முகப்பு
கண்ணோட்டம்

எனக்காக மனம் இரங்குபவர் யார்?

மனிதர்களை நாடினால் துன்பம்தான், எனவே இறைவனையே நாட வேண்டும். யார் மறுத்தாலும் மறுக்காத, அருளை வாரி வழங்க எப்போதும் காத்திருக்கின்ற ஒரு கருணைக் கார்முகில் தம்மை எபோதும் காத்துவருவது சுவாமிஜிக்குத் தெரியும்

Updated On : 21 ஜூன் 2013, 5:25 pm IST
பகிர்:

மனிதர்களை நாடினால் துன்பம்தான், எனவே இறைவனையே நாட வேண்டும். யார் மறுத்தாலும் மறுக்காத, அருளை வாரி வழங்க எப்போதும் காத்திருக்கின்ற ஒரு கருணைக் கார்முகில் தம்மை எபோதும் காத்துவருவது சுவாமிஜிக்குத் தெரியும். 'யார்தான் எனக்கு மனமிரங்குவார்கள்? யாரும் இல்லை ஒரே ஒருவரைத் தவிர என்று பின்னாளில் சுவாமிஜி கூறினாரே, அந்த ஒரே ஒருவரை நாட எண்ணினார் சுவாமிஜி. அவரே அன்னை ஸ்ரீ சாரதா தேவி, தமது நோக்கத்தைத் தெளிவுபடுத்தி அன்னையின் அனுமதியையும் ஆசிகளையும் பெற நினைத்தார் அவர்.

அன்பர்களும் நண்பர்களும் சுவாமிஜியின் மேலை நாட்டுப் பயணத்திற்கான ஏற்பாடுகளை விரைவுபடுத்திக் கொண்டிருந்தனர். சுவாமிஜியோ தமக்குள் ஆழ மூழ்கிக் கொண்டிருந்தார், குருதேவரின் அருளாணையை எதிர்பார்த்துக் காத்திருந்தார். அதுவும் வந்தது. ஒரு நாள் இரவு. சுவாமிஜி அரைதூக்கத்தில் படுத்திருந்தார். அவரது கண்முன்னால் அலை பொங்கும் கடல் தெரிந்தது. கரையில் குருதேவர் நின்றிருத்தார். திடீரென்று நீர்மீது நடந்து உள்ளே செல்ல ஆரம்பித்தார்  சற்று தொலைவு சென்று திரும்பிப் பார்த்து சுவாமிஜியை அழைத்து, தம்மைத் தொடருமாறு கூறினார். இந்தக் காட்சி ஒரு நாள் அல்ல, இரு நாள் அல்ல, பல நாள் தொடர்ந்தது.

சுவாமிஜியின் அறைக்கு அடுத்த அறையில் நரசிம்மாச்சாரியார் படுத்திருப்பார். தொடர்ந்து இரவுகளில் சுவாமிஜி யாருடனோ பேசுவதை அவர் கேட்டார். அந்த உரையாடல் நீண்ட நேரம் தொடரவும் செய்யும். நரசிம்மருக்கு ஒன்றும் புரியவில்லை. ஒருநாள் அவர் நேரடியாக சுவாமிஜியிடமே கேட்டார். 'சுவாமிஜி, இரவில் நீங்கள் யாருடன் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்?' சுவாமிஜி ஏதேதோ சொல்லி மழுப்ப முயற்சித்தார். ஆனால் நரசிம்மர் விடவில்லை. கடைசியாக சுவாமிஜி கூறினார்.

Advertisement

Advertisement

சிகாகோ சர்வமத மகாசபை பற்றிய எண்ணத்தை நான் ஏறக்குறைய விட்டிருந்தேன். ஆனால் கடந்த பல இரவுகளாக ஸ்ரீராமகிருஷ்ணர் தோன்றுகிறார். தொடர்ந்து என்னிடம், "நீ எனக்காக வேலை செய்ய வேண்டும். நீ போயே தீர வேண்டும். ஒன்று மட்டும் நிச்சயமாக அறிந்துகொள் அந்தச் சபை உனக்காகவே கூட்டப்படுகிறது. தயங்காதே, உன் பேச்சைக் கேட்டு மக்கள் பிரமித்து நிற்பார்கள் என்று கூறுகிறார். நான் தயங்கத்தயங்க அவர் என்னை மேன்மேலும் வற்புறுத்துகிறார். கடைசியாக அவரது கட்டனையை ஏற்றுக் கொண்டேன். இதோ தயாராகிக் கொண்டிருக்கிறேன்.

இதன்பிறகு எல்லா தயக்கங்களும் சுவாமிஜியை விட்டு அகன்றதுபோல் இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.