முகப்பு
நடுப்பக்கக் கட்டுரைகள்

தோல்விக்கும் தோள் கொடுப்போம்!

நேர்முகத் தேர்வுவரை சென்று வெற்றி வாய்ப்பை இழந்த தேர்வர்களுக்கு பெற்றோரும், அரசும் தொடர்ந்து ஊக்கம் தர வேண்டும்.

Updated On : 9 மார்ச், 2026 at 12:28 AM
தேர்வர்கள்
பகிர்:

சுதந்திரத்துக்குப் பின்னர் தொடங்கி இன்று வரையும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் இந்திய குடிமைப் பணித் தேர்வுகளில் வெற்றிபெற்று பல்வேறு மாநிலங்களில் பணிபுரிந்து, அந்தந்த மாநிலங்களின் வளர்ச்சிக்கும் நாட்டின் மேன்மைக்கும் அளப்பரிய பங்காற்றி வருவது மாநிலத்தின் அறிவார்ந்த பெருமையின் அடையாளமாகும்.

2025-ஆம் ஆண்டுக்கான குடிமைப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு நிறைவு பெற்று முடிவுகள் வந்திருக்கின்றன. தமிழ்நாட்டுத் தேர்வர்கள் எஸ்எஸ்சி, ரயில்வே, அஞ்சல் துறை, இந்திய குடிமைப் பணிகள் தேர்வாணையம் நடத்துகிற மத்திய அரசுப் பணிகளுக்கான இதரத் தேர்வுகள் போன்ற பணிகளில் காட்டும் ஆர்வத்தைவிட இந்திய குடிமைப் பணிகள் மீது பெரிதும் ஈர்ப்பு கொண்டுள்ளனர். தமிழ்நாட்டில் இன்றைய சூழலில் சுமார் லட்சத்துக்கும் மேற்பட்ட தேர்வர்கள் இந்தத் தேர்வுக்குத் தயாராகி வருகிறார்கள்.

கடந்த காலங்களில் 500 அல்லது 600 குடிமைப் பணியிடங்கள் நிரப்பப்பட்ட போதெல்லாம் 100-க்கும் மேற்பட்ட தேர்வர்கள் தமிழ்நாட்டில் இருந்து வெற்றி பெற்று வந்தார்கள். ஆனால், கடந்த 7 அல்லது 8 ஆண்டுகளாக தமிழ்நாட்டின் வெற்றி விகிதம் இந்தத் தேர்வில் குறைந்து வருகிறது. அதாவது, 12% சதவீதம் முதல் 14% சதவீதமாக இருந்த வெற்றி விகிதம் 5 சதவீதத்துக்கும் கீழே குறைந்தது. தற்போது இந்திய அளவில் ஆயிரம் பணியிடங்களில் 40-க்கும் குறைவான பணியிடங்களே தமிழ்நாட்டுத் தேர்வர்கள் பெற்று வருகின்றனர். 2024 -ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை சுமார் 50-ஆக உயர்ந்தது.

இது குறிப்பிடத்தக்க முன்னேற்றம் என்றாலும் நாம் செல்லவேண்டிய தொலைவு இன்னும் இரண்டு அல்லது மூன்று மடங்காக இருக்கிறது.

இந்தச் சூழலில் இந்திய குடிமைப் பணிகள் தேர்வாணையம் இந்த ஆண்டுமுதல் தேர்வு முறையில் சில முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. அவற்றுள் இரண்டு மாற்றங்கள் மிகவும் குறிப்பிடத்தக்கவை. முதலாவது குடிமைப் பணித் தேர்வில் இறுதி வெற்றி பெற்று ஏதேனும் ஒரு பணி வாய்ப்பைப் பெற்ற தேர்வர் ஒருவர் தனக்கு ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற லட்சியப் பணிகள் கிடைக்காத நிலையில், மீண்டும் தேர்வை எழுதி, அந்தப் பணியைப் பெற வேண்டும் என நினைத்தால் அவருக்கு ஒரே ஒருமுறை மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும். அந்த வாய்ப்பையும் அடுத்த இரண்டாண்டுகளுக்குள் அந்தத் தேர்வர் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

