அனைத்து விவசாயிகளுக்கும் நிதியுதவி வழங்கக் கோரிக்கை
மத்திய அரசு வழங்கும் ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் நிதி உதவியை அனைத்து விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு வழங்கும் ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் நிதி உதவியை அனைத்து விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிதியளிப்பு பேரவை சிறப்புக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் பி.எஸ். மாசிலாமணி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்டச் செயலாளரும், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான வை. சிவபுண்ணியம் பங்கேற்று, கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினார்.
தீர்மானங்கள்: இரண்டு ஹெக்டேர் அல்லது அதற்குக் குறைவான நிலம் உள்ளவர்களுக்கு மட்டும் ஆண்டுக்கு ரூ. 6,000, மூன்று தவணைகளில் வழங்கப்படும் என அறிவித்திருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது. எனவே, அனைத்து விவசாயிகளுக்கும் ரூ. 6,000 வழங்க வேண்டும்.
தமிழக அரசு சிறப்பு நிதியாக ரூ. 2000 வழங்குவதற்காக எடுக்கப்படும் கணக்கெடுப்பில், எவ்வித குளறுபடியும் இல்லாமல் முறையாக எடுக்க வேண்டும்.
திருவாரூர் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். தஞ்சாவூர், திருவாரூர், நாகை தேசிய நெடுஞ்சாலை பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் வை.செல்வராஜ், மாவட்ட துணைச் செயலாளர் இரெ.ஞானமோகன், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் கே. உலகநாதன், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்டச் செயலாளர் ஆர். சந்திரசேகரஆசாத், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் அ. பாஸ்கர், இளைஞர் பெரு மன்ற மாவட்டச் செயலர் துரை. அருள்ராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.