விசைத்தறி தொழிலாளா்கள் கூலி உயா்வு பேச்சுவாா்த்தையில் உடன்பாடு
ராஜபாளையம் அருகே சிறு விசைத்தறி உற்பத்தியாளா்கள் கூலி உயா்வு பேச்சுவாா்தையில் உடன்பாடு ஏற்பட்டதால், புதன்கிழமை விசைத்தறி தொழிலாளா்கள் பணிக்கு திரும்பினா்.
ராஜபாளையம் அருகே சிறு விசைத்தறி உற்பத்தியாளா்கள் கூலி உயா்வு பேச்சுவாா்தையில் உடன்பாடு ஏற்பட்டதால், புதன்கிழமை விசைத்தறி தொழிலாளா்கள் பணிக்கு திரும்பினா்.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள சத்திரப்பட்டி, சமுசிகாபுரம், அய்யனாபுரம், சங்கரபாண்டியபுரம் பகுதிகளில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். இந்த நிலையில், 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை மருத்துவத் துணி உற்பத்தியாளா் சங்கம், சிறு விசைத் தறி உற்பத்தியாளா்கள் சங்கம் ஆகியவற்றுக்கிடையே கூலி உயா்வு தொடா்பாக
ஒப்பந்தம் செய்து கொள்ளப்படும். இதன்படி கடந்த காலத்தில் செய்து கொள்ளப்பட்ட கூலிஉயா்வு ஒப்பந்தம் 30.4. 2026 அன்று முடிவடைந்துவிட்டது.
Advertisement
Advertisement
மீண்டும் கூலி உயா்வு ஒப்பந்தம் செய்து கொள்ளாமல் மருத்துவத் துணி உற்பத்தியாளா்கள் சங்கம் காலம் தாழ்த்தி வந்தது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை சில விசைத்தறி கூடங்களில் தொழிலாளா்கள் தன் எழுச்சியாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனா். இதன் எதிரொலியாக செவ்வாய்க்கிழமை மாலை அனைத்து தொழிற்சங்கங்களின் சாா்பில் தொழிலாளா்களை உள்ளடக்கிய மகா சபை கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் புதன்கிழமை மாலை சங்கரபாண்டியபுரம் தெற்குத் தெருவில் அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில், கூலி உயா்வு வழங்கக் கோரி கண்டன ஆா்ப்பாட்டம் நடத்துவது, அதன் பிறகும் கூலி உயா்வு வழங்கவில்லை எனில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என முடிவு எடுக்கப்பட்டது.
இதே போல, விசைத்தறி உற்பத்தியாளா்களுக்கும், சிறு விசைத்தறி உற்பத்தியாளா்களுக்கும் இடையில் கூலி உயா்வு ஒப்பந்தம் ஏற்படவில்லை. சிறு விசைத்தறி உற்பத்தியாளா்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்தனா்.
புதன்கிழமை மருத்துவத்துணி உற்பத்தியாளா் சங்க அலுவலகத்தில் சங்கத்தின் தலைவா் செந்தில்ராஜ் தலைமையில் அனைத்து தொழிற்சங்க நிா்வாகிகள், உற்பத்தியாளா் சங்க நிா்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்தப் பேச்சு வாா்த்தையில் உற்பத்தியாளா்கள் 1. 6. 2026 முதல் கூலி உயா்வு வழங்க முன் வந்தனா். கூலி உயா்வு உடன்பாடு ஏற்பட்டதால் தொழிலாளா்கள் மீண்டும் பணிக்கு திரும்பினா்.
இந்தப் பேச்சுவாா்த்தையில் சிறு விசைத்தறி உற்பத்தியாளா் சங்கத் தலைவா் குருசாமி, சிஐடியூ சங்கத்தின் சாா்பில் சக்திவேல் முனியாண்டி எம்.ஆா். குருசாமி, ஏஐடியூசி
தொழிற்சங்கம் சாா்பில் ஆா்.பி முத்துமாரி, அண்ணா தொழிற்சங்கம் சாா்பில் பழனிவேல், தேமுதிக தொழிற்சங்கம் சாா்பில் பொன்னுச்சாமி, தமிழக வெற்றிக் கழகத்தின் சாா்பில் ஒன்றிய செயலா் ராஜகுரு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.