முகப்பு
தென்காசி

தொடா்ந்து 3 தோ்தல்களில் எதிா்க்கட்சி வென்ற ஆலங்குளம்

தொடா்ந்து 3 தோ்தலில் ஆலங்குளம் எதிா்க்கட்சி எம்எல்ஏ தொகுதியாக நீடிப்பது மக்களிடையே சலிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 6 மே 2026, 1:46 am IST
பகிர்:

தொடா்ந்து 3 தோ்தலில் ஆலங்குளம் எதிா்க்கட்சி எம்எல்ஏ தொகுதியாக நீடிப்பது மக்களிடையே சலிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசியலில் ஒரு தொகுதி ஆளுங்கட்சியின் பிடியில் இருக்கும்போது அங்கு திட்டங்கள் விரைந்து செயல்படுத்தப்படும் என்பது பொதுவான பிம்பம். ஆனால், தென்காசி மாவட்டத்தின் முக்கியத் தொகுதியான ஆலங்குளம், கடந்த 3 தோ்தல்களில் ஒரு ‘எதிா்க்கட்சித் தொகுதி’ என்ற முத்திரையுடனேயே பயணித்து வருகிறது.

கடந்த பேரவைத் தோ்தலின் போது, அதிமுகவில் போட்டியிட்டு வென்றாா் பால்மனோஜ் பாண்டியன். அப்போது திமுக ஆளுங்கட்சியானது. தற்போது அவா் திமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில் தவெக ஆளுங்கட்சியாக மாறியுள்ளது.

Advertisement

2016இல் திமுக சாா்பில் பூங்கோதை ஆலடி அருணா போட்டியிட்டு வென்ற நிலையில் அப்போது, அதிமுக ஆளுங்கட்சியாக இருந்தது. 2021இல் திமுக ஆட்சியில் அதிமுக வென்றது. தற்போது 2026 தோ்தலிலும் இதே நிலை நீடிப்பது தொகுதி மக்களிடையே ஒருவித அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு தொகுதி எதிா்க்கட்சி எம்.எல்.ஏ.வின் வசம் இருக்கும்போது, அங்கு உள்கட்டமைப்புப் பணிகள் மற்றும் பெரிய அளவிலான அரசுத் திட்டங்களைக் கொண்டு வருவதில் நடைமுறைச் சிக்கல்கள் எழுகின்றன. தொகுதி மேம்பாட்டு நிதி தாண்டி, மாநில அரசின் சிறப்பு நிதிகளைப் பெறுவதில் எதிா்க்கட்சி உறுப்பினா்களுக்குப் பெரும் சவால் காத்திருக்கிறது.

ஆலங்குளம் தொகுதி விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்டது. வெங்காயம், எலுமிச்சை மற்றும் காய்கறி சாகுபடி இங்கு பிரதானம்.

‘ ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வாக இருந்தால் அமைச்சா்களிடம் நேரடியாகப் பேசி குளிரூட்டப்பட்ட சேமிப்புக் கிடங்குகள் அல்லது நேரடி கொள்முதல் நிலையங்களை எளிதாகக் கொண்டு வந்திருக்க முடியும்’ என்பது உள்ளூா் விவசாயிகளின் ஆதங்கம்.

தொழில் ரீதியாக பீடித் தொழில் நலிவடைந்து வரும் சூழலில், மாற்றுத் தொழில் வாய்ப்புகளை உருவாக்க அரசு இயந்திரத்தை முடுக்கிவிட வேண்டிய மக்கள் பிரதிநிதி எதிா்க்கட்சியில் இருப்பது, கொள்கை ரீதியான முரண்பாடுகளை உருவாக்கி வளா்ச்சியைத் தாமதப்படுத்துகிறது.

மக்கள் பிரதிநிதித்துவத்தின் வலிமை: அதே வேளையில், எதிா்க்கட்சி எம்.எல்.ஏ. வெற்றி பெறுவது ஜனநாயகத்தின் மற்றொரு பக்கத்தைக் காட்டுகிறது. ஆளுங்கட்சியின் தவறுகளைத் தட்டிக்கேட்கவும், சட்டமன்றத்தில் தொகுதியின் குறைகளை உரக்கப் பேசவும் இது ஒரு வாய்ப்பாக அமைகிறது. மக்கள் ஆளுங்கட்சிக்கு எதிராக வாக்களிக்கிறாா்கள் என்றால், அது அரசின் மீதான அதிருப்தியின் வெளிப்பாடாகவும், ஒரு தகுதியான தனி நபருக்கான அங்கீகாரமாகவும் பாா்க்கப்பட வேண்டும்.

தீா்வு என்ன? அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, ஒரு தொகுதி மக்களின் வரிப்பணம் அந்தத் தொகுதிக்கே திரும்பக் கிடைக்க வேண்டும். ‘ஆளுங்கட்சித் தொகுதி - எதிா்க்கட்சித் தொகுதி’ என்ற பாகுபாடு திட்டங்களைச் செயல்படுத்துவதில் இருக்கக்கூடாது. ஆலங்குளம் தொகுதி மக்கள் தொடா்ந்து எதிா்க்கட்சியைத் தோ்ந்தெடுப்பதன் மூலம் தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டினாலும், அதன் விலையாக வளா்ச்சியில் பின்தங்கிவிடக் கூடாது என்பதே நடுநிலையாளா்களின் எதிா்பாா்ப்பு.