முகப்பு
சென்னை

இலங்கை அகதி செந்தூரன் மனு மீது 2 மாதத்துக்குள் முடிவு எடுக்க உத்தரவு

நாடு கடத்தல் சர்ச்சைக்குள்ளாகியுள்ள இலங்கை அகதி செந்தூரனின் புதிய மனு மீது 2 மாதத்துக்குள் பரிசீலனை செய்து முடிவு எடுக்குமாறு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Updated On : 12 செப்டம்பர், 2013 at 4:06 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:20 PM

நாடு கடத்தல் சர்ச்சைக்குள்ளாகியுள்ள இலங்கை அகதி செந்தூரனின் புதிய மனு மீது 2 மாதத்துக்குள் பரிசீலனை செய்து முடிவு எடுக்குமாறு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசு பரிசீலனை செய்து முடிவு எடுக்கும் வகையில் தமிழக வெளி விவகாரத் துறையிடம் புதிய மனுவை இலங்கை அகதி செந்தூரன் 15 நாள்களுக்குள் அளிக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் பம்மலைச் சேர்ந்த ஆர்.செந்தூரன் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: இலங்கையில் நடந்த இனப் பிரச்னை காரணமாக 2011-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தியாவுக்கு அகதியாக நான் வந்தேன்.

Advertisement

அந்த ஆண்டு ஜூலை மாதம் 14-ஆம் தேதி கியூ பிரிவு போலீஸார் என்னை கைது செய்து, செங்கல்பட்டு முகாமில் அடைத்தனர். பின்னர் தேவகோட்டை அருகே தாழையூரில் உள்ள முகாமுக்கு என்னை மாற்ற உத்தரவிடப்பட்டது.

தேவகோட்டை தாசில்தாரின் அனுமதி பெற்று, என் மனைவி மற்றும் குழந்தைகளைச் சந்திக்க சென்னைக்கு வந்தேன். சென்னையில் வாடகை வீட்டில் தங்கி, தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறேன்.

இந்நிலையில் என்னையும், மேலும் இரண்டு பேரையும் செப்டம்பர் 19-ஆம் தேதி இலங்கைக்கு நாடு கடத்துவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவுக்கு மத்திய உள்துறை அமைச்சகமும் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

எனது தரப்பு கருத்துக்களை கூறுவதற்கு வாய்ப்பு அளிக்காமலேயே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. என்னை இலங்கைக்கு நாடு கடத்தினால், அங்கு என்னை கொலை செய்வதற்கு வாய்ப்புள்ளது. இதனால் இலங்கைக்கு என்னை நாடு கடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வி.தனபாலன், சி.டி.செல்வம் ஆகியோர், செந்தூரனை நாடு கடத்துவதற்கு இடைக்காலத் தடை விதித்தனர். மீண்டும் இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.ராஜேஸ்வரன், ஏ.ஆறுமுகசாமி ஆகியோர் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: மனுதாரர் தனது குறைகள் மற்றும் பிரச்னைகளை விளக்கமாக எழுதிய புதிய மனுவை தமிழக அரசின் பொதுத்துறையிடம் 15 நாட்களுக்குள் அளிக்க வேண்டும். அந்த மனுவை 8 வாரங்களுக்குள் (இரண்டு மாதங்களுக்குள்) பரிசீலித்து அரசு முடிவெடுக்க வேண்டும்.

அந்த மனு மீது இறுதி முடிவு எடுக்கும்வரை மனுதாரரை நாடு கடத்தும் நடவடிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும். அரசு எடுக்கும் முடிவு ஒருவேளை மனுதாரருக்கு எதிரானதாக இருந்தால், அந்த உத்தரவை அரசு உடனடியாக நிறைவேற்ற முயற்சி செய்யக் கூடாது.

மனுதாரர் சில நிவாரணம் பெறுவதற்கு ஏதுவான வகையில் கால அவகாசம் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டு இந்த மனு முடித்து வைக்கப்படுகின்றன என அதில் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.