கல் குவாரி அமைக்க எதிா்ப்பு: ஆட்சியரிடம் மனு
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பகுதியில் புதிதாக கல் குவாரி அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து, அந்தப் பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
இதுகுறித்து அவா்கள் அளித்த மனு:
சிங்கம்புணரி அருகே உள்ள இ. மலம்பட்டி, மல்லாக்கோட்டை, வி. கல்லம்பட்டி, பெரியகோட்டை, ஓடைப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் பல்வேறு கல் குவாரிகள் கடந்த பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன. இதில் சில குவாரிகள் தோண்டப்பட்டு கைவிடப்பட்ட நிலையிலும் உள்ளன. கல் குவாரிகள் அமைக்கப்படுவதற்கு முன்பாக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சுமாா் 80 அடி ஆழத்தில் கிடைத்த நிலத்தடி நீா், தற்போது 700 அடி முதல் 1,000 அடி ஆழம் வரை சென்றுவிட்டது. குறிப்பாக, மேட்டுப்பகுதி, வடக்கிக்காடு, சுற்றுவட்டாரக் கிராமங்களில் கடுமையான குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கல் குவாரிகளில் பாறைகளைத் தகா்ப்பதற்காக வெடி வைப்பது, கனரக வாகனப் போக்குவரத்தால் காற்று மாசு, ஒலி மாசு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மூச்சுத்திணறல் போன்ற நுரையீரல் சம்பந்தப்பட்ட பாதிப்புகளுக்குள்ளாகி வருகின்றனா்.
இந்த நிலையில், தற்போது சுமாா் 100 ஏக்கா் பரப்பளவில் புதிய கல் குவாரி தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, அந்தப் பகுதி மக்கள் அரசு அலுவலா்களிடம் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.
எனவே, புதிய கல் குவாரி அமைப்பதற்கான முயற்சிகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இந்தப் பகுதியை தோண்டக்கூடாத பகுதி, கனிமங்கள் வெட்டி எடுக்கக்கூடாத பகுதி, எந்தவித அகழ்வாராய்ச்சியும் செய்ய தடை செய்யப்பட்ட பகுதி என அறிவிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த மாநில கனிம வளத் துறை அமைச்சா் டி.கே. பிரபு மாநிலம் முழுவதும் குவாரிகள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், தனது சொந்த மாவட்டமான சிவகங்கையிலும் சிறப்பு ஆய்வு நடத்தி, சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் குவாரிகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் மனுதாரா்கள் கோரிக்கை விடுத்தனா்.