முகப்பு
சென்னை

மக்களுக்கு பயனில்லாத பட்ஜெட்: திமுக வெளியேற்றம்

மாநகராட்சியில் தாக்கல் செய்யப்பட்ட 2013-14ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் மக்களுக்கு பயனளிக்கும் வகையில்

Updated On : 12 மார்ச் 2013, 3:09 am IST
பகிர்:

மாநகராட்சியில் தாக்கல் செய்யப்பட்ட 2013-14ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் இல்லை எனக் கூறி திமுக-வைச் சேர்ந்த மாநகராட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

புதிய திட்டங்கள் குறித்து மன்றக் கூட்டத்தில் மேயர் அறிவித்துக் கொண்டிருந்த போது, கடந்த ஆண்டு பட்ஜெட்டில் செயல்படுத்தப்படாத திட்டங்களை பற்றி பேச அனுமதியளிக்குமாறு திமுக உறுப்பினர்கள் குரலெழுப்பினர். இதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அவர்கள் வெளிநடப்பு செய்தனர்.

சிறிது நேரத்துக்குப் பின்னர் மன்றக் கூட்ட நடவடிக்கைகளில் பங்கேற்ற அவர்கள், வரிவிதிப்பு மற்றும் நிதி நிலைக் குழுத் தலைவர் சந்தானம் பட்ஜெட் தாக்கல் செய்யும் போது மீண்டும் வெளிநடப்பு செய்தனர்.

Advertisement

Advertisement

இது குறித்த மாநகராட்சி திமுக குழுத் தலைவர் சுபாஷ் சந்திர போஸ் கூறியது: மாநகராட்சி பட்ஜெட் மக்களுக்கு பயனளிக்காத வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பட்ஜெட் அறிவிப்புகள் இதுவரை செயல்படுத்தப்படவில்லை.

கொசுக்களின் தலைநகரமாக சென்னையை மாற்றியிருப்பதுதான் தற்போதைய மாநகராட்சியின் சாதனை.

சாலை வசதி, போக்குவரத்து நெரிசல் உள்பட பல்வேறு பிரச்னைகள் தீர்க்கப்படாமல் உள்ளன. கடந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நகலாகவே இந்த ஆண்டு பட்ஜெட் அமைந்துள்ளது.

நிதி நிலை அறிக்கை தாக்கலின் போது மாநகராட்சி தொடர்பான விவரங்களை அளிப்பதை விடுத்து கட்சித் தலைவரின் புகழ் பாடுகின்றனர். இதைக் கண்டித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்கின்றனர் என்றார் அவர்.

பட்ஜெட் மீதான விவாதக் கூட்டம் பிற்பகலில் நடைபெற்றது. அதில் திமுக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். விவாதத்தின் போது திமுக உறுப்பினர் தேவ ஜவகர் சில கருத்துகளைத் தெரிவித்தார்.

அக்கருத்துகள் அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டது. அதைக் கண்டித்து திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.