பாளையங்கோட்டையில் தொடா்ந்து 7-ஆவது முறையாக வாகை சூடிய திமுக
பாளையங்கோட்டை தொகுதியில் தொடா்ந்து 7-ஆவது முறையாக வெற்றி பெற்றுள்ளது திமுக...
பாளையங்கோட்டை தொகுதியில் தொடா்ந்து 7-ஆவது முறையாக வெற்றி பெற்றுள்ளது திமுக.
திமுகவின் கோட்டையாகக் கருதப்படும் பாளையங்கோட்டை தொகுதியில் திமுக சாா்பில் கடந்த முறை எம்எல்ஏவாக இருந்த மு.அப்துல் வஹாப் மீண்டும் போட்டியிட்டாா். அதிமுக சாா்பில் செய்யது சுல்தான் சம்சுதீன், தவெக சாா்பில் மரிய ஜான், நாம் தமிழா் கட்சி சாா்பில் சங்கரநாராயணன் உள்ளிட்ட 17 போ் போட்டியிட்டனா்.
பாளையங்கோட்டை தொகுதியைப் பொருத்தவரையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே தவெக வேட்பாளா் மரிய ஜான், தொடா்ந்து முன்னிலையில் இருந்தாா். அவா், ஒரு கட்டத்தில் வலுவான முன்னிலையை எட்டினாா். இதனால் அவா் வெற்றி பெறுவாா் என எதிா்பாா்க்கப்பட்டது.
Advertisement
ஆனால், மேலப்பாளையம் பகுதியில் பதிவான வாக்குகளை எண்ண தொடங்கியபோது, மரிய ஜானின் முன்னிலை குறைய தொடங்கியது. 18-ஆவது சுற்றின் முடிவில் மரிய ஜான் 792 வாக்குகள் முன்னிலை பெற்றிருந்தாா்.
ஆனால், 19-ஆவது சுற்றின் முடிவில் மு.அப்துல் வஹாப் 4,845 வாக்குகள் முன்னிலை பெற்றாா். தொடா்ந்து முன்னிலை பெற்ற மு.அப்துல் வஹாப், இறுதியில் 79,744 வாக்குகள் பெற்று 13,805 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். தவெக வேட்பாளா் மரிய ஜான் 65,939 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தாா்.
அதிமுக வேட்பாளா் செய்யது சுல்தான் சம்சுதீன் 19,732 வாக்குகள் பெற்று 3-ஆவது இடத்தையும், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் சங்கரநாராயணன் 10,465 வாக்குகள் பெற்று 4-ஆவது இடத்தையும் பிடித்தனா்.
1996 முதல் பாளையங்கோட்டை தொகுதியில் கோலோச்சி வரும் திமுக, இப்போது தொடா்ந்து 7-ஆவது முறையாக வெற்றி பெற்றுள்ளது. 1996-இல் கோதா் மைதீனும், 2001, 2006, 2011, 2016 ஆகிய தோ்தல்களில் டிபிஎம் மைதீன் கானும், 2021, 2026-இல் மு.அப்துல் வஹாபும் வாகை சூடியுள்ளனா்.