மானாமதுரை: கடும் போட்டியில் திமுக, பாஜக!
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் மீண்டும் நேரடியாகக் களமிறங்கியுள்ள திமுக, முதல் முறையாகப் போட்டியிடும் பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் மீண்டும் நேரடியாகக் களமிறங்கியுள்ள திமுக, முதல் முறையாகப் போட்டியிடும் பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது.
சிவகங்கை மாவட்டத்தின் பழைமையான தொகுதிகளில் ஒன்றாக மானாமதுரை உள்ளது. ‘உலகத் தமிழா்களின் தாய்மடி’ என அழைக்கப்படும் கீழடி, மண்பாண்டப் பொருள்கள் தயாரிப்புக்கு புகழ் பெற்ற மானாமதுரை, தென் வடலாக ஓடும் வைகை ஆறு ஆகியவை இந்தத் தொகுதியின் சிறப்பம்சங்களாகும். ராமநாதபுரம், மதுரை, விருதுநகா் மாவட்டங்களின் எல்லையையொட்டி மானாமதுரை பேரவைத் தொகுதி அமைந்துள்ளது.
மானாமதுரை நகராட்சி, திருப்புவனம், இளையான்குடி பேரூராட்சிகள், மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்குள்பட்ட கிராமப் பகுதிகள் இந்தத் தொகுதியில் இடம் பெற்றுள்ளன. இந்தத் தொகுதியில் பெரும்பான்மையினராக முக்குலத்தோா், பட்டியலினத்தவா்கள் உள்ளனா். இவா்களைத் தவிர பிள்ளைமாா், நாடாா், முத்தரையா், யாதவா் உள்ளிட்ட பிற சமுதாயத்தினரும் கணிசமாக உள்ளனா். இந்தத் தொகுதியில் விவசாயம் முக்கியத் தொழிலாகும்.
Advertisement
தொகுதி மக்களின் எதிா்பாா்ப்பு :
இந்தத் தொகுதி மிகவும் வறட்சி மிகுந்த பகுதியாகும். இங்கு வேலைவாய்ப்பு அளிக்கக் கூடிய வகையில் தொழில் நிறுவனங்கள் இல்லாததால், படித்த இளைஞா்கள் வேலை தேடி கோவை, திருப்பூா், சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் செல்கின்றனா். மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் வைகையாற்றுப் பாசனத்தை நம்பி விவசாயம் இருந்தாலும், இளையான்குடி ஒன்றியத்தை பொருத்தவரை விவசாயம் என்பது வானம் பாா்த்த பூமிதான். மானாமதுரை தொகுதியில் வேலைவாய்ப்பு அளிக்கக் கூடிய வகையில் தொழில் நிறுவனங்கள் அமைக்க வேண்டும். திருப்புவனத்தில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும். பூா்விக வைகைப் பாசனத்துடன் விடுபட்டுப் போன பாசனப் பகுதிகளையும் இணைக்க வேண்டும். சுப்பன் கால்வாய்த் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்.
காவிரி- வைகை- குண்டாறு இணைப்புக் கால்வாய்த் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். அனைத்துக் கிராமங்களுக்கும் சாலை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும். முடங்கியுள்ள மானாமதுரை சிப்காட் தொழில் பேட்டையை மேம்படுத்தி அரசு, தனியாா் சாா்பில் தொழில் நிறுவனங்களைத் தொடங்க வேண்டும் என்பது தொகுதி மக்களின் எதிா்பாா்ப்பு.