ஆனால், இதற்கு முன்பு பின்பற்றப்பட்ட தேர்வு விதிகளின்படி, பொதுப் பிரிவைச் சேர்ந்த தேர்வர் 6 முறையும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த தேர்வர் 9 முறையும், அட்டவணை வகுப்பைச் சேர்ந்த தேர்வர் சுமார் 16 முறையும் வாய்ப்புப் பெற்றனர். இதன்படி, வெற்றிபெற்ற தேர்வர் ஒருவர் தத்தமது பிரிவில் எஞ்சிய வாய்ப்புகள் முழுவதையும் பயன்படுத்த வகைசெய்யப்பட்டிருந்தது. தற்போது அந்த வாய்ப்பு நீக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது மாற்றமானது, குடிமைப் பணிகளுக்கு விண்ணப்பிக்கும் தேர்வர் தான் பணிபுரிய விரும்பும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான முன்னுரிமையை வரிசைப்படுத்தி விண்ணப்பிக்க முடியும். தேர்வர் ஒருவர் சிறந்த மதிப்பெண்களைப் பெறும்போது அவரது முன்னுரிமைகள் பரிசீலிக்கப்பட்டு அதன்படி, பணி வாய்ப்புக்கான மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தைப் பெற முடியும். எடுத்துக்காட்டாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர், தான் பணிபுரிய விரும்பும் மாநிலத் தேர்வில் தமிழ்நாட்டுக்கு முதல் முன்னுரிமை கொடுத்து அதைப் பெற்று விடவும் முடியும். தற்போதைய மாற்றத்தில் இந்த வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இந்தப் புதிய விதிகள் தேர்ச்சி பெற்ற தேர்வர்களுக்கான பிரச்னை என்பதால் அதிகம் பேசப்படவில்லை.

இத்தகைய பின்னணியில் இன்று குடிமைப் பணிகள் தேர்வை தேர்வர்கள் எழுதுகிறார்கள். இவர்களுக்கு ஆத்மார்த்தமான உதவியும் ஆதரவும் தேவை. குறிப்பாக, நேர்முகத் தேர்வுவரை சென்று வெற்றி வாய்ப்பை இழந்த தேர்வர்களுக்கு பெற்றோரும், அரசும் தொடர்ந்து ஊக்கம் தர வேண்டும். ஏனென்றால், குடிமைப் பணித் தேர்வில் வெல்வதே லட்சியம் என்ற உறுதியோடு தேர்வர்கள் பயணத்தைத் தொடர்கின்ற தருணங்களில் பொருளாதார நெருக்கடிகளையும் மனரீதியான அழுத்தங்களையும் எதிர்கொள்கிறார்கள். வெற்றி பெற்றவர்களைக் கொண்டாடுகிற அதேவேளையில், இறுதி நிலைவரை சென்று தோல்வியடைந்த தேர்வர்களுக்கு உரிய நம்பிக்கை தந்து உறுதுணையாக இருக்க வேண்டியதும் நமது கடமையாகும். ஏனெனில், இவர்கள் தங்கள் இலக்கை உணர்ந்து உழைத்து, தேர்வின் அடுத்தடுத்த நிலைக்கு உயர்ந்தவர்கள். வெற்றி பெற்றவர்களுக்கும் இவர்களுக்குமான மதிப்பெண் வேறுபாடு 1 முதல் 20 மதிப்பெண்களே.

இதைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு ‘பிரதிபா சேது' என்ற திட்டத்தின் மூலம் நேர்முகத் தேர்வு வரை சென்று வெற்றி வாய்ப்பை இழந்த தேர்வர்களுக்கு அவர்களின் விருப்புரிமையின் பேரில் தகுதிக்கேற்ப மத்திய அரசின் பல்வேறு துறைகளில் குருப் ஏ நிலையில் நிரந்தரப் பணி பெறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு அரசைப் பொருத்தளவில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வருகிற அகில இந்திய குடிமைப் பணிகள் பயிற்சி மையம் தமிழ்நாட்டுத் தேர்வர்களின் வெற்றிக்கு முக்கியமான பங்களிப்பை வழங்கி வருகிறது. உணவு, உறைவிடம் மற்றும் பயிற்சி என சகல பரிமாணங்களிலும் செவ்வனே தனது கடமையை இந்தப் பயிற்சிமையம் ஆற்றி வருகிறது. மாநில அரசின் தொடர்ச்சியான நிதி ஆதரவும் இதற்கு முக்கியமான காரணம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இன்று நமக்கு முன் இருக்கிற முக்கிய இலக்குயாதெனில் முதல்நிலை, முதன்மை மற்றும் ஆளுமைத் தேர்வு என ஒவ்வொரு நிலையிலும் தமிழகத்தின் வெற்றியாளர்களின் எண்ணிக்கையை இரண்டு அல்லது மூன்று மடங்காக உயர்த்த வேண்டும். இவ்வாறு வெற்றியாளர்கள் எண்ணிக்கையை இந்திய குடிமைப் பணித் தேர்வுகளில் அதிகரிக்க நாம் நேர்முகத் தேர்வுவரை சென்ற தேர்வர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது முக்கியமாகும்.

தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் புதிய முயற்சிகளில் ஒன்றாக 'நான் முதல்வன் திட்டம் விளங்குகிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்தத் திட்டத்தின் கீழ் இந்திய குடிமைப் பணிகளுக்கான முதல் நிலைத் தேர்வுக்குத் தயாராகும் சுமார் 1,000 தேர்வர்களை நுழைவுத் தேர்வு மூலமாகத் தேர்வு செய்து 10 மாதங்களுக்கு ரூ.7,500 வீதம் வழங்கி வருகிறது. இந்த உதவித் தொகை தேர்வர்களுக்கு ஊக்கமும் உத்வேகமும் தருகிற ஒன்றாக விளங்குகிறது.

