'கடவுளின்' குழந்தைகளை அரவணைப்போம்!
ஆட்டிசம் என்பது மூளையில் ஏற்பட்ட நரம்பியல் கோளாறு காரணமாக ஏற்படும் குறைபாடு மட்டுமே.
சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த ஆட்டிசம் பாதித்த 10 வயதுக்குட்பட்ட நான்கு சிறுவர்கள் தனுஷ்கோடி அரிச்சல் முனையில் இருந்து தலைமன்னார் வரையிலும், பின்னர் தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி அரிச்சல் முனை வரையிலும் என சுமார் 58 கடல் மைல் தொலைவை தொடர் நீச்சல் முறையில் கடலில் நீந்தி 18 மணி 12 நிமிஷத்தில் கடந்திருக்கிறார்கள்.
ஒரு கடல் மைல் 1.85 கி.மீ. ஆகும். இதனடிப்படையில், இந்தச் சிறுவர்கள் சுமார் 107 கி.மீ. தொலைவை கடலில் இரவு-பகல் எனப் பாராது நீந்திக் கடந்திருக்கிறார்கள். முறையான பயிற்சியால் இப்படி ஓர் உலக சாதனையை இந்தச் சிறுவர்கள் நிகழ்த்தியிருக்கிறார்கள்.
ஆட்டிசம் குறித்த முழுமையான விழிப்புணர்வு இல்லாததால், ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளையும் மனநலன் பாதிக்கப்பட்ட குழந்தைகளாகவே கருதும் மனநிலை நம் சமூகத்தில், குறிப்பாக கிராமப்புறங்களில் நிலவுகிறது. இதனால், உலக சாதனை படைப்பதற்குரிய திறமை இருந்தும் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதாலேயே பலர் புறக்கணிக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
Advertisement
உலக மக்கள்தொகையில் ஒரு சதவீதம் அதாவது சுமார் 7.5 கோடி பேர் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவர். இந்தியாவில் 68 குழந்தைகளில் ஒரு குழந்தை ஆட்டிசம் பாதிப்பு உள்ள குழந்தையாக உள்ளது. 2020-ஆம் ஆண்டிலிருந்து ஆட்டிசத்தால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 128% அதிகரித்து வருவதாக வெளியாகியுள்ள தகவல் கவலைக்குரியதாகும்.
குழந்தைகள் 2 வயதை அடைவதற்குள் அவர்களின் ஆட்டிச பாதிப்பைக் கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்வது நன்று. ஆட்டிசம் என்பது மூளையில் ஏற்பட்ட நரம்பியல் கோளாறு காரணமாக ஏற்படும் குறைபாடு மட்டுமே. ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 40% பேர் பேச்சுத்திறன் அற்றவர்கள். பெரியவர்களில் 75% பேர் முறையான தொழில் பயிற்சி இல்லாததால் வேலை ஏதுமின்றி உள்ளனர். ஆட்டிசக் குறைபாட்டை முழுமையாகக் குணப்படுத்த இயலாது. எனினும், முறையான மருத்துவ சிகிச்சை, பேச்சுப் பயிற்சி, தொழில்சார் பயிற்சி அளித்து ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டோர் எதிர்கொள்ளும் சவால்களுக்கு தீர்வு கண்டு சாதனை படைக்கும் மனிதர்களாக அவர்களை மாற்ற முடியும்.
ஆட்டிசத்தால் ஏற்படும் பாதிப்புகளை அடிப்படையாகக் கொண்டு 'ஆஸ்பெர்கஸ்', 'ஆர்ட்டிஸ்டிக்' அல்லது 'கிளாசிக் ஆட்டிசம்', 'குழந்தைப் பருவ சிதைவு ஆட்டிசம்', 'ரெட் சிண்ட்ரோம்', 'இதர குறைபாடுகளை உண்டாக்கும் ஆட்டிசம்' என வகைப்படுத்தப் படுகிறது. ஆட்டிசத்தின் வகை அறிந்து அதற்கேற்ப மருத்துவ, உடலியக்க, பேச்சு தொடர்பான பயிற்சி அளித்தால் ஆட்டிசம் பாதிப்புக்குள்ளான குழந்தைகள் முழுவதுமாக இல்லை என்றாலும், ஓரளவு சராசரி மனிதர்கள்போல எதிர்காலத்தில் வாழ முடியும்.
ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்போதும் ஒருவர் உடனிருந்து உதவ வேண்டும். குடும்பத்துக்கும், சமூகத்துக்கும் இவர்கள் பாரமாக இருப்பார்கள்; சில ஆண்டுகளில் மரணத்தை சந்திக்க நேரிடும் என்கிற உண்மைக்கு மாறான பல கருத்து நம் சமூகத்தில் பரவலாக உள்ளது. இதை தவறு என்று நிரூபித்தவர் அமெரிக்காவைச் சேர்ந்த டொனால்ட் கிரே டெம்ப்பிள். மருத்துவ உலகில் ஆட்டிசம் பாதிப்புக்குள்ளானவர் என முதன்முதலாக அதிகாரபூர்வமாக கண்டறியப்பட்ட இவர், வங்கிப் பணியாளராகப் பணியாற்றியதுடன் பியானோ இசைக் கலைஞராகவும் விளங்கினார். தனது 89-ஆவது வயதில் காலமான இவர் தமது இறுதிக்காலம் வரை சராசரி மனிதரைப் போன்றே வாழ்ந்தார்.
ஆட்டிசம் பாதிப்பால் ஒரு குறிப்பிட்ட குழந்தைகளிடம் காணப்படும் 'சாவன்ட் சிண்ட்ரோம்' அந்தக் குழந்தையின் சிறப்புத் திறனை வெளிப்படுத்தக் கூடியதாகும். இந்தக் குழந்தைகள், எதையும் நுட்பமாக கவனிக்கும் திறமை, அதீத நினைவாற்றல் போன்ற உளரீதியான திறனில் சராசரி குழந்தைகளைவிட மேம்பட்டிருப்பதுடன் நன்கு பயிற்சி அளிக்கப்படும் நிலையில் இசை, ஓவியம் போன்ற நுண் கலைகளிலும் மேதைகளாகும் திறன் பெற்றவர்களாக இருப்பார்கள்.
ஆட்டிசம் தொடர்பான விழிப்புணர்வின் ஒரு நடவடிக்கையாக அனைத்து அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 'இப்பள்ளியில் அறிவுசார் குறைபாடு மற்றும் ஆட்டிச நிலை குழந்தைகள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்' என்று அறிவிப்பு செய்வதுடன், மாணவர் சேர்க்கையின்போது விநியோகிக்கப்படும் விண்ணப்பத்திலும் மேற்படி விளம்பரம் குறித்து தெரிவிக்கப்பட வேண்டும் என மாநில தொடக்கக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
ஆட்டிசம் பாதித்த குழந்தைகளைப் பராமரிக்கும் ஆசிரியர்களுக்கு உரிய சிறப்புப் பயிற்சிகளையும் அளிக்க வேண்டும். நம் நாட்டில் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப சிறப்புப் பள்ளிகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வரும் ஆட்டிசம் மற்றும் அறிவுசார் குறைபாடுள்ளவர்கள், வரிசையில் காத்திருப்பது சிரமம் என்பதால் இவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என தமிழக நல்வாழ்வுத் துறை அண்மையில் அனுப்பிய சுற்றறிக்கை வரவேற்கத்தக்கது.
ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் பணிபுரிபவராயின் குறிப்பாக ஒற்றை பெற்றோராக இருப்பின் அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு உதவும் பொருட்டு மனிதாபிமான அடிப்படையில் பணியிடத்தில் சிறப்பு விடுப்பு உள்ளிட்ட சலுகைகள் வழங்க வேண்டியது சட்டமாக்கப்பட வேண்டும்.
பெற்றோர் இல்லா ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளைப் பராமரிப்பதற்காக பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இல்லங்களை நடத்தினாலும், அரசு சார்பில் இது போன்ற இல்லங்கள் நடத்தப்படுவது அதிகரிக்கப்பட வேண்டும்.
ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் மற்றும் பயிற்சியாளர்களுக்கு ஒத்துழைப்பு தருவது, அரசு கொண்டுவரும் அவர்கள் நலன் தொடர்பான திட்டங்களை முறையாக நடைமுறைப்படுத்துதல், ஆட்டிசம் பாதிப்புக்கு உள்ளானவருக்கு பொது வெளியில் உதவும் சமூக மனப்பான்மை ஆகியவற்றால் ஆட்டிசம் பாதிப்பை பெருமளவு கட்டுப்படுத்தலாம்.