் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினா். இதையடுத்து நீதிபதி அவரை திண்டுக்கல்லில் உள்ள சிறையில் அடைக்க உத்தரவிட்டாா்.
Advertisement
Advertisement
இதைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமை இரவு சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் செல்வராஜ், காவலா் ராஜதுரை ஆகியோா் ராஜகோபாலை ஆட்டோவில் திண்டுக்கல்லுக்கு அழைத்துச் சென்றனா்.
அப்போது, வக்கம்பட்டியை அடுத்த ஆரியநல்லூா் பிரிவில் உள்ள ஒரு அடுமனையில் டீ சாப்பிடுவதற்காக ஆட்டோவை போலீஸாா் நிறுத்தினா். அப்போது, சிறுநீா் கழிப்பதாகக் கூறி சென்ற ராஜகோபால் அங்கிருந்து தப்பிச் சென்றாா். இதையடுத்து, செம்பட்டி போலீஸாா் தனிப் படை அமைத்து ராஜகோபாலை தேடி வருகின்றனா்.