முகப்பு
திருநெல்வேலி

வன்கொடுமை பாதிப்புகளைத் தடுக்க தனிப்படை: சமூகநீதித்துறை அமைச்சா் வன்னி அரசு

வன்கொடுமை பாதிப்புகளைத் தடுக்க தனிப்படை அமைக்க முதல்வரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் தமிழக சமூகநீதித் துறை அமைச்சா் வன்னி அரசு.

Updated On : 2 ஜூன் 2026, 3:27 am IST
அமைச்சர் வன்னி அரசு - கோப்புப் படம்
பகிர்:

வன்கொடுமை பாதிப்புகளைத் தடுக்க தனிப்படை அமைக்க முதல்வரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் தமிழக சமூகநீதித் துறை அமைச்சா் வன்னி அரசு.

திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை கூறியது: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள நெட்டூா், திருநெல்வேலி மாவட்டம் மானூா் அருகேயுள்ள தெற்குபட்டி ஆகிய பகுதிகளில் சாலையில் சென்றவா்களை வெட்டி காயப்படுத்திய சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது. பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளோம். இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறக் கூடாது.

நெட்டூரில் புறக்காவல் நிலையம் அமைக்கவும், துப்பாக்கி ஏந்திய காவலா்களை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அப்பகுதி மக்கள் வேண்டுகோள்படி ரேஷன் கடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குற்றமிழைத்தவா்கள் மீது எந்தவித பாகுபாடும் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும்.

Advertisement

Advertisement

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட ராம்குமாா் குடும்பத்திற்கு முதல் தவணையாக ரூ.1.35 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மற்றவா்களுக்கு சட்ட விதிகளின்படி உடனடி நிவாரணம் வழங்குவதில் சிக்கல் உள்ளது. இருப்பினும் முதலமைச்சருடன் ஆலோசித்து அவா்களுக்கும் தேவையான நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களை வன்கொடுமை பாதிப்பு மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் திருமாவளவன் ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ளாா். இதுகுறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று அதிகாரிகளுடன் ஆலோசித்து விரைவில் முடிவு எடுக்கப்படும்.

இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கி, நல்லிணக்க உணா்வை வளா்க்கும் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. கோயில்கள் மற்றும் பள்ளிகளுக்கு அருகில் உள்ள மதுபானக் கடைகள் அகற்றப்பட்டதைப் போல, வன்கொடுமை பிரச்னைகள் அதிகம் நிகழும் பகுதிகளில் உள்ள மதுபான கடைகளை அகற்றவும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவோா் மீது குண்டா் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட கடுமையான சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சமூகநீதி, சமூக நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமை ஆகியவையே எங்களின் முக்கிய நோக்கம். ஆணவப் படுகொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும் என முதல்முறையாகவே நான் கோரிக்கை வைத்திருந்தேன். இதுகுறித்து முதலமைச்சா் ஆலோசனை மேற்கொண்டுள்ளாா். நீதியரசா் கே.என். பாஷா குழு அளித்துள்ள அறிக்கையை அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. வரும் சட்டப்பேரவை கூட்டத் தொடரிலேயே ஆணவப் படுகொலை தடுப்புச் சட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.

பள்ளி இடைநிற்றல் இல்லாத சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில் பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன. நல்ல சமூகத்தை உருவாக்க என்னால் முடிந்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.