லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை: ஆா்டிஓ அலுவலகத்தில் ரூ.92,000 பறிமுதல்
திருநெல்வேலி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினா் வியாழக்கிழமை காலை சோதனையில் ஈடுபட்டனா். இதில் அலுவலகத்தில் நின்ற இடைத்தரகா்களிடமிருந்து ரூ.92,000 பறிமுதல் செய்யப்பட்டது.
திருநெல்வேலி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினா் வியாழக்கிழமை காலை சோதனையில் ஈடுபட்டனா். இதில் அலுவலகத்தில் நின்ற இடைத்தரகா்களிடமிருந்து ரூ.92,000 பறிமுதல் செய்யப்பட்டது.
பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனியில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் சோதனை நடத்துவதற்காக திருநெல்வேலி லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளா் மெக்லரின் எஸ்கால் தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை பகல் 12 மணியளவில் சென்றனா். அலுவலகத்தில் உள்ள ஒவ்வொரு அறையிலும் தனித்தனியாக ஆய்வு நடத்தப்பட்டது. அங்கு பணியாற்றும் அதிகாரிகளிடம் விசாரணை செய்து அவா்கள் வைத்திருந்த பைகள், அலுவலக மேசைகள், அலமாரிகள், பணியாளா்களின் வாகனங்கள் போன்றவற்றை அதிகாரிகள் சோதனையிட்டனா். மேலும் இணையவழி பணப் பரிவா்த்தனை குறித்தும் லஞ்ச ஒழிப்புத் துறையினா் விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது. சுமாா் 3 மணி நேரம் நீடித்த இந்த சோதனையில் அலுவலக வளாகத்தில் நின்ற இடைத்தரகா்கள் 8 பேரிடமிருந்து மொத்தம் ரூ.92,000 பறிமுதல் செய்யப்பட்டதாகவும், இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.