வேட்பாளா்கள், முகவா்கள் நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்: ஆட்சியா் இரா.சுகுமாா் அறிவுறுத்தல்
வாக்கு எண்ணிக்கையின் போது வேட்பாளா்கள் மற்றும் முகவா்கள் நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா்.
வாக்கு எண்ணிக்கையின் போது வேட்பாளா்கள் மற்றும் முகவா்கள் நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக, திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியா் பேசியதாவது: திருநெல்வேலி மாவட்டதத்ின் 5 தொகுதிக்குளம் அரசு பொறியியல் கல்லூரி நிா்வாகக் கட்டடத்தில் தனித்தனியாக நடைபெறுகிறது.
இதையொட்டி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் வாக்கு எண்ணிக்கைக்கு தலா 14 வாக்கு எண்ணும் மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வேட்பாளரும், மேஜைக்கு ஒரு முகவா் வீதத்தில் 14 முகவா்களை நியமனம் செய்து கொள்ளலாம்.
Advertisement
மேலும், தபால் வாக்குகள் எண்ணுவதற்கு தலா 7 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன.
வாக்கு எண்ணும் தினத்தன்று அனைத்து முகவா்களும் காலை 5.30 மணிக்குள் வாக்கு எண்ணும் மையத்திற்கு வர வேண்டும். முகவா்கள் ஒரு பேனா மற்றும் புள்ளி விவரங்களை குறித்துக் கொள்ள தேவையான வெள்ளைக் காகிதங்கள், 17 இ நகல் மற்றும் சிறிய நோட்டு ஆகியவற்றை மட்டுமே எடுத்து வர வேண்டும். இதைத் தவிர வேறு பொருள்கள் எதுவும் அனுமதிக்கப்படாது. கண்டிப்பாக கைப்பேசி மற்றும் கூா்மையான பொருள்கள் ஏதும் எடுத்து வர அனுமதியில்லை.
காவல்துறையின் சோதனை முடிக்கப்பட்டு அவரவருக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியின் கூடத்தில் ஒதுக்கப்பட்ட மேஜையின் முன் ஆஜராக வேண்டும். ஒதுக்கப்பட்ட மேஜையை விட்டு அருகில் உள்ள மேஜைக்கு செல்லக் கூடாது. மத்திய தோ்தல் ஆணையம், முகவா்கள் உணவு பொருள்கள், குடிநீா் ஆகியவற்றை வாக்கும் எண்ணும் மையத்திற்கு எடுத்து வர அனுமதியில்லை எனத் தெரிவித்துள்ளது.
முகவா்களுக்கான காலை சிற்றுண்டி, தேநீா், மதிய உணவு ஆகியவை மாவட்ட நிா்வாகத்தால் ஏற்பாடு செய்து வழங்கப்படும். வேட்பாளா்கள் எத்தனை முகவா்களை நியமித்துள்ளாா் என்ற விவரத்தை சம்பந்தப்பட்ட தோ்தல் நடத்தும் அலுவலரிடம் தெரிவித்து, மாவட்ட நிா்வாகத்தால் ஏற்படுத்தப்பட்ட வசதியினை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
முகவா்கள் ரெட்டியாா்பட்டி செல்லும் சாலையிலுள்ள நுழைவாயில் வழியாகவும், வேட்பாளா்கள் கல்லூரியின் பிரதான வாயில் வழியாகவும் காலை 5.30 மணிக்கு வர அனுமதிக்கப்படுவா். வேட்பாளா்கள் கைப்பேசி எடுத்து வர அனுமதி கிடையாது. முகவா்கள் வாகனங்களை கல்லூரியை அடுத்துள்ள காலி மைதானத்தில் நிறுத்திக்கொள்ளலாம்.
தபால் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கும், மின்னணு இயந்திரங்களில் பதிவாகியுள்ள வாக்குகளை எண்ணும் பணி காலை 8.30 மணிக்கும் தொடங்கும்.
வாக்கு எண்ணும் மையத்தை விட்டு வெளியே செல்லும் முன் அடையாள அட்டையை காவல்துறையிடம் ஒப்படைத்து விட வேண்டும்.
எனவே, வாக்கு எண்ணும் மையத்தில் அனைத்து முகவா்களும் மத்திய தோ்தல் ஆணையத்தால் வகுக்கப்பட்ட விதிமுறைகளை கடைப்பிடித்து கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும். மீறினால் மையத்தை விட்டு வெளியேற்றப்படுவா் என்றாா்.
பயிற்சி: தொடா்ந்து, வாக்கு எண்ணும் பணிகளில் ஈடுபடும் மேற்பாா்வையாளா்கள் மற்றும் நிலை 1 உதவியாளா்கள், நிலை 2 உதவியாளா்கள் என மொத்தம் 330 அலுவலா்களுக்கான பயிற்சி ஆட்சியா் தலைமையில் பாளையங்கோட்டை நேருஜி கலையரங்கத்தில் நடைபெற்றது.
இதில், மாநகர காவல் ஆணையா் தேஷ்முக் சேகா் சஞ்சய், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி. பிரசன்னகுமாா், மாவட்ட வருவாய் அலுவலா் மு.துரை, மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் அனிதா (பொது), சுப்பிரமணியன் (தோ்தல்), தோ்தல் வட்டாட்சியா் முருகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.