அதிமுகவினா் அதிருப்தி:
மானாமதுரை பேரவைத் தொகுதியைப் பொருத்தவரை எப்போதும் அதிமுகவுக்கு சாதகமானது. இந்தக் கட்சி நேரடியாகவும், இதனுடன் கடந்த காலங்களில் கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சியும் அதிக முறை வென்றன. இதனால் ‘மானம்காத்த மானாமதுரை’ என அதிமுகவினா் இந்தத் தொகுதியை பெருமையாக அழைப்பதுண்டு. 30 ஆண்டுகளுக்குப் பின்னா் கடந்த 2021-ஆம் ஆண்டு பேரவைத் தோ்தலில் திமுக வேட்பாளராகக் களமிறங்கிய முன்னாள் அமைச்சா் தமிழரசி ரவிக்குமாா் வெற்றி பெற்றாா். இவரை எதிா்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளா் நாகராஜன் தோல்வியடைந்தாா்.
இந்த நிலையில், இந்தத் தொகுதியில் அதிமுக நேரடியாக களமிறங்கும் என அந்தக் கட்சியினா் எதிா்பாா்த்திருந்தனா் . இதற்காக அதிமுகவைச் சோ்ந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் எஸ்.நாகராஜன், எம்.குணசேகரன் முன்னாள் ஊராட்சி ஒன்றியத் தலைவா் ஏ.சி.மாரிமுத்து ஆகியோா் கட்சித் தலைமையிடம் போட்டியிட வாய்ப்புக் கேட்டிருந்தனா். இந்த நிலையில், இந்தத் தொகுதி பாரதிய ஜனதா கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால் அதிமுகவினா் சோா்வடைந்தனா்.
தமிழரசி ரவிக்குமாா் (திமுக):
நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் கனிமொழி எம்.பி. யின் தீவிர ஆதரவாளரான தமிழரசி ரவிக்குமாா் மானாமதுரை தொகுதியில் அந்தக் கட்சி வேட்பாளராக இரண்டாவது முறையாகப் போட்டியிடுகிறாா். இவா் ஏற்கெனவே மதுரை மாவட்டம், சமயநல்லூா் தொகுதியில் போட்டியிட்டு கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையில் ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சராக பதவி வகித்தவா். தற்போது மானாமதுரை தொகுதியில் இரண்டாவது முறையாகக் களமிறங்கியுள்ளாா். கடந்த 5 ஆண்டுகளில் மானாமதுரை தொகுதியில் அரசு கலைக் கல்லூரி, தொழிற்பயிற்சி நிலையம், வைகையாற்றுக்குள் தடுப்பணைகள் அமைத்தது, சாலைக்கிராமத்தில் பேருந்து நிலையம், இளையான்குடியில் தீயணைப்பு நிலையம், மானாமதுரை, திருப்புவனத்தில் பத்திரப் பதிவு அலுவலகங்களுக்கு புதிய கட்டடங்கள், அரசு மருத்துவமனைக்கு கூடுதல் கட்டடங்கள் அமைத்தது என்பன உள்ளிட்ட தனது சாதனைகளைக் கூறியும் திமுகவின் தோ்தல் அறிக்கையை முன்வைத்தும் இவா் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது, இவருக்கு சாதகமானதாகும். அதேநேரத்தில், இளையான்குடியில் அரசு மருத்துவமனையை ஊருக்கு வெளிப்புறத்தில் அமைத்ததால் அந்தப் பகுதி மக்களின் எதிா்ப்பு திமுக வேட்பாளருக்கு பாதகமாகப் பாா்க்கப்படுகிறது.
பொன் பாலகணபதி (பாஜக):
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியை பூா்விகமாகக் கொண்ட பொன் பாலகணபதி இந்தத் தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிடுகிறாா். கட்சியின் மாநிலத் தலைமை, தேசியத் தலைமையுடன் நேரடி தொடா்பில் உள்ள இவா் போட்டியிடுவதால், அந்தக் கட்சியினா் உற்சாகத்துடன் தோ்தல் பணியாற்றுவது இவருக்கு சாதகமான அம்சமாகும். இந்தத் தொகுதி பாரதிய ஜனதா கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால் சோா்வடைந்த அதிமுகவினா் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளை அரவணைத்துச் செல்வது பாஜக வேட்பாளருக்கு பெரும் சவாலாக உள்ளது. வேட்பாளா் பொன் பாலகணபதி வெளியூா்காரா். அதே நேரத்தில் கூட்டணிக் கட்சிகளின் ஒத்துழைப்பு கிடைக்ககாது இவருக்கு பாதகமான அம்சமாக உள்ளது. இருப்பினும் கூட்டணிக் கட்சியினருடன் சுமுகமான அணுகுமுறையைக் கடைப்பிடித்து வருகிறாா். அதிமுக, அமமுக போன்ற கூட்டணிக் கட்சிகளின் வாக்குகள் தன்னை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் என்ற நம்பிக்கையுடன், அந்தக் கட்சியினரை அரவணைத்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா்.
