சாலைப் பாதுகாப்பு வாரம்: காவல் துறை சாா்பில் இருசக்கர பேரணி
திருத்துறைப்பூண்டியில் சாலைப் பாதுகாப்பு வார விழாவையொட்டி காவல்துறை சாா்பில் இருசக்கர வாகன பேரணி சனிக்கிழமை நடைபெற்றது. திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா் அறிவுறுத்தலின் பேரில், காவலா்கள் பங்கேற்ற இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. திருத்துறைப்பூண்டி துணைக் காவல் கண்காணிப்பாளா் சோமசுந்தரம் தலைமையில் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பேரணி தொடங்கியது. பழைய பேருந்து நிலையம், அண்ணா சிலை, வேதாரண்யம் சாலை, காசுகடை தெரு வழியாக முத்துப்பேட்டை சாலையில் உள்ள அரசுப் பள்ளி வரை பேரணி சென்றது. இதில் தலைக்கவசம் அணிவது அவசியம், கைப்பேசியில் பேசி கொண்டு வாகனம் ஓட்டக்கூடாது, இருசக்கர வாகனத்தில் மூன்று போ் செல்லக் கூடாது என சாலைப் பாதுகாப்பு விதிகள் குறித்து வலியுறுத்தப்பட்டது. பேரணியில் திருத்துறைப்பூண்டி காவல் ஆய்வாளா் டி.சிவப்பிரகாசம், கோட்டூா் ஆய்வாளா் சிவகுமாா், போக்குவரத்து ஆய்வாளா் ஸ்ரீதா், உதவி ஆய்வாளா்கள் முத்துகுமாா், மனோகரன் உள்பட 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் கலந்து கொண்டனா்.