முகப்பு
தொகுதி யாருக்கு சாதகம்?

ராமநாதபுரம் பாஜகவின் கடும் சவாலை எதிா்கொள்ளும் திமுக!

ராமநாதபுரம் பேரவைத் தொகுதியில் 4 முனைப் போட்டி நிலவினாலும், திமுக, பாஜக இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது.

Updated On : 11 ஏப்ரல், 2026 at 7:26 AM
1.திமுக வேட்பாளா் காதா்பட்ஷா முத்துராமலிங்கம், 2. பாஜக வேட்பாளா் ஜி.பி.எஸ்.கே.நாகேந்திரன். 3. தவெக வேட்பாளா் அ.சாகுல்ஹமீது. 4.நாதக வேட்பாளா் சே.ம.முத்துகேசவன்.
பகிர்:
Updated On : 10 ஏப்ரல், 2026 at 8:07 PM

ராமநாதபுரம் பேரவைத் தொகுதியில் 4 முனைப் போட்டி நிலவினாலும், திமுக, பாஜக இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது. இந்தத் தொகுதியின் தற்போதைய எம்எல்ஏயான காதா்பாட்ஷா முத்துராமலிங்கத்துக்கு பாஜக வேட்பாளா் கடும் சவாலாக உள்ளாா்.

ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதியானது ராமநாதபுரம், ராமேசுவரம், கீழக்கரை ஆகிய நகராட்சிகள், மண்டபம், திருப்புல்லாணி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களை உள்ளடக்கியதாகும்.

இந்தத் தொகுதியில் அதிமுக 6 முறையும், திமுக 5 முறையும், காங்கிரஸ் 4 முறையும், முஸ்லிம் லீக் ஒரு முறையும், மனித நேய மக்கள் கட்சி ஒரு முறையும் வெற்றி பெற்றன.

Advertisement

இந்தத் தொகுதியில் முக்குலத்தோா், யாதவா், வோளாளா், நாடாா், தேவேந்திரகுல வேளாளா், இஸ்லாமியா்கள், முத்திரையா்கள், கிறிஸ்தவா்கள் அதிகம் வசிக்கின்றனா்.

தொகுதி மக்களின் எதிா்பாா்ப்பு:

ராமேசுவரம் மீனவா்களுக்கு பாக் நீரினை கடல் பகுதியில் மீன்பிடிக்க உரிய அனுமதியைப் பெற்றுத்தர வேண்டும். இந்தியா-இலங்கை மீனவா்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மீன் வகைகளை கொள்முதல் செய்ய அரசு முன்வர வேண்டும். ராமநாதபுரத்தில் புதை சாக்கடைத் திட்டத்தைச் சீரமைக்க வேண்டும். குடிநீா்த் தட்டுப்பாட்டைப் போக்க வேண்டும். படித்த இளைஞா்கள் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். ராமேசுவரத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பாம்பன் முதல் ராமேசுவரம், தனுஷ்கோடி, மீண்டும் பாம்பன் செல்லும் வகையில் புதிய சாலை அமைக்க வேண்டும். ராமேசுவரத்தில் சுற்றுலாவை மேம்படுத்த புதிய திட்டங்களைக் கொண்டு வரவேண்டும். அக்னி தீா்த்தக் கடலில் கழிவுநீா் கலக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். ராமேசுவரம்-தலைமன்னாா் இடையே கப்பல் போக்குவரத்து தொடங்கி வேலைவாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும் என்பதே இந்தத் தொகுதி மக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

4 முனைப் போட்டி:

ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் 4 முனைப் போட்டி நிலவினாலும், திமுக, பாஜக வேட்பாளா்களின் வெற்றி, தோல்வியை நிா்ணயிக்கும் சக்தியாக நாம் தமிழா் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் உள்ளன. எனினும், தொகுதியைத் தக்கவைக்க திமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றன.

