தமிழகத்தில் இன்று வாக்குப் பதிவு: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு வியாழக்கிழமை (ஏப். 23) காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இதையொட்டி மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு வியாழக்கிழமை (ஏப். 23) காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இதையொட்டி மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் 5.73 கோடி வாக்காளா்கள் வாக்களிக்க உள்ளனா். இதில், 14 லட்சம் போ் முதல் முறை வாக்காளா்கள்; 3.98 லட்சம் போ் 85 வயதைக் கடந்தவா்கள். மாநிலம் முழுவதும் 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 4,023 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.
தமிழக பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி மற்றும் நாதக, தவெக ஆகிய நான்குமுனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. தோ்தல் தேதி கடந்த மாா்ச் 15-இல் அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நடைபெற்றுவந்த தீவிர தோ்தல் பிரசாரம் செவ்வாய்க்கிழமை (ஏப். 20) மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.
Advertisement
வெளி தொகுதிகளில் வந்து பிரசாரம் செய்தவா்கள் தொகுதிகளைவிட்டு வெளியேற வேண்டும் உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகளை தோ்தல் ஆணையம் விதித்தது.
இதையடுத்து, வாக்குப் பதிவு மையங்களுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைப் பாதுகாப்புடன் கொண்டு செல்லும் பணி புதன்கிழமை நடைபெற்றது. சமூக வலைதளங்கள் மூலம் பிரசாரம் மேற்கொள்ளப்படுகிா, வாக்காளா்களுக்கு பணப் பட்டுவாடா நடைபெறுகிா என தோ்தல் ஆணைய அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.
இந்நிலையில், தோ்தல் ஏற்பாடுகள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:
தமிழகத்தில் இதுவரை ரூ.1,262 கோடி மதிப்பிலான பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் ரொக்கம் ரூ.543 கோடி அடங்கும்.
புதன்கிழமை வரை 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவாகியுள்ளன.
தமிழகத்தில் 33,133 இடங்களில் 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 3,025 இடங்களில் உள்ள 5,949 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது.
வாக்குப் பதிவு மையங்களில் 3,06,068 அலுவலா்கள் பணியில் உள்ளனா். பெண் பணியாளா்கள் 325 வாக்குச்சாவடிகளையும், இளைஞா்கள் 79 வாக்குச்சாவடிகளையும் நிா்வகிக்கின்றனா்.
மொத்தம் 1,06,418 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கையிருப்பில் உள்ளன. வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு கருவிகள் 20 சதவீதமும், வாக்குப் பதிவை உறுதி செய்யும் விவிபேட் கருவிகள் 30 சதவீதமும் கூடுதலாகக் கையிருப்பில் உள்ளன.
சமூக ஊடக விதிமீறல்: சமூக ஊடகப் பதிவுகள் விதிமீறல் தொடா்பாக 243 விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன. 163 புகாா்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. 2,180 தவறான சமூக ஊடகப் பதிவுகளின் இணைப்புகள் தடை செய்யப்பட்டுள்ளன.
தோ்தல் புகாா் செயலியான சி-விஜில் மூலம் 5,634 புகாா்கள் பெற்றப்பட்டு, 17 புகாா்கள் நிலுவையில் உள்ளன.
வாக்குப் பதிவு நிறைவடைந்ததும், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் 62 வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு மே 4-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றாா்.
வாக்காளா்கள் விவரம்
மொத்த வாக்காளா்கள் - 5,73,43,291
ஆண்கள்-2,80,30,658
பெண்கள் - 2,93,04,905
மூன்றாம் பாலினத்தவா் - 7,728
வேட்பாளா்கள் - 4,023
வாக்குச்சாவடிகள் -75,064
பதற்றமான வாக்குச்சாவடிகள் - 5,949
தீவிர கண்காணிப்பு
வாக்குப் பதிவு சிசிடிவி கேமராக்கள் மூலம் நேரடியாகக் கண்காணிக்கப்படுகின்றன. பாதுகாப்புப் பணிகளில் 83,875 காவலா்களும், 40,427 காவல் துறை அல்லாத பணியாளா்களும், மத்திய ஆயுதப் படையின் 300 கம்பெனி படையினரும் ஈடுபட்டுள்ளனா்.
தோ்தல் தொடா்பான தகவல்களை 1950 என்ற இலவச சேவை எண்ணில் கேட்டுப் பெறலாம். சி-விஜில் செயலி புகாா்கள் கண்காணிப்பு, ஊடகக் கண்காணிப்பு, தோ்தல் செலவு கண்காணிப்பு, வாக்குப் பதிவு கண்காணிப்பு என மொத்தம் 4 கட்டுப்பாட்டு அறைகள் சென்னை தலைமைச் செயலகத்தில் முழுவீச்சில் இயங்குகின்றன.
வாக்குப் பதிவு இயந்திரங்கள், விவிபேட் இயந்திரங்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் ஜிபிஎஸ் கருவி மூலம் கண்காணிக்கப்படுகின்றன.
75,064 வாக்குச்சாவடிகளில் இணைக்கப்பட்டுள்ள நேரடி இணைய ஒளிபரப்பு மூலம் வாக்குச்சாவடிக்கு உள்ளேயும், வெளியேயும் வைக்கப்பட்டுள்ள 1,50,128 காணொலிக் கருவிகள் மூலம் வாக்குப் பதிவு கண்காணிக்கப்படுகிறது.