முகப்பு
சிறப்புச் செய்திகள்

தவறான திட்டமிடலால் தடம்புரளும் ரயில் பயணிகள் நிலை! என்னதான் பிரச்னை?

எழும்பூர் - தாம்பரம் வழித்தடத்தில் தவறான திட்டமிடலால் தடம்புரளும் பயணிகள் நிலை

Updated On : 25 பிப்ரவரி 2026, 1:47 pm IST
பூங்கா நகா் ரயில் நிலையத்தில் அலைமோதும் கூட்டம். - DPS
பகிர்:

கடற்கரையிலிருந்து தாம்பரம் வரை இயக்கப்பட்டு வந்த புறநகர் ரயில் சேவை 204 -லிருந்து முதற்கட்டமாக 160 ஆகக் குறைக்கப்பட்டது. இதனால் மக்கள் கடும் பிரச்னையை சந்தித்த நிலையில் மேலும் இது 115 ஆகக் குறைந்தது.

கடற்கரை - தாம்பரம் இடையே உள்ள கிண்டி, நுங்கம்பாக்கம், பரங்கிமலை, எழும்பூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஏற்கனவே கூட்ட நெரிசலில் அவதிப்பட்டு வந்தவர்களுக்கு தற்போதைய நிலை கடுந்துயரத்தைக் கொடுத்து வருகிறது.

அலைமோதும் கூட்டத்தில் சிக்கி என்னசெய்வது என தெரியாமல் தவிக்கும் பயணிகளோ, வேளச்சேரி - பரங்கிமலை வரையில் பறக்கும் ரயில் சேவை பணிகளை முழுமையாக முடித்துவிட்டு, எழும்பூர் ரயில் நிலையப் பணிகளைத் தொடங்கியிருக்கலாம். அப்படியிருந்தால் கடற்கரை, கோட்டை, சென்னை சென்டிரல் செல்லும் பயணிகளாவது பறக்கும் ரயில் சேவையை பயன்படுத்திக் கொண்டிருப்பார்கள். எழும்பூர் வழியாக செல்ல வேண்டியவர்கள் மட்டுமே இந்த ரயில் சேவையைப் பயன்படுத்தியிருப்பார்கள்.. கூட்டம் குறைந்திருக்கும் என்கிறார்கள்.

Advertisement

Advertisement

ஆனால், ரயில்வே துறை அதிகாரிகளோ, மிக விரைவாக எழும்பூர் ரயில் நிலைய பணிகளை முடிக்க வேண்டியிருக்கிறது. பறக்கும் ரயில் சேவையோ, வரும் மார்ச் மாதத்தில்தான் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதன்பிறகு, இந்தப் பணிகளை தொடங்கினால் தாமதம் ஆகும் என முன்கூட்டியே தொடங்கப்பட்டதாகக் கூறுகிறார்கள்.

என்னதான் பிரச்னை?

கடந்த 2024ஆம் ஆண்டு முதல் சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் ரூ.820 கோடியில் மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படும் 10, 11 ஆகிய நடைமேடைகள் மற்றும் தண்டவாளங்களில் பிப். 20-ஆம் தேதி முதல் மறுசீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக அந்த நடைமேடைகளில் இருந்து இயக்கப்பட்டு வந்த புறநகர் மின்சார ரயில்கள் 5, 6 ஆகிய நடைமேடைகளில் இருந்து இயக்கப்படுகின்றன.

நாள்தோறும் கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு நிலையங்களுக்கு எழும்பூா் வழியாக 204 மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வந்துள்ளது. ஆனால் எழும்பூா் ரயில் நிலைய மேம்பாட்டு பணியால் கடற்கரை-எழும்பூா், எழும்பூா்- சேத்துப்பட்டு என இரு இடங்களில் தண்டவாளங்களைக் கடக்க சிக்னலுக்கு காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், இவ்வழித்தடத்தில் வழக்கமாக மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் இயக்கப்படும் ரயில்கள் வெறும் 15 கி.மீ. வேகம் என குறைக்கப்பட்டுள்ளன. இதில்லாமல் ஒவ்வொரு ரயிலும் சிக்னலுக்கு காத்திருப்பதால் எழும்பூா் நிலையத்தில் இருந்து சேத்துப்பட்டை கடக்க சுமாா் 20 நிமிடங்கள் ஆவதாக பயணிகள் கூறுகின்றனா்.

இதனால் செங்கல்பட்டு, தாம்பரம் பகுதிகளில் இருந்து பூங்கா நகா், கடற்கரை நிலையங்களுக்குச் செல்ல வேண்டிய பயணிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனா். இதையடுத்து பயணிகளின் சிரமத்தைக் குறைக்க எழும்பூா், சேத்துப்பட்டு நிலையங்களில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டாலும், ரயில் நிலையத்திலிருந்து பேருந்தைப் பிடித்து போக்குவரத்தில் சிக்கி மீண்டும் ரயில் ஏறுவதோ அல்லது தங்கள் இடங்களுக்குச் செல்வதோ கால விரையத்தையே ஏற்படுத்துவதாகவும் பயணிகள் கூறுகிறார்கள்.

ஏற்கனவே ரயில் குறைக்கப்பட்டு, தாமதம் ஆகி வந்த நிலையில், தாமதத்தைக் குறைக்க வேறு வழிகளைத் தேடாமல், 69 ரயில் சேவைகளாகக் குறைக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு சோதனைக்கு மேல் சோதனைக்கு உள்ளாக்குவதாக பயணிகள் தெரிவிக்கின்றனா்.

ரயிலில் கூட்டமாக இருந்தால் விட்டுவிட்டு அடுத்த ரயிலில் செல்லலாம் என பயணிகள் காத்திருப்பார்கள். ஆனால், தற்போதோ, ரயில் நிலையமே கூட்டமாக இருப்பதால், வயதானவர்கள், பெண்கள் ரயில் நிலையத்துக்குள் செல்ல முடியாமல் மாற்று போக்குவரத்துகளைத் தேடி ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது.

ரயில்வே அதிகாரிகளின் போதிய திட்டமிடல் இன்மையே இதற்குக் காரணம் என மக்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள். இதுபோன்ற நிலை மும்பை போன்ற நகரங்களில் ஏற்பட்டிருந்தால் நிச்சயம் மண்டல அதிகாரியே பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பார் என்று கொதிக்கிறார்கள்.

நகரின் போக்குவரத்தில் இதயம் போல இயங்கி வருகிறது எழும்பூர் - தாம்பரம் புறநகர் ரயில் சேவை. முக்கிய அலுவலகங்கள், முக்கிய பகுதிகளை வெகு இலகுவாக இணைப்பதுடன், 5 நிமிடங்களுக்கு ஒரு ரயில் என வேகமாகத் துடித்துவந்த ரயில் சேவை தற்போது துடிப்பது சற்றுக் குறைந்திருப்பதால் நகரின் போக்குவரத்தே முடங்கி தடம்புரளும் நிலை எழுந்துள்ளது.

பயணிகளுக்காக, எழும்பூரிலிருந்து பரங்கிமலை, கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு நிலையங்களுக்கு 26 சிறப்பு புறநகர் மின்சார ரயில்கள் இரு மாா்க்கத்தில் இயக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா். இதனால், பயணிகள் பரங்கிமலை ரயில் நிலையத்திலிருந்து மெட்ரோ ரயிலில் ஏறி சென்னை சென்டிரல், எழும்பூர், சென்னை கடற்கரை மற்றும் இதர ரயில் நிலையங்களுக்குச் செல்ல வழிவகை ஏற்படும் என்று கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments