இயற்கையுடன் இயைந்து வாழ்வோம்!
இயற்கையை மதித்தால் மனித வாழ்வு செழிக்கும். அதை அழித்தால் மனித வாழ்வு அழியும். இயற்கையுடன் இயைந்து வாழ்தலே மனிதகுலத்தின் நீடித்த வாழ்வுக்கு ஒரே தீர்வு.
கடந்த ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவில் ஏற்பட்ட கடும் வெப்ப அலைகள், வறண்ட வானிலை காரணமாக வடக்கில் உத்தரகண்ட், மேற்கில் குஜராத் முதல் தெற்கே ஆந்திரம், தமிழ்நாடு (நீலகிரி மாவட்டம், பார்சன்வேலி பள்ளத்தாக்கு) ஆகிய 12-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் பெரிய அளவில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. இதனால், பல அரிய வகையான பறவையினங்களும், விலங்கினங்களும், மரங்களும், தாவரங்களும், அழிந்தன. இயற்கைச் சீற்றங்களான புயல், வெள்ளம், பெருமழையைப் போலவே அதிக உயிரினங்களை அழிக்கும் இயல்பு காட்டுத் தீக்கும் உண்டு. இதனால் ஏற்பட்ட வெப்பக் காற்று நாட்டையே தகிக்கச் செய்து வருகிறது.
காட்டுத் தீக்கும் காலநிலை மாற்றத்துக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. பெருகும் உலகளாவிய வெப்பநிலை, நீடித்த வறட்சி ஆகியன தீ வேகமாகப் பரவுவதற்குக் காரணம். அதிகரித்துவரும் பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றத்தால் வறட்சியும், வெப்பமும் இணைந்து, எதிர்காலத்தில் காட்டுத் தீ என்பது இயல்பான ஒன்றாக மாறிவிடும். இதன்மூலம், பல்வேறு வளங்களைக் கொண்ட காடுகளும், பல்லுயிர்களும் பாதிக்கப்படும். கானகங்களில் காணப்படும் பசுமைமுகம், பரவும் காட்டுத் தீயால் கோரமுகமாக மாறி வருகின்றன.
2022-ஆம் ஆண்டில், ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டம் வெளியிட்ட அறிக்கையில், 2030}ஆம் ஆண்டுக்குள் உலக அளவில் காட்டுத் தீ 14 சதவீதமும், 2050}ஆம் ஆண்டின் இறுதிக்குள் 30 சதவீதமும், 2100}ஆம் ஆண்டுக்குள் 50 சதவீதமும் அதிகரிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தால் ஏற்படும் வெப்ப அலைகளைத் தடுக்க உலக நாடுகள் உடனடியாக கார்பன் வெளியேற்றத்தைக் குறைத்து நிலையான வளர்ச்சி மற்றும் பசுமைத் தொழில்நுட்பங்களை முன்னெடுக்க வேண்டும் என ஐ.நா. சபை அவ்வப்போது வலியுறுத்தி வருகிறது.
Advertisement
Advertisement
உலகம் முழுவதும் நான்கு முக்கியக் காரணங்களால் காட்டுத் தீ ஏற்பட்டு பல காலம் நீடிக்கிறது. மனிதத் தவறுகள், இரவில் அதிகரிக்கும் வெப்பநிலை, குறைவான மழைப் பொழிவு, பனி முன்னதாகவே உருகுதல் ஆகியன காட்டுத் தீ ஏற்படுவதற்கு முக்கியக் காரணங்களாக சொல்லப்படுகின்றன. வறண்ட காலநிலையில் காற்றால் மின் கம்பிகள் உராய்வும், மின்னலும் பெரும் தீ விபத்துகளை ஏற்படுத்துகின்றன.
தொடர்ச்சியான வறண்ட வானிலை, வடமேற்கு காற்று, மேகமற்ற வானத்துடன் இணைந்து இந்தியாவில் அதிகபட்ச சூரிய வெப்பத்துக்கு வழிவகுக்கின்றன. உலக அளவில், பகல் நேர வெப்பநிலையில் வெப்பமான 100 நகரங்களில் 95 நகரங்கள் இந்தியாவில் உள்ளன. கடந்த ஏப்ரல் மாத நிலவரப்படி இந்தியக் காடுகள் முழுவதும் 13,771 பெரிய தீ விபத்துகள் ஏற்பட்டிருப்பதை செயற்கைக்கோள் படங்கள் காட்டியுள்ளன. இது கடந்த 15 கோடைகாலங்களில் ஏற்பட்ட காட்டுத் தீ-க்களின் சராசரியைவிட அதிகமாகும். மேலும், இது உலக அளவில் மோசமடைந்துவரும் காலநிலை மாற்றத்தில் பெரும் தீங்குகளை விளைவிக்கும்.