இந்தத் திட்டத்தில் நிகழாண்டுக்கான தேர்வுமுதல் புதிய நிபந்தனை விதிக்கப்பட்டது. அந்த நிபந்தனையின்படி, தேர்வர் ஒருவர் இரண்டு முறை மட்டுமே இந்த வாய்ப்பைப் பெற முடியும். இது தேவையான நிபந்தனையாகவே பார்க்கப்படுகிறது. ஏனென்றால், நிகழாண்டு புதியவர்கள் பலர் உதவித்தொகை பெறுவதற்குத் தகுதி பெற்றார்கள். கட்-ஆப் மதிப்பெண்ணும் குறைந்தது. இந்த நிபந்தனை ஒருவகையில் வரவேற்கக்கூடியது என்றாலும், மற்றொரு வகையில் இதில் ஒரு தளர்வு தேவை என்பதைச் சுட்டிக்காட்டுவது அவசியம் ஆகும்.

இந்த ஆண்டு முதல்நிலைத் தேர்வுக்கான ஊக்கத்தொகை பெறும் தேர்வில் வெற்றி பெற்றவர்களில் சுமார் 400 தேர்வர்கள் மேற்கண்ட நிபந்தனையின்படி ஊக்கத்தொகை பெறும் வாய்ப்பை இழந்துள்ளனர். இவர்களுள் சுமார் 100 தேர்வர்கள் நேர்முகத் தேர்வு வரை சென்றவர்கள் ஆவர். இத் தேர்வர்கள் சில மதிப்பெண்களில் இறுதி வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள். இவர்களுக்கு அரசு ஊக்கத்தொகை வழங்குவது தமிழ்நாட்டின் வெற்றியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பெரிதும் உதவும் என்பதை உரியவர்கள் அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றிருக்க வேண்டும். பொருளாதார ரீதியாக தங்களுக்கு ஏற்படும் நெருக்கடிகளைக் குறைத்துக் கொள்ளவே அரசின் இந்த உதவித் தொகையை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அதற்கான தேர்வையும் எழுதி வெற்றியும் பெறுகிறார்கள். அதனால், இரண்டு முறை மட்டும் என்ற நிபந்தனையின்படி நேர்முகத் தேர்வு வரை சென்றவர்களை அரசு புறந்தள்ளக் கூடாது.

மேலும், மிகக் குறைந்த எண்ணிக்கை யில் உள்ள அவர்களுக்கு வழங்கும் உதவித்தொகை என்பது அரசின் செலவினங்களோடு ஒப்பிடும்போது மிகவும் சொற்பமானது. ஆனால், அவர்களின் வெற்றி தமிழகத்தின் பெருமை மட்டுமல்ல, நாடு முழுவதும் தமிழர்களின் நிர்வாகப் பிரதி நிதித்துவத்தை உறுதிப்படுத்துவதுமாகும். ஆகவே, இரண்டு முறை மட்டும் என்ற நிபந்தனையில் நேர்முகத் தேர்வுவரை சென்ற தேர்வர்களுக்கு விதிவிலக்கு அளிப்பது அவசியம். இந்திய குடிமைப் பணிகளில் தமிழ்நாட்டின் பங்களிப்பை உயர்த்துவதற்கு மிகச் சிறந்த உத்திகளுள் ஒன்று நேர்முகத் தேர்வுவரை சென்ற தேர்வர்களுக்கு உரிய முறையில் ஊக்கம் தருவதாகும்.

தற்போது தமிழ்நாடு அரசு குரூப் 1 தேர்வில் நேர்முகத் தேர்வுவரை சென்ற தேர்வர்கள் வெற்றி வாய்ப்பை இழந்து விட்டால் ஏதேனும் அரசு சார்ந்த நிறுவனத்தில் ஒப்பந்தப் பணிகளில் பணிவாய்ப்புப் பெறும் வகையில் புதிய திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. இந்தத் திட்டம் வரவேற்புக்குரியது. அதேபோல, இந்திய குடிமைப் பணித் தேர்வுகளில் நேர்முகத் தேர்வுவரை சென்று வெற்றி வாய்ப்பை இழந்த தேர்வர்களுக்கும் குரூப் 2 நிலையிலேனும் பணிவாய்ப்புகளை உருவாகும் புதிய செயல்திட்டங்களை வகுத்து, திறமையும் முயற்சியும் ஆற்றலும் உடைய இளைஞர்களை தமிழகத்தின் வளர்ச்சிப் பணிகளுக்குப் பயன்படுத்த வேண்டும்.

முழு கட்டுரையைப் படிக்க →