தமிழக விசைப்படகுகளை மீட்க மூன்றாம் கட்டமாக மீனவர் குழு இலங்கை பயணம்
இலங்கையில் உள்ள 16 விசைப்படகுகளை மீட்க மூன்றாம் கட்டமாக ராமேசுவரத்தில் இருந்து 14 விசைப்படகுகளில்
இலங்கையில் உள்ள 16 விசைப்படகுகளை மீட்க மூன்றாம் கட்டமாக ராமேசுவரத்தில் இருந்து 14 விசைப்படகுகளில் 79 மீனவர்கள் அடங்கிய குழுவினர் இலங்கைக்கு புதன்கிழமை சென்றனர்.
தமிழகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்று இலங்கை கடற்படையினரால் விசைப்படகுகளுடன் மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டனர். இதில் மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் அவர்களது விசைப்படகுகளை விடுவிக்க இலங்கை அரசு மறுத்து வந்தது. இந்நிலையில், இலங்கை அரசின் பரிந்துரையின் பேரிலும் நல்லெண்ண அடிப்படையிலும் தமிழக மீனவர்களின் 46 விசைப்படகுகளை இலங்கை நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டது. இந்த படகுகளை மீட்டு வர இந்திய மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் மீனவ சங்க நிர்வாகிகள் இலங்கை சென்றனர். இதனையடுத்து, இரண்டு கட்டங்களாக இலங்கை சென்ற மீட்பு குழுவினர் 14 விசைப்படகுகளை மீட்டு வந்தனர். இந்நிலையில், மூன்றாம் கட்டமாக ராமேசுவரத்தை சேர்ந்த 10 விசைப்படகுகள், நாகை மாவட்டத்தை சேர்ந்த 6 விசைப்படகுகள் என 16 விசைப்படகுகளை மீட்க ராமேசுவரம் மற்றும் மண்டபத்தில் இருந்து 14 விசைப்படகுகளில் 79 மீனவர்கள் புதன்கிழமை இலங்கை புறப்பட்டுச் சென்றனர். இந்த மீனவர்கள் குழு இரண்டு நாள்கள் அங்கு தங்கி விசைப்படகுகளை சீரமைத்து பின்னர் நாடு திரும்ப உள்ளதாக மீன்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.