பெண் அஞ்சல் ஊழியரிடம் நகை பறிப்பு: திருப்பத்தூரில் பரபரப்பு
திருப்பத்தூரில் அஞ்சல் அலுவலகத்தில் புதன்கிழமையன்று சேமிப்பு கணக்கு துவங்குவதாக கூறிய இளைஞர், பெண் ஊழியர் கழுத்தில் இருந்த 9 பவுன் தங்க
திருப்பத்தூரில் அஞ்சல் அலுவலகத்தில் புதன்கிழமையன்று சேமிப்பு கணக்கு துவங்குவதாக கூறிய இளைஞர், பெண் ஊழியர் கழுத்தில் இருந்த 9 பவுன் தங்க சங்கிலிகளை பறித்துக்கொண்டு ஓடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் அருகே முறையூரைச் சேர்ந்தவர் நாச்சியப்பன் மனைவி வளர்மதி(41). இவர் திருப்புத்தூர் சுவிடிஷ் மிஷன் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அஞ்சலக கிளை அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் புதன்கிழமை பணியில் இருந்த போது, மதியம் சுமார் 1 மணியளவில் ஒரு இளைஞர் அலுவலகத்திற்கு வந்து புதிய சேமிப்பு கணக்கு துவங்க வேண்டும் என்று விபரம் கேட்டுள்ளார்.
அப்போது திடீரென அந்த இளைஞர், வளர்மதி அணிந்திருந்த 7 பவுன் தாலி செயின் மற்றும் ஒன்றரை பவுன் டாலர் செயின் இரண்டையும் பறித்துள்ளார். வளர்மதி கையால் சங்கிலியை பிடித்து அந்த இளைஞருடன் போராடியுள்ளார். இதில் கையில் கிடைத்த பாதி சங்கிலியை பறித்துக் கொண்டு, கையில் மறைத்து வைத்திருந்த மிளகாய் பொடியை வளர்மதியின் முகத்தில் தூவிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இதுகுறித்து வளர்மதி கொடுத்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த திருப்பத்தூர் காவல் ஆய்வாளர் கீதா உள்ளிட்ட போலீசார் விசாரணை நடத்தினர். அதே பகுதியைச் சேர்ந்த புருஷோத்தமன் மனைவி கலைவாணி (27), பிள்ளையார்பட்டியைச் சேர்ந்த செல்லக்கண்ணு மகன் வடிவேலு(27) இருவரும் சங்கிலி பறிப்பில் சம்மந்தப்பட்டிருப்பதாக தெரியவந்ததையடுத்து திருப்பத்தூர் நகர் போலீசார் இருவரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். செவ்வாய்கிழமையன்று ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் இதேபோன்று 4 பவுன் சங்கிலி பறிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.