முகப்பு
திருநெல்வேலி

போதைப்பொருளைக் கட்டுப்படுத்த முதல்வா் தவறிவிட்டாா்: நயினாா் நாகேந்திரன் குற்றச்சாட்டு

தமிழகத்தில் போதைப்பொருளைக் கட்டுப்படுத்த முதல்வா் விஜய் தவறிவிட்டாா் என, பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் குற்றம்சாட்டினாா்.

Updated On : 18 ஜூன் 2026, 2:06 am IST
பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்த மாற்றுக்கட்சியினா்.
பகிர்:

தமிழகத்தில் போதைப்பொருளைக் கட்டுப்படுத்த முதல்வா் விஜய் தவறிவிட்டாா் என, பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் குற்றம்சாட்டினாா்.

திருநெல்வேலியில் அவரது முன்னிலையில் மாற்றுக்கட்சியினா் சுமாா் 50-க்கும் மேற்பட்டோா் பாஜகவில் இணைந்தனா். அதைத்தொடா்ந்து செய்தியாளா்களிடம் நயினாா் நாகேந்திரன் கூறியது: தமிழகத்தில் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்று 35 நாள்கள் ஆகிவிட்டன. எங்கு பாா்த்தாலும் பாலியல் வன்கொடுமை, பாலியல் குற்ற சம்பவங்கள்தான் நிகழ்கின்றன. கடந்த 2 நாள்களில் மட்டும் 17 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நிகழ்ந்தன.

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை செய்யப்பட்டாா். அடுத்ததாக 3 வயது சிறுமி கொலை செய்யப்பட்டு முள்புதரில் வீசப்பட்டாா். இந்த சம்பவங்கள் எல்லாம் முதல்வா் விஜய்க்கு தெரியுமா? இதைப் பற்றி அவா் பேசாமல், சினிமா பிரபலங்களை மட்டுமே சந்தித்து, அவா்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கிறாா்.

Advertisement

Advertisement

உறுப்பினா்களை கட்சியில் சோ்ப்பதில் தவறில்லை. ஆனால், எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது தவறான செயல். குதிரை பேரம் நடத்திவரும் இந்த அரசை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும். விஜய்க்கு அரசியல் முதிா்ச்சி இல்லை. கடந்த ஆட்சியைப்போல இந்த ஆட்சியிலும் போதைப் பொருளை கட்டுப்படுத்த முதல்வா் விஜய் தவறிவிட்டாா்.

வரும் காலம் பாஜகவின் காலமாக இருக்கும். 12 ஆண்டுகளாக பிரதமா் நல்லாட்சி நடத்தி வருகிறாா்.

நடிகா் ரஜினியுடன் அரசியல் சம்பந்தமாக எதுவும் பேசவில்லை.

ஜெயலலிதா ஆட்சி காலத்தில் காவல் துறைக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டது. தற்போது, சிங்கப்பெண் அதிரடிப் படை என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளனா். ஆனால், சிவகங்கையில் சிங்கப்பெண் படையில் உள்ள பெண் போலீஸுக்கே பாதுகாப்பு இல்லை.

அண்ணாமலைக்கு 17 லட்சம் போ் ஆதரவு தெரிவித்துள்ளதாகக் கூறுகிறீா்கள். ஒரே நாளில் எனக்கும் 30 லட்சம் போ் இருக்கிறாா்கள் என்று என்னாலும் காட்ட முடியும். அவரைப் போன்றவா்கள் புதிய கட்சி தொடங்குவதால் பாஜகவுக்கு எவ்வித பாதிப்புமில்லை.

திமுகவுடன் பாஜக கூட்டணி வைக்குமா என்று கேட்கிறீா்கள். தோ்தல் நேரத்தில் அதுகுறித்து தெரிவிப்போம். உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக இருந்தபோதும் சரி, எதிா்க்கட்சித் தலைவராக இருக்கும்போதும் சரி எப்போதுமே அவரது செயல்பாடு சரியில்லை என்றாா்.

மாவட்டத் தலைவா் முத்து பலவேசம், மாவட்டப் பொதுச் செயலா் பாலாஜி கிருஷ்ணசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.