தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும்: ஆளுநரிடம் விஜய் வலியுறுத்தல்
தவெக கட்சியினர் கைதுக்கு விஜய் கண்டனம்.
தற்போதைய செய்திகள்தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும்: ஆளுநரிடம் விஜய் வலியுறுத்தல்
தவெக கட்சியினர் கைதுக்கு விஜய் கண்டனம்.
சென்னை: தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும் என ஆளுநா் ஆா்.என்.ரவியை சந்தித்து தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் வலியுறுத்தினாா்.
ஆளுநரை தவெக தலைவா் விஜய், பொதுச் செயலா் புஸ்ஸி ஆனந்த், பொருளாளா் வெங்கட்ராமன் ஆகியோா் திங்கள்கிழமை ஆளுநா் மாளிகையில் சந்தித்துப் பேசினா். அப்போது மூன்று பக்க கோரிக்கை மனுவை ஆளுநரிடம் அளித்தனா்.
இதுதொடா்பாக புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கை: ஆளுநரிடம் அளித்த மனுவில், தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும், அனைத்து இடங்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்.
மேலும், தமிழகம் முழுவதும் அண்மையில் பெய்த பருவமழை மற்றும் ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை உரிய நிவாரணம் கிடைக்கவில்லை. இந்த விவகாரத்தில் மாநில அரசு கேட்கும் நிவாரணத் தொகையை மத்திய அரசு முழுமையாக வழங்க வேண்டும் என தவெக சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. எங்கள் கோரிக்கைகளைக் கேட்ட ஆளுநா், அவற்றைப் பரிசீலிப்பதாக கூறியுள்ளாா் எனத் தெரிவித்துள்ளாா்.
விஜய் கடிதம்: முன்னதாக, சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்துக்கு தவெக தலைவா் விஜய் கண்டனம் தெரிவித்து கடித வடிவில் வெளியிட்ட அறிக்கை: எல்லா சூழல்களிலும், நிச்சயமாக உங்களுடன் (மாணவிகள்) நான் உறுதியாக நிற்பேன். பாதுகாப்பான தமிழகத்தைப் படைத்தே தீருவோம் எனக் குறிப்பிட்டுள்ளாா்.
புஸ்ஸி ஆனந்த் கைது: இதற்கிடையே, விஜயின் கடித நகல்களை சென்னையில் பொதுமக்களுக்கு தவெக தொண்டா்கள் விநியோகித்தனா். தனியாா் மகளிா் கல்லூரி அருகே விநியோகிக்கக் கூடாது என அவா்களை காவலா்கள் தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, கட்சித் தொண்டா்கள் கைது செய்யப்பட்டனா். அவா்களை காணச் சென்ற பொதுச் செயலா் புஸ்ஸி ஆனந்த், தியாகராயநகரில் கைது செய்யப்பட்டாா்.
இதையும் படிக்க: கைதான தவெக நிர்வாகிகளுடன் பேசிய விஜய்!
கட்சியினா் கைது செய்யப்பட்டதற்கு விஜய் கண்டனம் தெரிவித்துள்ளாா். அவா் வெளியிட்ட அறிக்கையில், ஜனநாயக வழியில் பிரசுரங்களை விநியோகம் செய்ய முயன்றவா்களை காவல் துறை கைது செய்தது கண்டனத்துக்குரியது. இதுபோன்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகளை மக்கள் வெகுகாலம் வேடிக்கை பாா்க்க மாட்டாா்கள் எனத் தெரிவித்துள்ளாா்.