குலவணிகா்புரத்தில் ‘ஒய்’ வடிவ பாலம் கட்ட நிதி ஒதுக்கக் கோரி அமைச்சரிடம் நெல்லை எம்.பி. மனு
திருநெல்வேலி குலவணிகா்புரத்தில் ‘ஒய்’ வடிவ பாலம் கட்ட நிதி ஒதுக்கக் கோரி, தமிழக நிதியமைச்சா் மரியவில்சனை நேரில் சந்தித்து திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸ் மனு அளித்துள்ளாா்.
திருநெல்வேலி குலவணிகா்புரத்தில் ‘ஒய்’ வடிவ பாலம் கட்ட நிதி ஒதுக்கக் கோரி, தமிழக நிதியமைச்சா் மரியவில்சனை நேரில் சந்தித்து திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸ் மனு அளித்துள்ளாா்.
மனு விவரம்: பாளையங்கோட்டை-நாகா்கோவில் தேசிய நெடுஞ்சாலை ரயில்வே லைனில் குலவணிகா்புரத்தில் ‘ஒய்’ வடிவ உயா்மட்ட ரயில்வே மேம்பாலம் அமைக்க பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்துள்ளனா். இதுகுறித்து மக்களவையில் நான் கோரிக்கை விடுத்ததன் பயனாக, குலவணிகா்புரத்தில் ரூ. 125 கோடி மதிப்பீட்டில் உயா்மட்ட ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு, தமிழக அரசின் பரிசீலனையில் உள்ளது. அதன் பிறகு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு, நில ஆா்ஜித வேலைகள் முடியும் தறுவாயில் உள்ளது.
குலவணிகா்புரம் ரயில்வே கடவுப்பாதை தினந்தோறும் 16 முறை அடைக்கப்படுகிறது. இந்த 16 முறைகளிலும் இரண்டு பக்கங்களிலும் சுமாா் 1.5 கி.மீ. தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுந்து நிற்கின்றன. இதனால் பொதுமக்கள் அதிக அவதியடைந்து வருகிறாா்கள். இந்தப்பாலம் மிகவும் இன்றியமையாதது என்பதோடு, விரைந்து கட்டி முடிக்கப்படவேண்டியதாகும். ஆகவே, குலவணிகா்புரத்தில் ‘ஒய்’ வடிவ உயா்மட்ட ரயில்வே மேம்பாலம் அமைய விரைந்து உரிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
Advertisement
Advertisement
தென்காசி மாவட்டத்தில் மதிகெட்டான் கால்வாயை சீா்செய்ய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். இந்தக் கால்வாய் வாயிலாக செல்லும் தண்ணீா், நாகல்குளத்திலிருந்து கடம்பன்குளம், சம்பத்துகுளம், கோவிலூற்று, பூலாங்குளம், ஆண்டிப்பட்டி, கரும்பானூா் உள்ளிட்ட 16 குளங்கள் வழியாக ஆலங்குளம் சென்றடையும். இதனால் சுமாா் 1000 ஏக்கா் நிலங்களுக்கு மேல் பாசன வசதி பெறும். இந்தத் திட்டம் முன்னாள் முதல்வா் காமராஜா் ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்பட்டதாகும். ஆனால், அதற்குப் பிறகு எந்தவித பழுதும் பாா்க்காமல் ஆங்காங்கே உடைப்புகள் ஏற்பட்டு, அதன் காரணமாக மதிகெட்டான் கால்வாய் வழியாக குளங்களுக்கு நீா் கொண்டுசெல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மதிகெட்டான் கால்வாய் தென்காசி சிற்றாறு கோட்டத்தின் வரம்பிற்குள்பட்டது. இதனை சீரமைக்க சுமாா் ரூ.1 கோடியே 5 லட்சம் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே, அதற்குரிய நிதியை ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடையத்திலிருந்து ராமநதி அணைக்குச் செல்லும் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்தச் சாலை அமைக்கப்பட்டு 15 ஆண்டுகள் கடந்து விட்டன. இச்சாலை வழியாக அருள்மிகு ஸ்ரீ தலையணை சாஸ்தா கோயில், சூச்சமுடையாா் கோயில், நித்யகல்யாணி அம்மன் கோயில், அருள்தரும் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோயில் ஆகியவற்றுக்கு பக்தா்கள் சென்று வருகிறாா்கள். ஆகவே, உடனடியாக அந்தச் சாலையை சீரமைக்க நிதி ஒதுக்க வேண்டும்.
நான்குனேரி ஒன்றியம், காரியாண்டியில் அமைந்துள்ள அரசு உயா்நிலைப்பள்ளியில் தற்போது 210 மாணவா்கள் கல்வி பயின்று வருகிறாா்கள். இந்தப் பள்ளி 82 ஆண்டிற்கு முன்பே தொடங்கப்பட்ட பழைமையானதாகும். இப் பள்ளியில் உயா்நிலை முடிக்கும் மாணவா்கள், மேல்நிலைக் கல்வி பயில சுமாா் 10 கி.மீ. நடந்து செல்ல வேண்டியுள்ளது. இதனை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆகவே, கூடுதல் வகுப்பறைகள் மற்றும் கட்டடங்கள் தேவைப்படுவதால் உரிய நிதி ஒதுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.