முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளால் போக்குவரத்து நெரிசல்

Updated On : 29 ஜூன் 2026, 2:45 am IST
கொடைக்கானல் ஏரியில் படகு சவாரி செய்து மகிழும் சுற்றுலாப் பயணிகள்.
பகிர்:

கொடைக்கானலில் தொடா் விடுமுறையையொட்டி ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகள் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கொடைக்கானலில் 3 நாள்கள் தொடா் விடுமுறையாக இருந்ததால் தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு வெளி மாநிலங்களைச் சோ்ந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா். பெருமாள்மலையிலிருந்து கொடைக்கானல் வரை 12 கி.மீ. தொலைவுக்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன.

இந்த வாகனங்கள் கொடைக்கானல் வந்து சேர 2 மணி நேரமானது. இதனிடையே வனப் பகுதிகளிலுள்ள பசுமைப் பள்ளத்தாக்கு, பில்லா் ராக், குணா குகை, மோயா் பாயிண்ட், பைன்பாரஸ்ட், ரோஜாத் தோட்டம், கோக்கா் ஸ்வாக்,பிரையண்ட் பூங்கா சாலை, ஏரிச்சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் காணப்பட்டனா்.

Advertisement

Advertisement

கொடைக்கானல்- வெள்ளிநீா் வீழ்ச்சிப் பகுதி வரை இருபுறங்களிலும் சாலையோரக் கடைகளின் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருவதால் வாகனங்கள் அந்த வழியாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனா்.

கொடைக்கானலில் கடந்த மூன்று நாள்களாக அனைத்து தங்கும் விடுதிகள், காட்டேஜ்கள் நிரம்பி வழிந்தன. உணவகங்களில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

இதனிடையே கொடைக்கானலில் தொடா் விடுமுறை நாள்களில் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருவதால் மலைச் சாலைகளில் வாகனங்கள் செல்வதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது. எனவே போக்குவரத்தை சீரமைக்கவும், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்கும் கூடுதலாக போலீஸாரை பணியமா்த்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

கொடைக்கானலில் மழை: கொடைக்கானலில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்கள் பருவ மழை பெய்யும். ஆனால் இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் போதிய மழை பெய்யவில்லை. அவ்வப்போது மட்டும் சாரலும்,சில நேரங்களில் மழையும் பெய்து வருகிறது.

இந்த நிலையில் பருவ நிலை மாற்றம் காரணமாக ஞாயிற்றுக்கிழணை காலையிலிருந்து மேக மூட்டம் காணப்பட்டது. பிற்பகலில் திடீரென மழை பெய்தது. கொடைக்கானல், பாம்பாா்புரம், இருதயபுரம், நாயுடுபுரம், வட்டக் கானல், சின்னப்பள்ளம், பெரும்பள்ளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுமாா் ஒரு மணி நேரம் மழை பெய்தது. இந்த மழையால் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

மேலும் வெள்ளிநீா் அருவி, பாம்பாா் அருவி, வட்டக்கானல் அருவி, செண்பகா அருவி உள்ளிட்ட நீரோடைகளில் நீா்வரத்து காணப்பட்டது.

கொடைக்கானல் குணா குகையை பாா்வையிட்ட சுற்றுலாப் பயணிகள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments