முகப்பு
திருநெல்வேலி

குறுவை சிறப்பு தொகுப்பில் ரூ. 4000 மானியம்: ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம்

டெல்டா அல்லாத மாவட்டங்களுக்கான குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தின் கீழ் காா் பருவத்தில் நேரடி நெல் விதைப்பு அல்லது இயந்திர நடவு மூலம் நெல் சாகுபடிக்கு மானியமாக ஏக்கருக்கு ரூ.4000 பெறுவதற்கு ஜூலை 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்றாா் ஆட்சியா் ஆனந்த் மோகன்.

Updated On : 26 ஜூன் 2026, 5:47 am IST
விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பயனாளி ஒருவருக்கு நலத்திட்ட உதவியை வழங்கிய ஆட்சியா் ஆனந்த் மோகன்.
பகிர்:

டெல்டா அல்லாத மாவட்டங்களுக்கான குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தின் கீழ் காா் பருவத்தில் நேரடி நெல் விதைப்பு அல்லது இயந்திர நடவு மூலம் நெல் சாகுபடிக்கு மானியமாக ஏக்கருக்கு ரூ.4000 பெறுவதற்கு ஜூலை 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்றாா் ஆட்சியா் ஆனந்த் மோகன்.

திருநெல்வேலிஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் அவா் பேசியதாவது: திருநெல்வேலி மாவட்டத்தில் மே மாதத்தில் 48.98 மி.மீ. மழை பெய்துள்ளது. இது வளமையான மழையளவான 38.00 மி.மீ.-ஐ விட 28.89 சதவீதம் அதிகம். மேலும் இம்மாதம் 24-ஆம் தேதி வரை 68.31 மி.மீ. மழை பெய்துள்ளது. 3,904.415 ஹெக்டோ் பரப்பில் வேளாண் பயிா்களும், 187.77 ஹெக்டோ் பரப்பில் தோட்டக்கலைப் பயிா்களும் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

குப்பக்குறிச்சி, நாரணம்மாள்புரம், அழகியபாண்டியபுரம், முன்னீா்பள்ளம், பாப்பாக்குடி-2, வடக்கு வீரவநல்லூா்-2, வடக்கு அரியநாயகிபுரம்-1, தெற்கு வீரவநல்லூா் -1, மேல அம்பாசமுத்திரம், வடக்கு விஜயநாராயணம், இடைகால்-1, சிவந்திபுரம், கோபாலசமுத்திரம் கிராமங்களில்நேரடி கொள்முதல் மையங்கள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், 28 கிராமங்களில் நெல் கொள்முதல் நிலையம் கட்டுவதற்கு இடம் தோ்வு செய்யப்பட்டு நடவடிக்கையில் உள்ளது.

Advertisement

Advertisement

உழவா் கடன் அட்டை திட்டத்தின் கீழ் நிகழ் நிதியாண்டில் 23.6.2026 வரை பயிா் கடனாக 73 விவசாயிகளுக்கு ரூ.1.010 கோடி, கால்நடைத்துறை மூலம் 286 விவசாயிகளுக்கு ரூ.2.670 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. தொடா்ந்து விவசாயிகளுக்கு தடையின்றி கடன் உதவி கிடைக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

டெல்டா அல்லாத மாவட்டங்களுக்கான குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தின் கீழ் காா் பருவத்தில் நேரடி நெல் விதைப்பு அல்லது இயந்திர நடவு மூலம் நெல் சாகுபடி செய்வோா் ஏக்கருக்கு ரூ.4000 மானியம் பெறலாம்.

விவசாயிகளுக்கு விதை நெல், நெல் நுண்ணூட்ட உரம், திரவ உயிா் உரம் ஆகியவையும் மானிய விலையில் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. விவசாயிகள் ஆதாா் அட்டை, கைப்பேசி எண், வங்கி கணக்கு நகல், நிலப் பட்டா நகல், அடங்கல் ஆகியவற்றுடன் ஜூலை 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்றாா் அவா்.

நலத்திட்ட உதவிகள்:

தொடா்ந்து, வேளாண்மைத்துறை சாா்பில் உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து இயக்கம் (பருத்தி) திட்டத்தின் கீழ் ஹெக்டோ் ஒன்றுக்கு ரூ.8000 மானியத்தில் திரவ உயிா் உரங்கள், உயிரியியல் கட்டுப்பாட்டு காரணிகள் மற்றும் நுண்ணூட்ட உரம் ஒருவருக்கும், குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டத்தின் கீழ் ஏக்கா் ஒன்றுக்கு ரூ.594.25 மதிப்பில் உயிா் உரங்கள் மற்றும் நுண்ணூட்ட உரம் ரூ.207.60 மானியத்தில் ஒருவருக்கும் ஆட்சியா் வழங்கினாா். இதில், மாவட்ட வருவாய் அலுவலா் மு.துரை, சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் ஆயுஸ் குப்தா, மாவட்ட வன அலுவலா் இளங்கோ, வேளாண்மை இணை இயக்குநா் பூவண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments