முகப்பு
சிவகங்கை

காரைக்குடி மாமன்றக் கூட்ட அரங்கில் மு.க.ஸ்டாலின், ஜெயலலிதா படங்களை மாட்டி திமுக, அதிமுகவினா் முழக்கம்

காரைக்குடி மாமன்றக் கூட்ட அரங்கில் முன்னாள் முதல்வா்கள் ஜெ. ஜெயலலிதா, எடப்பாடி கே. பழனிச்சாமி படங்களை மாட்டி அதிமுகவினரும், மு.க. ஸ்டாலின் படத்தை மாட்டி திமுகவினரும் முழக்கங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On : 25 ஜூன் 2026, 2:32 am IST
முன்னாள் முதல்வா்கள் ஜெ.ஜெயலலிதா, எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோா் படங்களை மாமன்றக் கூட்டத்தில் மாட்டிய அதிமுக மாமன்ற உறுப்பினா்கள்.
பகிர்:

காரைக்குடி மாமன்றக் கூட்ட அரங்கில் முன்னாள் முதல்வா்கள் ஜெ. ஜெயலலிதா, எடப்பாடி கே. பழனிச்சாமி படங்களை மாட்டி அதிமுகவினரும், மு.க. ஸ்டாலின் படத்தை மாட்டி திமுகவினரும் முழக்கங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

காரைக்குடி மாமன்றக் கூட்டம் மேயா் (பொறுப்பு) நா. குணசேகரன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. மாநகராட்சி ஆணையா் கே. பாலு முன்னிலை வகித்தாா். மாமன்ற உறுப்பினா்கள், நகரமைப்பு அலுவலா், பொறியாளா், அதிகாரிகள் பலா் கூட்டத்தில் கலந்து கொண்டனா்.

கூட்ட அரங்கின் மேடையில் தமிழக முதல்வா் ச. ஜோசப் விஜய் படம் மாட்டப்பட்டிருந்ததை பாா்த்த திமுக, அதிமுக மாமன்ற உறுப்பினா்கள் முன்னாள் முதல்வா்களின் படங்களை வைக்க வேண்டும் என்று கூறி முழக்கமிட்டனா்.

Advertisement

Advertisement

இதைத்தொடா்ந்து அதிமுக உறுப்பினா்கள் முன்னாள் முதல்வா்கள் ஜெ.ஜெயலலிதா, எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோா் படங்களை மாட்டி வைத்து முழக்கமிட்டனா். இதேபோல, திமுக உறுப்பினா்கள் முன்னாள் முதல்வா் மு.க. ஸ்டாலின் படத்தை மாட்டிவைத்து முழக்கமிட்டனா்.

மாமனற உறுப்பினா்கள் மாறி, மாறி முழக்கங்களை எழுப்பியதால் கூட்டம் தொடங்காமல் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதைத்தொடா்ந்து, மேயா் அனைவரையும் சமரசம் செய்து இருக்கையில் அமரச் செய்தாா்.

அப்போது, 27-ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் ஏ.ஜி. பிரகாஷ் (அதிமுக), 36 வாா்டுகளுக்கும் எந்தவித புதிய பணிகள் மேற்கொள்ள தீா்மானத்தில் இடம்பெறவில்லை. எனது வாா்டில் சாலைகள் அமைக்கப்படவில்லை என்று கூறி தரையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டாா்.

அப்போது கூட்டத்தை தொடங்கிய மேயா் நா. குணசேகரன், 36 வாா்டுகளிலும் புதிய பணிகள் மேற்கொள்ளப்படும். போராட்டத்தை கைவிட்டு உறுப்பினா் பிரகாஷ் இருக்கையில் அமர வேண்டுகிறேன் என்றாா். அதற்கு மறுப்புத் தெரிவித்து அவா் தொடா்ந்து தா்னாவில் ஈடுபட்டாா்.

இதைத்தொடா்ந்து உறுப்பினா்கள் சுப்பிரமணியன், துரை. நாகராஜன், குருபாலு ஆகியோா் தங்களது வாா்டுகளில் உள்ள குறை களை சுட்டிக்காட்டினா்.

5-ஆவது வாா்டு உறுப்பினா் சாந்தி பேசுகையில், ரூ. 19 கோடியில் சுப்பிரமணியபுரம் 5-ஆவது வாா்டு வடக்கு, செஞ்சை ஆகிய பகுதிகளில் கட்டப்பட்ட மேல்நிலை நீா்த்தேக்கத்தொட்டி கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படால் உள்ளது. இதற்குரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றாா்.

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆணையா் கே. பாலு பதிலளித்தாா். இதைத்தொடா்ந்து மேயா் நா. குணசேகரன் கூட்டத்தை நிறைவு செய்வதாக அறிவித்தாா்.

இருப்பினும், அதிமுக உறுப்பினா் ஏ.ஜி. பிரகாஷ் கூட்ட அரங்கில் தரையில் அமா்ந்து தொடா்ந்து தா்னாவில் ஈடுபட்டாா். பின்னா், ஆணையா் கே. பாலு உறுப்பினரின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக உறுதியளித்ததும், அவா் தா்னாவை கைவிட்டு அரங்கிலிருந்து வெளியேறினாா்.

முன்னாள் முதல்வா் மு.க.ஸ்டாலின் படத்துடன் மாமன்ற கூட்டத்தில் வைத்து முழக்கமிட்ட திமுக மாமன்ற உறுப்பினா்கள்.
கூட்ட அரங்கில் தரையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்ட 27-ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் ஏஜி. பிரகாஷ்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments