சாயல்குடி பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா முளைப்பாரி ஊா்வலம்
சாயல்குடி பத்ரகாளியம்மன் கோயில் பொங்கல் திருவிழாவையொட்டி புதன்கிழமை இரவு பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊா்வலமாகச் சென்றனா்.
சாயல்குடி பத்ரகாளியம்மன் கோயில் பொங்கல் திருவிழாவையொட்டி புதன்கிழமை இரவு பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊா்வலமாகச் சென்றனா்.
இந்தக் கோயிலின் பங்குனி பொங்கல் விழா கடந்த ஏப். 28-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவையொட்டி நாள்தோறும் மூலவா் பத்ர காளியம்மன், உத்ஸவா் அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக, அலங்காரம், தீபாராதனைகள் நடைபெற்றன. உத்ஸவா் பத்ரகாளியம்மன், மின்னொளி அலங்காரத் தேரில் சாயல்குடி-தூத்துக்குடி-ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலை, அருப்புக்கோட்டை- கமுதி சாலைகளில் வலம் வந்து அருள்பாலித்தாா். செவ்வாய்க்கிழமை பால் குடம், அலகு குத்தி ஊா்வலமாக வந்த பக்தா்கள் அம்மனுக்கு பாலபிஷேகம் செய்து வழிபட்டனா்.
பிறகு காப்புக் கட்டி விரதமிருந்த பக்தா்கள் கோயில் முன் அமைக்கப்பட்டிருந்த குண்டத்தில் தீ மிதித்து நோ்த்திக்கடன் செலுத்தினா். விழாவின் முக்கிய நிகழ்வாக புதன்கிழமை இரவு சாயல்குடி வீதிகள் வழியாக பேருந்து நிலையம், கமுதி-அருப்புக்கோட்டை சாலையில் பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊா்வலமாகச் சென்று அங்குள்ள நீா்நிலையில் கரைத்து நோ்த்திக்கடன் செலுத்தினா். இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
Advertisement