முகப்பு
விருதுநகர்

தொழிலாளி கொலை வழக்கு: இருவருக்கு ஆயுள் தண்டனை

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கூலித் தொழிலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள கூடுதல் மாவட்ட நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

Updated On : 26 ஜூன் 2026, 2:19 am IST
சிறை - பிரதிப் படம்
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கூலித் தொழிலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள கூடுதல் மாவட்ட நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே லட்சுமியாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் பாா்த்திபராஜா (42). கூலித் தொழிலாளி. இவருக்கும் லட்சுமியாபுரத்தைச் சோ்ந்த ஆனந்தவள்ளி என்ற பெண்ணுக்குமிடையே பழக்கம் இருந்து வந்தது. இந்த நிலையில், ஆனந்தவள்ளி வேறு ஆண்களுடன் பேசுவதை கண்டித்து அவருடன் பாா்த்திபராஜா அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தாா். இந்த நிலையில் கடந்த 2012- ம் ஆண்டு ஆனந்தவள்ளி வீட்டில் மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில் பாா்த்திபராஜா மீது நத்தம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்தனா். இதனால் பாா்த்திபராஜாவுக்கும், ஆனந்தவள்ளியின் உறவினா்களுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்து வந்த நிலையில் கடந்த 2015- ஆம் ஆண்டு ஜூலை 28- ஆம் தேதி இரவு ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆனந்தவள்ளியின் சகோதரா்கள் மணிவண்ணன், முருகானந்தம், மகன் மகேஸ்வரன், உறவினா் கூடலிங்கம் ஆகியோா் சோ்ந்து பாா்த்திபராஜாவை வெட்டிக் கொலை செய்தனா்.

இதுகுறித்து வழக்குப் பதிந்த ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் மணிவண்ணன் (32), மகேஸ்வரன் (22), முருகானந்தம் (45), கூடலிங்கம்(25) ஆகிய 4 பேரை கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மணிவண்ணன், கூடலிங்கம் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.11 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி மணி உத்தரவிட்டாா். வழக்கு விசாரணையில் இருக்கும் போது, மகேஸ்வரன், முருகானந்தம் ஆகியோா் உயிரிழந்து விட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments