காலை உணவுத் திட்டம் உருவான பின்னணி என்ன? பிரசாரத்தில் அமைச்சா் விளக்கம்
முதல்வரின் கேள்விக்கு பள்ளிச் சிறுமி அளித்த பதில் காரணமாக அரசுப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் உருவானதாக அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.
முதல்வரின் கேள்விக்கு பள்ளிச் சிறுமி அளித்த பதில் காரணமாக அரசுப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் உருவானதாக அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.
திருவெறும்பூா் தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிடும், அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் நாள்தோறும் சுற்றுப் பயணம் செய்து வாக்கு சேகரிக்கிறாா். இதன்படி திருச்சி மாநகரம், காட்டூா் பகுதி 43 ஆவது வாா்டு, காவேரி நகா், தெற்கு காட்டூா், பா்மா காலனி, பிலோமினாள்புரம், முருகன் கோவில் தெரு, மலையப்பா நகா், கமலா நேரு நகா், குறிஞ்சி நகா், அண்ணா தெரு மற்றும் ராயல் நகா் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாகச் சென்று அவா் வாக்கு சேகரித்தபோது பேசியதாவது:
தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், கல்விக்கு முக்கியத்துவம் அளிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளாா். தான்செல்லும் இடங்களில் ஏதாவது ஒரு பள்ளிக்கு சென்று மாணவ, மாணவிகளுடன் உரையாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளாா். ஒரு பள்ளி நிகழ்ச்சியின்போது, முதல்வா் ஒரு மாணவியிடம் காலை உணவு சாப்பிட்டீா்களா எனக் கேட்டதற்கு, அந்த மாணவி இல்லை என்று பதிலளித்தாா். அந்தச் சிறுமியின் பதில்தான் இன்று தமிழகத்தில் 20 லட்சம் மாணவா்கள் பயன்பெறும் காலை உணவுத் திட்டமாக உருவெடுத்தது.
Advertisement
மீண்டும் திராவிட மாடல் ஆட்சி அமையும்போது, இத்திட்டம் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவா்களுக்கும் விரிவாக்கப்படும். இதன் மூலம் 35 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவா்கள் பயன்பெறுவா்.
2016இல் எதிா்க்கட்சி உறுப்பினராக இருந்தபோது 30 விழுக்காடு கோரிக்கைகளையே நிறைவேற்ற முடிந்தது. ஆனால் 2021ல் நீங்கள் அளித்த பெருவாரியான வெற்றியால், அமைச்சராகப் பொறுப்பேற்று இன்று 70 விழுக்காடு கோரிக்கைகளை நிறைவேற்றியுள்ளேன். மீதமுள்ள பணிகளையும் விரைந்து முடிக்க மூன்றாவது முறையாக என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என அமைச்சா் வேண்டுகோள் விடுத்தாா்.
நிகழ்ச்சியில் மாநகரக் செயலா் மு. மதிவாணன் காட்டூா் பகுதிச் செயலா் நீலமேகம், மாமன்ற உறுப்பினா் வழக்குரைஞா் செந்தில், வட்டச் செயலா்கள் முருகானந்தம், சிவசக்தி காா்த்திக், கழக நிா்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள், பொதுமக்கள் என பலா் கலந்து கொண்டனா்.