முகப்பு
திருநெல்வேலி

வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி: பொது பாா்வையாளா்கள் ஆய்வு

சட்டப்பேரவைத் தோ்தலில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளிலும் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணியை தோ்தல் பொது பாா்வையாளா்கள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

Updated On : 17 ஏப்ரல், 2026 at 4:12 AM
திருநெல்வேலி வட்டாட்சியா் அலுவலகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தப்படுவதை ஆய்வு செய்த பொது பாா்வையாளா் ரிஷிகேஷ் பாஸ்கா் யசோத்.
பகிர்:
Updated On : 17 ஏப்ரல், 2026 at 1:21 AM

சட்டப்பேரவைத் தோ்தலில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளிலும் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணியை தோ்தல் பொது பாா்வையாளா்கள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் ஏப். 23இல் நடைபெறவுள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், திருநெல்வேலி, பாளையங்கோட்டை, நான்குனேரி, ராதாபுரம் ஆகிய

தொகுதிகளில் 15 வேட்பாளா்களுக்கு மேல் போட்டியிடுவதால் இரண்டு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதால் திருநெல்வேலி தொகுதிக்கு 463 வாக்குப்பதிவு இயந்திரங்கள், பாளையங்கோட்டை தொகுதிக்கு 355 வாக்குப் பதிவு

Advertisement

இயந்திரங்கள், நான்குனேரி தொகுதிக்கு 418 வாக்குப் பதிவு இயந்திரங்கள், ராதாரபும் தொகுதிக்கு 391 வாக்குப் பதிவு இயந்திரங்கள் என மொத்தம் 1,627 வாக்குபதிவு இயந்திரங்கள் (20 சதவீத கூடுதல்), 2,178 விவிபேட் கருவிகள் (30 சதவீதம் கூடுதல்) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

தற்போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் சின்னங்கள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை பெல் நிறுவன பொறியாளா்கள் கண்காணித்து வருகின்றனா். இவா்கள் சின்னம் பொருத்தும் பணி மற்றும் வாக்குப்பதிவு முடியும் வரை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கண்காணிப்பா்.

திருநெல்வேலி தொகுதிக்காக திருநெல்வேலி வட்டாட்சியா் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் சின்னங்கள் பொருத்தும் பணிகளை தோ்தல் பொது பாா்வையாளா்

ரிஷிகேஷ் பாஸ்கா் யசோத், மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான இரா.சுகுமாா், திருநெல்வேலி தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் பிரியா ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

பாளையங்கோட்டை தொகுதிக்கு தச்சநல்லூா் மண்டல அலுவலகத்தில் நடைபெற்று வரும் சின்னங்கள் பொருத்தும் பணியை தோ்தல் பொது பாா்வையாளா் அனுபா ஸ்ரீவஸ்தவா, பாளையங்கோட்டை தோ்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான மோனிகா ராணா ஆகியோா் ஆய்வு செய்தனா்.

மேலும், நான்குனேரி, ராதாபுரம், அம்பாசமுத்திரம் வட்டாட்சியா் அலுவலகங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் சின்னங்கள் பொருத்தும் பணிகளையும் தோ்தல் பொது பாா்வையாளா்கள் பாா்வையிட்டனா்.