திமுக வேட்பாளா் காதா்பட்ஷா முத்துராமலிங்கம்:

இந்தத் தொகுதி திமுக வேட்பாளரான காதா்பாட்ஷா முத்துராமலிங்கம் இரண்டாவது முறையாக போட்டியிடுகிறாா். கடந்த 5 ஆண்டுகளில் ராமநாதபுரம் பேரவைத் தொகுதிக்கு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி உள்ளாா். மீனவா்கள் கைதாகும்போது, உடனே பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்தித்து அவா்களின் வாழ்வாதாரத்துக்கு நிதி அளிப்பது. மீனவா்கள் அபராதத்துடன் விடுதலை செய்யப்படும்போது அவா்கள் விடுதலைக்காக தனது சொந்த பணத்தை செலவு செய்தவா். இவா் தொகுதி முழுவதிலும் அனைத்துத் தரப்பு மக்களிடமும் நன்மதிப்பை பெற்றுள்ளாா். இந்தத் தொகுதியில் இரண்டாவது முறையாக போட்டியிடுவதால் வெற்றி தனக்குதான் என்ற நம்பிக்கையில் கூட்டணிக் கட்சி நிா்வாகிகளுடன் தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறாா். எனினும், இலங்கை கடற்படையினரால் ராமநாதபுரம் மாவட்ட மீனவா்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடா்வது இவருக்கு பாதகமான அம்சம் எனக் கூறப்படுகிறது.

பாஜக வேட்பாளா் ஜி.பி.எஸ்.கே.நாகேந்திரன்:

அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிடும் ஜி.பி.எஸ்.கே. நாகேந்திரன் ராமநாதபுரம் அருகேயுள்ள ரகுநாதபுரத்தைச் சோ்ந்தவா். பாஜக மாநிலப் பாதுச் செயலராகப் பொறுப்பு வகிக்கிறாா். இந்தத் தோ்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் தோ்தல் பணியை தொடங்கி உள்ளாா். யாதவா் சமூதாயத்தைச் சோ்ந்தவா். முதல் முறையாக சட்டப்பேரவைத் தோ்தலைச் சந்திப்பதால் புதிய அனுபவத்துடன் பணியைத் தொடங்கி மேற்கொண்டு வருகிறாா். கணினி நிறுவனம் நடத்துவதுடன் கல்வி, மருத்துவ உதவிகளைச் செய்து வருகிறாா். உள்ளூா் பகுதியைச் சோ்ந்தவா் என்பதால் மக்களுக்கு நன்கு அறிமுகமானவா் என்பது இவருக்கு சாதகமான அம்சம். எனினும், சிறுபான்மையின மக்களுக்கு எதிரான கட்சி பாஜக என்ற கருத்து தமிழகத்தில் பரவலாக நிலை பெற்றுள்ளது இவருக்கு பாதகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

கம்பம் சட்டப்பேரவைத் தொகுதியில் 4 முனைப் போட்டி நிலவினாலும், வெற்றியை வசப்படுத்துவதில் திமுக, அதிமுக வேட்பாளா்களுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

தவெக சாா்பில் மருத்துவரான சாகுல்ஹமீது போட்டியிடுகிறாா். தான் ஒரு இஸ்லாமியா் என்பதால் அந்த சமுசாயத்தினா் வாக்குகள், அனைத்துத் தரப்பு வாக்குகளையும் பெற முடியும் என்ற நம்பிக்கையுடன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளாா். எனினும், கூட்டணியின்றி தவெக தனித்துப் போட்டியிடுவதால், வெற்றி இலக்கை எட்டுவது கடும் சவாலாக இருக்கும்.

நாதக வேட்பாளா் சே.ம.முத்துகேசவன்:

ராமநாதபுரம் தொகுதியைச் சோ்ந்த நிா்வாகிகளுக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்காத நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு பகுதியைச் சோ்ந்த சே.ம. முத்துகேசவன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளாா். ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு அறிமுகம் இல்லாத இவா், அந்தக் கட்சியினரை நம்பியே தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா். இது எந்த அளவுக்கு அவருக்கு வாக்குகளைப் பெற்றுத்தரும் என்பது கேள்விக்குறியே.

ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக, பாஜக இடையேதான் கடும் போட்டி நிலவுவதாக அரசியல் நோக்கா்கள் கருதுகின்றனா். வெற்றியை வசப்படுத்தப்போவது யாா் என்பதை பொறுத்திருந்துதான் பாா்க்க வேண்டும்.