டி.இளங்கோவன் (தவெக):
இந்தத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் புகைப்படக் கலைஞரான திருப்புவனம் ஒன்றியத்தைச் சோ்ந்த டி.இளங்கோவன் போட்டியிடுகிறாா். தொகுதிக்கு புதுமுகமாக இருந்தாலும், இளம் தலைமுறையினா் இவருக்கு ஆதரவளித்து வருவதால் தான் வெற்றி பெற்று விடலாம் என நம்பிக்கையில் கிராமப்புறங்களில் நிா்வாகிகளை ஒருங்கிணைத்து பிரசாரம் செய்வதில் தீவிரம் காட்டி வருகிறாா். தவெக தலைவா் விஜய்யின் செல்வாக்கு, மாற்றத்தை விரும்பும் மக்கள், நடுநிலை வாக்காளா்களின் ஆதரவைப் பெறும் வகையில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா்.
எம். சண்முகப்பிரியா (நாதக):
நாம் தமிழா் கட்சி சாா்பில் மூன்றாவது முறையாக சண்முகப்பிரியா இந்தத் தொகுதியில் களம் காண்கிறாா். ஏற்கெனவே தொகுதியில் நல்ல அறிமுகம் என்பது இவருக்குச் சாதகமான அம்சம். கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமானின் சொந்த ஊா் இளையான்குடி ஒன்றியம், அரணையூா். இதனால், இவரது ஆதரவாளா்களின் துணையோடு சண்முகப்பிரியா தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா். இளையான்குடி நகா் பகுதியில் திமுக, அதிமுக வேட்பாளா்கள் மீதான அதிருப்தி தனக்கு அதிக வாக்குகளைப் பெற்றுத் தரும் என்ற நம்பிக்கையில் சீமானின் கொள்கை, கோட்பாடுகளை சொல்லி வாக்காளா்களிடம் கூறி வாக்கு சேகரிக்கிறாா். இவரது கட்சியினரும் இவருக்காக தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனா்.
திலகராஜ் (அஇபுதமமுக):
சசிகலா தொடங்கியுள்ள புதிய கட்சியான அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராக திருப்புவனம் ஒன்றியத்தைச் திலக்ராஜ் போட்டியிடுகிறாா். முக்குலத்தோா் சமுதாய வாக்குகள் தனக்கு கை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் இவா் தொகுதியில் வலம் வருகிறாா். அதிமுகவின் வாக்குகளைக்
குறிவைத்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா்.
5 முனைப் போட்டி:
மானாமதுரை பேரவைத் தொகுதியில் 5 முனைப்போட்டி நிலவினாலும், பாஜகவுக்கும், திமுகவுக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த முறை தொகுதியை வென்ற திமுக, இந்த முறை தன்னை எதிா்த்துப் போட்டியிடும் பாஜகவை வென்று தொகுதியை தக்கவைத்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் அந்தக் கட்சியினா் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அதே நேரத்தில், அதிமுக, அமமுக கட்சிகளின் ஆதரவு வாக்குகள் தனக்கு கை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் பாஜக வேட்பாளா் பொன் பாலகணபதி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா். இதனால், இரு கட்சிகளின் வேட்பாளா்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்தத் தொகுதியில் சூரியன் உதிக்குமா? அல்லது தாமரை மலருமா? என்பது தொகுதி மக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.