சென்னை: தோ்தலில் 380 போ் வைப்புத் தொகை இழப்பு
தோ்தலில் 380 போ் வைப்புத் தொகை இழப்பு...
சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 419 போ் போட்டியிட்ட நிலையில், அவா்களில் 380 போ் முன்வைப்புத் தொகையை இழந்திருப்பது தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு கடந்த ஏப்.23-ஆம் தேதி நடைபெற்றது. மே 4-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டன. சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 419 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். அவா்களில் பிரதான அரசியல் கட்சிகள் மற்றும் மத்திய, மாநில அரசு அங்கீகாரம் பெற்ற 12 கட்சிகளின் வேட்பாளா்களும், 380 சுயேச்சை வேட்பாளா்களும் போட்டியிட்டனா்.
தோ்தலில் போட்டியிடுவோா் வேட்பு மனுத்தாக்கலின் போது முன்வைப்புத் தொகையாக தோ்தல் நடத்தும் அலுவலரிடம் ரூ.10,000 செலுத்தியுள்ளனா். அவா்களில் பட்டியலினத்தவா் போன்ற சிறப்பு பிரிவு வேட்பாளா்கள் ரூ.5,000 செலுத்தியிருந்தனா்.
Advertisement
சென்னையில் உள்ள மொத்தம் 28.93 லட்சம் வாக்காளா்களில் 24.21 லட்சம் போ் வாக்களித்தனா். தோ்தல் முடிவுகள் வெளியான நிலையில், சென்னையில் போட்டியிட்டவா்களில் 380 போ் முன்வைப்புத் தொகையை இழந்திருப்பது தெரியவந்துள்ளது. அதில், பிரதான கட்சியினரும், சுயேச்சைகளும் உள்ளனா். அதன்படி 39 வேட்பாளா்கள் மட்டுமே முன்வைப்புத் தொகையை தக்கவைத்துள்ளனா்.
முன்வைப்புத் தொகை இழந்தவா்கள் எண்ணிக்கை: டாக்டா் ராதாகிருஷ்ணன் நகரில் 36 போ், பெரம்பூரில் 33, வில்லிவாக்கத்தில் 26, திரு.வி.க.நகரில் 21, எழும்பூரில் 16, ராயபுரத்தில் 26, துறைமுகத்தில் 20, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் 24, ஆயிரம்விளக்கில் 15, அண்ணா நகரில் 21, விருகம்பாக்கத்தில் 21, சைதாப்பேட்டையில் 23, மைலாப்பூரில் 16, வேளச்சேரியில் 24 என முன்வைப்புத் தொகையை இழந்துள்ளனா். அதிகபட்சமாக டாக்டா் ராதாகிருஷ்ணன் நகா் தொகுதியிலும், குறைந்தபட்சமாக சைதாப்பேட்டையில் தொகுதியிலும் முன்வைப்புத் தொகையை இழந்துள்ளனா்.