இன்றைய தீ விபத்துகளில் அசாதாரணமானது என்னவென்றால், இயற்கையை அழிக்கும் முயற்சியில் மனிதர்கள் உருவாக்கியுள்ள வெப்பமான காலநிலைதான். இதுதான் காடுகளில் எளிதில் தீப் பற்றுவதற்கும், தொடர்ந்து எரியவும் காரணமாகின்றன. இருபது ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட தற்போது காட்டுத் தீ இரண்டு மடங்கு அதிகமான மரங்களை எரித்து அழிப்பதாக ஆய்வுகள் சுட்டுகின்றன.
மரங்கள் இயற்கையிலேயே அதிக கார்பனைச் சேமித்து வைக்கும் "கார்பன் சேமிப்புத் தொட்டி'களாக செயல்படுகின்றன. மரங்கள் வளரும்போது வளிமண்டலத்திலுள்ள கரியமில வாயுவை உறிஞ்சி, ஒளிச்சேர்க்கை மூலம் கார்பனைத் தங்களின் கிளைகள், இலைகள், தண்டு, வேர்கள் மற்றும் மண்ணில் சேமிக்கின்றன. மரங்கள் எரியும்போது, அந்த மரங்களில் பல ஆண்டுகளாக சேமிக்கப்பட்ட கார்பன், ஒரே நேரத்தில் கரியமில வாயுவாக வெளியேறி வளிமண்டலத்தை அடைகிறது. இதுவே காட்டுத் தீயால் ஏற்படும் பெரும் பாதிப்புகளுக்குக் காரணமாகும்.
மேலும், அவை வளிமண்டலத்தில் இன்னும் அதிக அளவில் கரியமில வாயுவை அதிகரிக்கச் செய்வதால் புவி மேலும் வெப்பமடைகிறது. புதைபடிம எரிபொருள்களை எரிப்பதால் ஆண்டுதோறும் 3,700 கோடி டன் கரியமில வாயுவை வெளியிடும் நிலையில், காட்டுத் தீயானது கூடுதலாக 800 கோடி டன்களை, அதாவது 20 சதவீதம் அதிகமாக வெளியிட்டு சுற்றுச்சூழலை மாசுப்படுத்தி வெப்பச் சூழலை அதிகரிக்கச் செய்கின்றன.
2024-ஆம் ஆண்டில் உலகம் 1.35 கோடி ஹெக்டேர் வனப் பகுதியை இழந்தது. இது கிரீஸ் நாட்டின் பரப்பளவைவிட அதிகம். காடுகளைக் காப்பாற்ற, உலகம் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தை வேகமாகக் குறைக்க வேண்டும். அதாவது, புதைபடிம எரிபொருள்களை குறைவாக எரிக்க வேண்டும்.
காடுகள் எரிப்பு, புவி வெப்பமயமாதல், காற்று மாசுபாடு, காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் கேடு ஆகியன இப்பூமிப்பந்தை உயிரினங்கள் வாழ தகுதியற்ற இடமாக மாற்றி வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக, காடுகளை அழித்து மனிதர்கள் அந்தப் பகுதிகளை ஆக்கிரமித்து வருவதால், மனிதர்களுக்கும், வன விலங்குகளுக்குமான இடைவெளி குறைந்து வருகிறது. கடந்த முப்பது ஆண்டுகளில் உருவான புதிய நோய்த்தொற்றுகளில் 60 முதல் 70 சதவீதம் வரையிலானவை, வனவிலங்களிடமிருந்து உருமாற்றம் பெற்று மனிதர்களுக்குப் பரவிய தீநுண்மிகளாலேயே ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனம் (ஐஐடிஎம்), கோவாவில் உள்ள பிட்ஸ் பிலானி கே.கே. பிர்லா பொறியியல் நிறுவனம் மற்றும் ஸ்வீடனில் உள்ள லுண்ட் பல்கலைக்கழகம் உள்ளிட்ட நிறுவனங்கள் அண்மையில் நடத்திய ஆய்வின்படி, 2100-ஆம் ஆண்டில் உயிருள்ள வனத் தாவரங்களிலுள்ள தண்டுகள், கிளைகள், இலைகள் மற்றும் வேர்களில் சேமிக்கப்பட்டுள்ள கார்பனின் அளவு, குறைந்த பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தின் கீழ் 35 சதவீதம், மிதமான வெளியேற்றத்தின் கீழ் 62 சதவீதம் மற்றும் அதிக வெளியேற்றத்தின் கீழ் 97 சதவீதம் வரை அதிகரிக்கக் கூடும் எனக் கணித்துள்ளது. ஆனால், இந்தக் கணிப்பு முற்றிலும் ஒரு நல்ல செய்தி அல்ல என்று வன ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.
