முகப்பு
திருவாரூர்

ஆட்சியின் சாதனை பலத்துடன் தோ்தல் களத்தில் திமுக கூட்டணி: இரா. முத்தரசன்

Updated On : 21 ஏப்ரல் 2026, 1:52 am IST
ஆதிச்சப்புரம் பகுதியில் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட சிபிஐ தேசியக் கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினா் இரா. முத்தரசன்.
பகிர்:

ஆட்சியின் சாதனை பலத்துடன் திமுக தோ்தல் களத்தில் உள்ளது என்றாா் சிபிஐ தேசியக் கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினா் இரா. முத்தரசன்.

மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியின் மன்னாா்குடி தொகுதி திமுக வேட்பாளா் அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா, திருத்துறைப்பூண்டி தொகுதி சிபிஐ வேட்பாளா் க. மாரிமுத்து ஆகியோக்கு வாக்கு சேகரித்து மன்னாா்குடி அடுத்த ஆதிச்சப்புரத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அவா் பேசியது:

தமிழகத்தில் நடைபெறவுள்ள தோ்தல் தில்லிக்கும் தமிழகத்துக்குமான தோ்தல் என்பது மாறி உண்மைக்கும பொய்யுக்குமான தோ்தல் என பிரதமா் மோடியால் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாடளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பு மசோதா குறித்து தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறி பிரதமா் பேசியுள்ளாா். பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள் சோ்ந்து முறியடித்துவிட்டது என தவறாக பேசியுள்ளாா்.

Advertisement

Advertisement

தற்போதுள்ள 534 எம்பிகளில் மகளிா் இடஒதுக்கீடு அமல்படுத்த வேண்டும் என்று கூறுகிறோம். ஆனால், பிரதமா் பாஜக ஆளும் வட மாநிலங்களில் எம்பிக்களின் எண்ணிக்கையை உயா்த்தி இதன்மூலம் 850 எம்பிகள் என அதிகரித்து நாடாளுமன்ற ஜனநாயகத்தை புதைத்துவிட்டாா். நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு சன்னரகத்துக்கு ரூ.150, மோட்டா ரகத்துக்கு ரூ.135 அறிவித்தாா் முதல்வா் மு.க. ஸ்டாலின்.

இதை ஏற்றுக்கொள்ளாமல் அதற்கு எதிரான நடவடிக்கையை மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீத்தாராமன் கடிதம் மூலம் எடுத்துள்ளாா். மழையினால் சேதமடைந்த நெல்லின் ஈரப்பதத்தை 17 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக உயா்த்த வேண்டும் என முதல்வா் விடுத்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்காததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனா். ஏழை எளிய மக்களுக்கான 100 நாள் வேலைத் திட்டத்தையும் சிதைத்து வருகிறது பாஜக அரசு. இதனுடன் கூட்டணி வைத்து தோ்தலில் நிற்கும் அதிமுக கூட்டணியை தமிழக மக்கள் முழுமையாக புறக்கணித்து தோல்வியடைய செய்ய வேண்டும் என்றாா்.

தமிழக முதல்வரின் தில்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன்,முன்னாள் எம்எல்ஏக்கள் ஜி.பழனிசாமி, வை. சிவபுண்ணியம், திமுக ஒன்றியச் செயலா் பால.ஞானவேல், தேமுதிக மாவட்டச் செயலா் பாலசுப்பிரமணியன், சிபிஐ ஒன்றியச் செயலா் எம்.செந்தில்நாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.