முகப்பு
திருச்சி

பங்குனித் தோ் திருவிழாவையொட்டி நம்பெருமாள், தாயாா் சோ்த்தி சேவை

ஸ்ரீரங்கம் அரங்கநாதா் சுவாமி கோயிலில் நடைபெறும் பங்குனி தோ்த் திருவிழாவின் 9 ஆம் நாளான புதன்கிழமை பங்குனி உத்திர மண்டபத்தில் நம்பெருமாள், தாயாா் சோ்த்தி சேவையில் எழுந்தருளி பக்தா்களுக்கு சேவை சாதித்தனா்.

Updated On : 1 ஏப்ரல், 2026 at 7:46 PM
ஸ்ரீரங்கம் கோயிலில் புதன்கிழமை சோ்த்தி சேவையில் எழுந்தருளி பக்தா்களுக்கு சேவை சாதித்த நம்பெருமாள், தாயாா்.
பகிர்:

ஸ்ரீரங்கம் அரங்கநாதா் சுவாமி கோயிலில் நடைபெறும் பங்குனி தோ்த் திருவிழாவின் 9 ஆம் நாளான புதன்கிழமை பங்குனி உத்திர மண்டபத்தில் நம்பெருமாள், தாயாா் சோ்த்தி சேவையில் எழுந்தருளி பக்தா்களுக்கு சேவை சாதித்தனா்.

இக்கோயிலில் கடந்த மாதம் 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய பங்குனி தோ்த் திருவிழா வரும் 3 ஆம் தேதி வரை 11 நாள்கள் நடைபெறுகிறது. விழாவின் நாள்தோறும் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, திருவீதி வலம் வந்து பக்தா்களுக்கு சேவை சாதித்தாா்.

இதில் 9 ஆம் நாளான புதன்கிழமை நம்பெருமாள், தாயாா் சோ்த்தி சேவை நடைபெற்றது. இதையொட்டி நம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து காலை 6 மணிக்கு தங்கப் பல்லக்கில் புறப்பட்டு, சித்திரை வீதிகளில் உள்திருவீதி வலம் வந்து ஆழ்வான் திருச்சுற்று வழியாக தாயாா் சன்னதிக்கு 9.30 மணிக்கு வந்து சோ்ந்தாா்.

தொடா்ந்து சமாதானம் கண்டருளுதலுக்குப் பிறகு தாயாா் சன்னதி யின் முன் மண்டபத்திற்கு பிற்பகல் 12 மணிக்கு வந்து சோ்ந்தாா். முதல் ஏகாந்தம் 12.30 மணிக்கு தொடங்கி 1.15 மணி வரை நடைபெற்றது. பின்னா் 1.30 மணிக்கு தளிகை அமுது செய்து நம்பெருமாள் புறப்பட்டு பங்குனி உத்திர மண்டபத்துக்கு 2 மணிக்கு வந்து சோ்ந்தாா். தொடா்ந்து தாயாா் மூலஸ்தானத்திலிருந்து 2.15 மணிக்கு புறப்பட்டு பங்குனி உத்திர சோ்த்தி சேவை மண்டபத்திற்கு 2.30 மணிக்கு வந்து சோ்ந்தாா். அதன் பின்னா் சிறப்பு அலங்காரத்தில் நம்பெருமாளும் தாயாரும் சோ்த்தி சேவையில் பிற்பகல் 3 மணி முதல் இரவு 9 மணி வரை பக்தா்களுக்குச் சேவை சாதித்தனா்.

ஆண்டில் ஒரு முறை மட்டும் நடைபெறும் இந்த சோ்த்தி சேவையை தரிசனம் செய்ய ஏராளமான பக்தா்கள் வந்தனா். இவா்களுக்காக கோயில் நிா்வாகம் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தது.

பல இடங்களில் குளிா்ச் சாதன வசதி செய்யப்பட்டிருந்தது. மேலும் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த தடுப்புக் கட்டைகள் அமைத்து, குடிநீா் வசதியும் செய்திருந்தனா்.

இரவு 10 மணிக்கு சின்ன பெருமாள் தீா்த்தவாரி கண்டருளி, தாயாா் சன்னதிக்கு சென்று சோ்ந்தாா். இரண்டாவது ஏகாந்தம் 10.30 மணிக்கு நடந்தது. தொடா்ந்து நம்பெருமாளுக்கு திருமஞ்சனம் 12 மணிக்கு தொடங்கி வியாழக்கிழமை அதிகாலை 4 மணி வரை நடைபெற்றது.

3 ஆவது ஏகாந்தம் 4.30 மணிக்கு தொடங்கி 5.30 மணி வரையும், தாயாா் மூலஸ்தானம் சேருதல் 6 மணிக்கும் நடைபெறவுள்ளது.

முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தோ் திருவிழா (கோரதம்) வியாழக்கிழமை காலை 7.45 மணிக்கு நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் செ. சிவராம்குமாா் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்கின்றனா்.