காடுகள் வளிமண்டலத்திலிருந்து கரியமில வாயுவை உறிஞ்சி, கார்பன் சேமிப்பு மையங்களாகச் செயல்படுகின்றன. "கார்பன் இருப்பு அதிகரித்து வருவது நல்ல விஷயம்தான். ஆனால், ஒட்டுமொத்தமாக இது ஒரு சாதகமான அறிகுறி அல்ல. இன்றைய காடுகள் எதிர்காலத்தில் மேலும் பாதிப்புக்குள்ளாகும் நிலையில் உள்ளன. மேலும், காடுகளில் உள்ள மரங்கள் மற்றும் தாவரங்கள் கார்பனைத் தாங்கும் திறனற்றதாக மாறி வருகின்றன' என்கிறார் ஐஐடிஎம் முதன்மை ஆய்வாளர் ஃபிதா ஃபாத்திமா.
வரும் பத்து ஆண்டுகளில் இந்தியாவின் காடுகள் முன்பைவிட அதிக கார்பனைச் சேமிக்கக்கூடும். இதனால், வனச்சூழல் அமைப்புகள் மேலும் பாதிப்புக்குள்ளாகலாம்.
ராஜஸ்தான், குஜராத் மற்றும் மத்திய இந்தியாவின் சில பகுதிகள் உள்ளிட்ட பாலைவன மற்றும் பகுதி வறண்ட பிராந்தியங்களில் மிகப் பெரிய கார்பன் அதிகரிப்புகள் கணிக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அரண்களான மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் கிழக்கு இமயமலைக் காடுகளில் மிதமான கார்பன் அதிகரிப்புகள் காணப்படுகின்றன.
"இந்தியாவின் காடுகள் காலநிலை மாற்றத்துக்கு ஒரே சீராக எதிர்வினையாற்றுவதில்லை. சில பிராந்தியங்கள் உயிருள்ள உயிர்மப் பொருள்களில் அதிக கார்பனைச் சேமிக்கக் கூடும். ஆனால், அதன் அர்த்தம் காலநிலை மாற்றம் காடுகளுக்கு உதவுகிறது என்பதல்ல. வெப்பமயமான உலகம், வறட்சி, தீ மற்றும் பிற இடையூறுகளால் ஏற்படும் அதிக அபாயங்களை ஈர்க்கிறது' என்றார் ஐஐடிஎம் விஞ்ஞானி டாக்டர் ராக்ஸி மேத்யூ.
வனங்களில் கார்பன் மாற்றங்களுக்கு மழைப்பொழிவே பிரதான காரணியாக இருப்பதும், அதன் விளைவுகள் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகே தெரியவரும் என்பதும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. பிராந்தியங்களுக்குள், குறிப்பாக அதிக கார்பன் உமிழ்கள் நிலவும் சூழல்களில் புவி வெப்பநிலை அதிகரித்து, கடுமையான காலநிலை மாற்றங்கள் ஏற்படும்.
காடுகளில், "தீ தடுப்புக்கோடு' அமைத்து காடுகளில் திடீர் தீ ஏற்படுவதைத் தடுக்கலாம். காட்டின் தொடர்ச்சியைப் பாதிக்கும் வகையில் தாவரங்கள், காய்ந்த இலைகள் மற்றும் எளிதில் எரியக் கூடிய பொருள்களை அகற்றி உருவாக்கப்படும் ஒரு வெற்றுப் பாதையே "தீ தடுப்புக்கோடு' என்பதாகும்.
"பூர்விகக் காடுகளின் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது என்பது உயிரைப் பாதுகாப்பது, மரபணுக்களைப் பாதுகாப்பது மற்றும் மனதைப் பாதுகாப்பதாகும். காடுதான் எல்லா உயிர்களுக்கும் வேர். அதுவே நமது உயிரியல் உள்ளுணர்வுகளுக்குப் புத்துயிர் அளித்து, நமது அறிவை ஆழப்படுத்தி, மனிதர்களாகிய நமது உணர்திறனை அதிகரிக்கும் கருப்பை' என்கிறார் ஜப்பானைச் சேர்ந்த தாவரவியலாளர் அகிரா மியாவாக்கி.
காடழிப்பு, நகரமயமாக்கல், நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு போன்ற காரணங்களால் இயற்கையின் சமநிலை பாதிக்கப்படுகிறது. காட்டின் வளமே மண்ணின் வளம், மண்ணின் வளமே மக்களின் வளம். இயற்கைதான் வளங்களின் உயிர்.
இயற்கையை மதித்தால் மனித வாழ்வு செழிக்கும். அதை அழித்தால் மனித வாழ்வு அழியும். இயற்கையுடன் இயைந்து வாழ்தலே மனிதகுலத்தின் நீடித்த வாழ்வுக்கு ஒரே தீர்வு.
கட்டுரையாளர்:
எழுத்தாளர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.