முகப்பு
திருநெல்வேலி

ஹிந்து ஆலயங்கள் வாரியம் அமைக்க வேண்டும்: விஸ்வ ஹிந்து பரிஷத் வலியுறுத்தல்

தமிழகத்தில் கோயில்களில் இருந்து அரசு வெளியேற வேண்டும்; ஹிந்து ஆலயங்கள் வாரியம் அமைக்க வேண்டும் என விஸ்வ ஹிந்து பரிஷத் கோரிக்கை விடுத்துள்ளது.

Updated On : 5 நவம்பர் 2018, 7:51 am IST
பகிர்:

தமிழகத்தில் கோயில்களில் இருந்து அரசு வெளியேற வேண்டும்; ஹிந்து ஆலயங்கள் வாரியம் அமைக்க வேண்டும் என விஸ்வ ஹிந்து பரிஷத் கோரிக்கை விடுத்துள்ளது.
பாளையங்கோட்டையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் தென்னிந்திய அமைப்புச் செயலர் பி.எம். நாகராஜன் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியது: தாமிரவருணி மஹா புஷ்கரம் மிக சிறப்பாக நடைபெற ஒத்துழைத்த திருநெல்வேலி மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில் மஹா புஷ்கரத்தையொட்டி 12 நதிகளின் தீர்த்தங்களுடன் விழிப்புணர்வு ரதயாத்திரை நடத்தப்பட்டது.
தாமிரவருணி நதிக்கரையில் 147 தீர்த்தக் கட்டங்களிலும் அமைப்பின் சார்பில் அந்தந்த கிராம மக்களின் ஒத்துழைப்போடு கல்வெட்டு வைக்கப்படும். புஷ்கரம் விழாவுக்கு மாவட்ட நிர்வாகம், மாநில அரசு பெரிய அளவில் உதவி செய்யவில்லை. குறிப்பாக, இந்து சமய அறநிலையத் துறை தீர்த்தவாரி நடத்த அனுமதிக்கவில்லை. இது கண்டனத்துக்குரியது.
தாமிரவருணி நதி மாசுபடுவதை தடுக்க வேண்டும். இயற்கை விவசாயத்தை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி கிராம மக்களைச் சந்தித்து விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப் படும்.
தமிழகத்தில் ஹிந்து கோயில்களில் இருந்து அரசு நிர்வாகம் வெளியேற வேண்டும். ஆகம விதிகளில் அரசு தலையிடக் கூடாது. ஆகவே, இந்து அமைப்புகள், துறவிகள் நிர்வகிக்கும் வகையில் ஹிந்து ஆலயங்கள் வாரியம் அமைக்க வேண்டும்.
கோயில்களில் கட்டணத் தரிசன முறையை ரத்து செய்ய வேண்டும். ஆலயங்கள் வியாபார தலங்களாக மாறி வருகிறது. இந்த நிலையை மாற்ற வேண்டும். கோயில் சொத்துகளை முறையாக பராமரிக்க வேண்டும். அரசியல் தலையீடு இல்லாமல் நேர்மையான முறையில் கோயில் சொத்துகளை மீட்க வேண்டும். இல்லையெனில் விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் மாநில அளவில் மறியல் போராட்டம் நடத்தப்படும்.
ராமஜென்ம பூமி பிரச்னையில் நீதிமன்ற தீர்ப்பு தாமதம் ஆகிறது. டிச. 6 ஆம் தேதிக்கு முன்பாக தீர்ப்பு வழங்க வேண்டும். அயோத்தில் ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வர வேண்டும். ராமர் கோயில் கட்ட வேண்டும் என வலியுறுத்தி நாடு முழுவதும் அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும் மாநாடு, பொதுக்கூட்டம் நடத்தப்படும்; டிச. 19 முதல் 26 ஆம் தேதி வரை நாடு முழுவதும் அனைத்து கிராமங்களில் நாம ஜெபமும் நடத்தப்படும் என்றார் அவர்.
பேட்டியின்போது, அமைப்பின் மாநில அமைப்புச் செயலர் சேதுராமன், மாநில பொறுப்பாளர்கள் செல்லபாண்டி, காளியப்பன், பன்னீர்செல்வம், மாவட்ட பொறுப்பாளர்கள் முத்துக்குமார், ஆறுமுகக்கனி, பஜ்ரங்தள் அமைப்பின் நிர்வாகிகள் முத்துராமன், பாலவிக்னேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments