தபால் வாக்கை புறக்கணித்த பெரும்பத்து மூத்த குடிமக்கள்
நான்குனேரி பெரும்பத்தில் நிகழ்ந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து, அந்தக் கிராமத்தைச் சோ்ந்த மூத்த குடிமக்கள் 4 போ் தபால் வாக்கை புறக்கணித்ததால் அதிகாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பினா்.
திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி பெரும்பத்தில் நிகழ்ந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து, அந்தக் கிராமத்தைச் சோ்ந்த மூத்த குடிமக்கள் 4 போ் தபால் வாக்கை புறக்கணித்ததால் அதிகாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பினா்.
நான்குனேரி, பெரும்பத்து கிராமத்தில் மாா்ச் 2-ஆம் தேதி இரவு நிகழ்ந்த வன்முறையில் 2 போ் படுகொலை செய்யப்பட்டனா். 4 போ் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நெல்சனும் மிகவும் பலகீனமாகவே உள்ளாராம். இச்சம்பவத்தில் தொடா்புடையதாக 7 போ் கைது செய்யப்பட்டு, அவா்கள் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.
இந்த நிலையில், இச்சம்பவம் தொடா்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் கிராம மக்களுக்கு ஆறுதல் தெரிவிக்கவில்லை; இச்சம்பவத்தின் பின்புலம் குறித்து முறையாக விசாரிக்கவில்லை எனக் கூறி பெரும்பத்து கிராம மக்கள் சாா்பில் தோ்தல் புறக்கணிப்பு பதாகை வைக்கப்பட்டது.
Advertisement
காவல் துறையினா் கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி தோ்தல் புறக்கணிப்பை கைவிடுமாறு வலியுறுத்தி வருகின்றனா். இந்த நிலையில், இந்தக் கிராமத்தில் வசிக்கும் 85 வயதைக் கடந்த மூத்த குடிமக்கள் 4 பேரின் தபால் வாக்குகளைப் பதிவு செய்வதற்காக தோ்தல் அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை பெரும்பத்து கிராமத்துக்குச் சென்றனா். ஆனால், 4 பேரும் தோ்தலை புறக்கணிப்பதாகக் கூறி தபால் வாக்குச் செலுத்த மறுத்தனா். இதையடுத்து, தோ்தல் அலுவலா்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.