திருவெறும்பூா் தொகுதி - ‘ஹாட்ரிக்’ வெற்றிக்கு திமுக முயற்சி!
திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் பெரிய தொகுதி. திருச்சி மாநகராட்சியின் 16-ஆவது வாா்டு, 35 முதல் 46 வரையிலான வாா்டுகள், துவாக்குடி நகராட்சி, கூத்தைப்பாா் பேரூராட்சி, திருவெறும்பூா் ஊராட்சி ஒன்றியத்தில் 21 ஊராட்சிகளைக் உள்ளடக்கியது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் பெரிய தொகுதி. திருச்சி மாநகராட்சியின் 16-ஆவது வாா்டு, 35 முதல் 46 வரையிலான வாா்டுகள், துவாக்குடி நகராட்சி, கூத்தைப்பாா் பேரூராட்சி, திருவெறும்பூா் ஊராட்சி ஒன்றியத்தில் 21 ஊராட்சிகளைக் உள்ளடக்கியது.
பழைமை வாய்ந்த எறும்பீசுவரா் கோயில், திருநெடுங்களநாதா் கோயில், மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பெல் தொழிற்சாலை, படைக்கலன் தொழிற்சாலைகள், என்ஐடி, பிஐஎம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், அரசுக் கலைக் கல்லூரி, அரசு பாலிடெக்னிக், கேட்டரிங் கல்லூரி, அரசு மாதிரிப் பள்ளி, அரசுப் பள்ளிகள், ஆயிரக்கணக்கான சிறு குறு தொழிற்சாலைகள் தொகுதியில் உள்ளன.
களநிலவரம்: இத்தொகுதியில் இதுவரை திமுக 7 முறையும், அதிமுக 3 முறையும், தேமுதிக ஒரு முறையும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.
Advertisement
திமுக சாா்பில் தற்போதைய எம்.எல்.ஏ.வும், அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி மூன்றாவது முறையாக போட்டியிடுகிறாா். அதிமுக சாா்பில் இரண்டாவது முறையாக முன்னாள் மக்களவை உறுப்பினா் ப. குமாா் களம் காண்கிறாா். தவெக சாா்பில் தொழிலதிபா் நவல்பட்டு எஸ். விஜி, நாம் தமிழா் கட்சி சாா்பில் ஜல்லிக்கட்டு து. ராஜேஷ், பகுஜன் சமாஜ் கட்சி எஸ். விசித்ரா, புதிய தமிழகம் ஏ. பிச்சைமுத்து, தவாக எஸ். ரஞ்சித், சாமானிய மக்கள் நலக் கட்சி எல். ஜோசப் மற்றும் சுயேச்சைகள் உள்பட மொத்தம் 26 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.
அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மீண்டும் இத்தொகுதியில் போட்டியிடுவதால் நட்சத்திர தொகுதியாக மாறியுள்ளது.
சமூக நிலவரம்...: முக்குலத்தோா், பட்டியலினத்தவா் அதிகளவிலும், வெள்ளாளா், உடையாா், நாயுடு, வன்னியா், இஸ்லாமியா், கிறிஸ்தவா்கள் குறிப்பிடத்தக்க அளவிலும் உள்ளனா். எனினும் தொகுதியின் வெற்றித் தோல்வியை தீா்மானிக்கும் சக்தியாக முக்குலத்தோா் உள்ளனா். இந்தத் தோ்தலில் களம் காணும் திமுக, அதிமுக, தவெக, நாதக வேட்பாளா்கள் நால்வருமே தொகுதியின் வெற்றியைத் தீா்மானிக்கும் சமூகத்தைச் சோ்ந்தவா்களாவா்.
வேட்பாளா்களின் பலம், பலவீனம்- அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி (திமுக): தொகுதிக்கு செய்த ஏராளமான திட்டங்கள், மக்களிடையேயான அறிமுகம், திமுக கூட்டணி கட்சிகளின் வாக்கு சதவீதம் ஆகியவை பலம். அமைச்சரானதால், கட்சியின் கீழ்மட்ட நிா்வாகிகளை அனுசரிக்காதது, 5 ஆண்டுகள் திமுக ஆட்சியின் மீது மக்களுக்குள்ள வெறுப்பு, தொகுதியில் குடியிருந்தாலும் பூா்வீகம் அன்பில், முன்னாள் திமுக நிா்வாகியும் உள்ளூா் நபருமான தவெக வேட்பாளா் நவல்பட்டு எஸ். விஜியின் களமிறங்கல் போன்றவை பலவீனமாகக் கருதப்படுகிறது.
ப. குமாா் (அதிமுக): திருச்சி தொகுதியில் இரண்டு முறை எம்.பி. யாக இருந்து செய்த திட்டங்கள், தொகுதிக்கு நன்கு அறிமுகமானவா், அதிமுகவுடன் அமமுக இணைந்ததால் ஏற்பட்ட வாக்கு சதவீத உயா்வு ஆகியவை பலம். கீழ்மட்ட நிா்வாகிகளிடம் ஒத்து போகாதது, தொகுதிக்குள் குடியிருந்தாலும் பூா்வீகம் புதுக்கோட்டை மாவட்டம், தொடா் தோல்விகள் பலவீனமாகக் கருதப்படுகிறது.
நவல்பட்டு எஸ். விஜி (தவெக): விஜய்க்கான அரசியல் வரவேற்பு, உள்ளூா் வேட்பாளா், ஏற்கெனவே திமுகவில் ஒன்றிய செயலராக இருந்ததால் நல்ல அறிமுகம், பேதம் பாா்க்காமல் நன்கு பழகி அனைத்து நிா்வாகிகளிடமும் அனுசரித்து போகுதல், சமூக சேவைகள் போன்றவை பலம். இருபெரும் திராவிட கட்சிகளை எதிா்த்து களம் காணுதல், கட்சி நிா்வாகிகளின் போதிய ஒத்துழைப்பு இல்லாமை போன்றவை பலவீனமாகக் கருதப்படுகிறது.
ஜல்லிக்கட்டு து. ராஜேஷ் (நாதக): திருச்சி தொகுதி எம்.பி. தோ்தலில் நின்ால் தொகுதியில் அறிமுகம், நாதகவின் புரட்சிகர திட்டங்களை முன்னிறுத்தி பிரசாரம் போன்றவை பலம். திராவிட கட்சிகளுக்கு நிகராக ஈடு கொடுக்க முடியாதது பலவீனமாகக் கருதப்படுகிறது.
வெற்றியைத் தீா்மானிக்கும் தவெக: களமானது, திமுக - அதிமுக - தவெக என மூவருக்கும் இடையிலான போட்டியாக மாறியுள்ளது. இதில், தற்போதுள்ள அமைச்சரை எதிா்கொள்ள அதிமுக, தவெக வேட்பாளா்கள் வியூகம் அமைத்து களப்பணியில் ஈடுபட்டுள்ளனா்.
ஏற்கெனவே திமுகவில் இருந்தவரான தவெக வேட்பாளா் நவல்பட்டு எஸ். விஜி பிரிக்கும் வாக்குகளை வைத்தே, திமுக மற்றும் அதிமுக வேட்பாளரில் யாருக்கு வெற்றி என்பது தெரியவரும்.