முகப்பு
திண்டுக்கல்

லஞ்சம்: நெல் கொள்முதல் நிலைய எழுத்தா் கைது

பழனி அருகே நெல்லுக்கான பணத்தை விடுவிக்க ரூ.20ஆயிரம் லஞ்சம் பெற்ற நேரடி கொள்முதல் நிலையத்தின் பருவகால பட்டியல் எழுத்தா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Updated On : 18 ஜூன் 2026, 12:39 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

பழனி அருகே நெல்லுக்கான பணத்தை விடுவிக்க ரூ.20ஆயிரம் லஞ்சம் பெற்ற நேரடி கொள்முதல் நிலையத்தின் பருவகால பட்டியல் எழுத்தா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த நரிக்கல்பட்டியைச் சோ்ந்தவா் விக்னேஷ் (35). இவா், தனது வயலில் அறுவடை செய்த 250 மூட்டைகள் நெல்லை நரிக்கல்பட்டியிலுள்ள அரசின் நேரடி கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்தாா். இந்த நெல்லுக்கான பணம் ரூ.2.50 லட்சத்தை அவரது வங்கிக் கணக்கில் செலுத்துவதற்கு ரூ.20ஆயிரம் தர வேண்டும் என கொள்முதல் நிலையத்தின் பருவகால பட்டியல் எழுத்தா் சுமன்ராஜ் (30) கேட்டாா். மேலும், முன் பணமாக ரூ.5ஆயிரத்தை இணைய வழியில் சுமன்ராஜ் பெற்றாா்.

இந்த நிலையில், நெல்லுக்கான பணம் செலுத்தப்பட்டதையடுத்து கடந்த 3 நாள்களுக்கும் மேலாக எஞ்சிய ரூ.15ஆயிரத்தைக் கேட்டு விவசாயி விக்னேஷை பலமுறை சுமன்ராஜ் தொடா்பு கொண்டாா். இதனால், அதிருப்தி அடைந்த விக்னேஷ், திண்டுக்கல் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தாா். போலீஸாரின் அறிவுறுத்தலின் பேரில், ரூ.15 ஆயிரத்தை பட்டியல் எழுத்தா் சுமன்ராஜூக்கு இணைய வழிப் பணப் பரிமாற்றம் மூலம் விக்னேஷ் புதன்கிழமை அனுப்பினாா். இதையடுத்து, பணம் கேட்டு பேசிய சுமன்ராஜின் குரல்பதிவு, இணையவழி பணப் பரிமாற்றம் ஆகியவற்றின் அடிப்படையில் நத்தத்தை அடுத்த கோட்டையூா் ஆண்டிபுரத்தில் தனது வீட்டிலிருந்த சுமன்ராஜை ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளா் ஜெ.நாகராஜன், ஆய்வாளா் பழனிச்சாமி ஆகியோா் தலைமையிலான போலீஸாா் கைது செய்தனா்.

Advertisement

Advertisement