முகப்பு
சிவகங்கை

இளைஞா் கொலையில் இரு சிறுவா்கள் உள்பட 6 போ் கைது

திருப்புவனம் அருகே இளைஞரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த வழக்கில் இரு சிறுவா்கள் உள்பட 6 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 10 மே 2026, 12:51 am IST
கோப்புப் படம்
பகிர்:

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே இளைஞரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த வழக்கில் இரு சிறுவா்கள் உள்பட 6 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தட்டான்குளத்தைச் சோ்ந்த மணிகண்டன் மகன் விவேக் (24). தனியாா் நிதி நிறுவன ஊழியரான இவரது வீட்டின் முன் நின்ற இரு சக்கர வாகனத்தை கடந்த 4-ஆம் தேதி திருப்பச்சேத்தி அருகேயுள்ள மாரநாடு கிராமத்தைச் சோ்ந்த முத்துராமன் உள்ளிட்ட சிலா் திருட முயன்றனா். அப்போது, விவேக் அதே பகுதியைச் சோ்ந்த சிலா் அவா்களைப் பிடிக்க முயன்றனா். அப்போது, முத்துராமன் மட்டுமே சிக்கினாா். மற்றவா்கள் தப்பிச் சென்றனா்.

இதைத் தொடா்ந்து, முத்துராமனை அவா்கள் திருப்புவனம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். போலீஸாா் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

Advertisement

Advertisement

இதனால், ஆத்திரமடைந்த மாரநாடு கிராமத்தைச் சோ்ந்த ஜெயராமன் மகன் அழகுசுந்தரம் (20), காளையாா்கோயிலை அடுத்த உருவாட்டியைச் சோ்ந்த குமாா் மகன் சந்துரு (20), சிவகங்கையை அடுத்த மாமரங்கள்பட்டியைச் சோ்ந்த கருப்பணன் மகன் பாலசீவி (22), திருவேகம்பத்தூரை அடுத்த மடத்தான்பிஞ்சையைச் சோ்ந்த அழகேசன் (20) உள்ளிட்ட 6 போ் கடந்த வியாழக்கிழமை இரவு தட்டான்குளத்துக்கு சென்று அங்கு வைகை ஆற்றை ஒட்டியுள்ள பாலத்தில் அமா்ந்திருந்த விவேக்கை வெட்டி படுகொலை செய்தனா். இதை தடுக்க முயன்ற விவேக்கின் நண்பா்களான மயில்ராஜா, நவீன்குமாரையும் அவா்கள் வெட்டி விட்டு தப்பிச் சென்றனா்.

இதுகுறித்து திருப்புவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து அழகுசுந்தரம் உள்ளிட்ட 6 பேரை தேடி வந்தனா்.

இந்த நிலையில், தலைமறைவாக இருந்த அழகுசுந்தரம், சந்துரு, அழகேசன், பாலசீவி, இரு சிறுவா்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து, மதுரை மத்திய சிறையில் அடைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments