முகப்பு
சென்னை

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க நிர்வாகத்தை அரசே ஏற்கக் கோரி வழக்கு

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க நிர்வாகத்தை தமிழக அரசே ஏற்க வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Updated On : 12 ஜூன் 2013, 2:49 am IST
பகிர்:

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க நிர்வாகத்தை தமிழக அரசே ஏற்க வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த சிங்காரவேலர் நினைவு கிரிக்கெட் கிளப்பின் தலைவர் அ.கதிரவன் பொது நல மனு தாக்கல் செய்துள்ளார்.

ஜென்டில்மேன் விளையாட்டு என்று போற்றப்பட்ட கிரிக்கெட் விளையாட்டு, அண்மைக் காலத்தில் சூதாட்டம், முறைகேடுகள் பலவற்றால் கடும் பாதிப்புகளை அடைந்துள்ளது. கிரிக்கெட் வீரர்கள், சூதாட்ட தரகர்கள் மற்றும் பலர் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

இந்நிலையில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவரின் மருமகனும் கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக மும்பை போலீஸôரால் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு கிரிக்கெட் சங்க நிர்வாகிகளாக உள்ளவர்களுக்கு விளையாட்டோடு தொடர்புடைய பின்னணி எதுவும் இல்லை. அவர்களில் பலர் தொழிலதிபர்களாக உள்ளனர். தமிழ்நாடு கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தேர்தல் முறையாக நடப்பதில்லை. நிர்வாகிகளைத் தேர்வு செய்வதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுகின்றன.

தற்போதைய எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானம் தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான நிலத்தில் அமைந்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தில் முறைகேடுகள் நடைபெற்றால் அதில் தலையிட்டு ஒழுங்குபடுத்த வேண்டிய கடமை மாநில அரசுக்கு உள்ளது.

இந்தச் சூழலில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தேர்தல் மற்றும் அதன் நிர்வாகத்தில் நடைபெறும் பல்வேறு முறைகேடுகளைச் சுட்டிக்காட்டியும், கிரிக்கெட் சங்க நிர்வாகத்தை தமிழக அரசின் விளையாட்டு மேம்பாடு மற்றும் இளைஞர் நலன் துறையே தன் வசம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் கோரி தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பினேன். எனினும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஆகவே, எனது கோரிக்கை மனுவை பரிசீலித்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்க நிர்வாகத்தை அரசே ஏற்குமாறு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.

மேலும், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் ஜனநாயக முறைப்படிதான் தேர்வு செய்யப்பட்டுள்ளனரா அல்லது முறைகேடுகள் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளனரா என்பதை ஆராய்வதற்காக அட்வகேட் கமிஷனர் ஒருவரை உயர் நீதிமன்றம் நியமிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கதிரவன் கோரியுள்ளார்.

இந்த மனு தலைமை நீதிபதி ஆர்.கே.அகர்வால், நீதிபதி எம்.சத்திய நாராயணன் ஆகியோரைக் கொண்ட முதன்மை அமர்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனு மீதான விசாரணையை புதன்கிழமைக்கு (ஜூன் 12) ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.