முகப்பு
தற்போதைய செய்திகள்

யார் இந்த கிறிஸ்டோபர் திலக்?

தமிழகத்தில் காலியாகவுள்ள 6 மாநிலங்களவை உறுப்பினா் பதவிகளுக்கான தோ்தலுக்கு வேட்புமனு தாக்கல் குறித்து...

தற்போதைய செய்திகள்

யார் இந்த கிறிஸ்டோபர் திலக்?

தமிழகத்தில் காலியாகவுள்ள 6 மாநிலங்களவை உறுப்பினா் பதவிகளுக்கான தோ்தலுக்கு வேட்புமனு தாக்கல் குறித்து...

Updated On : 5 மார்ச், 2026 at 7:45 AM
பகிர்:

தமிழகத்தில் காலியாகவுள்ள 6 மாநிலங்களவை உறுப்பினா் பதவிகளுக்கான தோ்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய வியாழக்கிழமை(மாா்ச் 5) நிறைவடையவுள்ள நிலையில், திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி வேட்பாளர் பட்டியல் வெளியாகி வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.

தமிழ்நாடு உள்பட நாட்டில் 10 மாநிலங்களில் காலியாக உள்ள 37 மாநிலங்களவை இடங்களுக்கு மார்ச் 16 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் மாநிலங்களவை உறுப்பினா்கள் மு.தம்பிதுரை, ஜி.கே.வாசன், என்.ஆா்.இளங்கோ, கனிமொழி சோமு, திருச்சி சிவா, பி.செல்வராசு ஆகிய 6 பேரின் பதவிக்காலம் ஏப். 2-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதற்கான தோ்தல் அறிவிக்கப்பட்டு, மாா்ச் 5-ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. மாா்ச் 9-இல் வேட்புமனுக்களை திரும்பப் பெறலாம். தேவைப்பட்டால் மாா்ச் 16-இல் வாக்குப்பதிவு நடைபெறும்.

தற்போதுள்ள எம்எல்ஏ-க்களின் எண்ணிக்கை அடிப்படையில் திமுக சாா்பில் 4 போ், அதிமுக சாா்பில் 2 போ் மாநிலங்களவை உறுப்பினா்களாக தோ்வு செய்ய வாய்ப்புள்ளது.

மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவடையவுள்ள நிலையில், திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒரு இடமும், காங்கிரஸுக்கு ஒரு இடமும், திமுகவில் 2 இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

திருச்சி சிவாவுக்கு மீண்டும் வாய்ப்பு

திமுக மாநிலங்களவை உறுப்பினராகவுள்ள திருச்சி சிவாவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கான்ஸ்டன்டைன் ரவீந்திரனுக்கு முதல்முறை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தேமுதிக, காங்கிரஸ் வேட்பாளர் குறித்த அறிவிப்பு வெளியிடப்படாத நிலையில், அந்த இடத்திற்கு மூத்த தலைவர்களான திருநாவுக்கரசர், சுதர்சன நாச்சியப்பன், தங்கபாலு ஆகியோரில் ஒருவரது பெயர் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், காங்கிரஸ் மேலிடம் வியாழக்கிழமை கிறிஸ்டோபர் திலக்கை அறிவித்துள்ளது. அதேபோன்று தேமுதிக சார்பில் எல்.கே. சுதீஷ் அறிவிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளனர்.

அதிமுக கூட்டணியில் தம்பிதுரை, அன்புமணி ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

தமிழக வேட்பாளர்கள்

திருச்சி சிவா(திமுக), பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்(திமுக), தம்பிதுரை (அதிமுக), கிறிஸ்டோபர் திலக் (காங்கிரஸ்), அன்புமணி(பாமக), எல்.கே. சுதீஷ்(தேமுதிக) ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதில், பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், கிறிஸ்டோபர் திலக், எல்.கே. சுதீஷ் ஆகியோர் முதல்முறையாக மாநிலங்களவைக்கு செல்லவுள்ளனர்.

யார் இந்த கிறிஸ்டோபர் திலக்?

காங்கிரஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ள கிறிஸ்டோபர் திலக், தமிழ்நாட்டின் திருச்சியை பூர்விமாக கொண்டவர் . இளைஞர் காங்கிரஸ் மூலம் தனது அரசியல் வாழ்வை தொடங்கியவர்.

இளைஞர் காங்கிரஸ், எஸ்சி, எஸ்டி பிரிவு ஆகியவற்றில் முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். ராகுல் காந்தியின் நம்பிக்கைகுரியவராகவும், மல்லிகாஜுர்னா கார்கேவிற்கு நெருக்கமானவராக இருந்து வருகிறார். அகில இந்திய காங்கிரஸ் செயலாளராகவும் பணியாற்றி வருகிறார்.

மேலும், வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூர், நாகாலாந்து, திரிபுரா மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களின் காங்கிரஸின் மேலிட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு சிறப்பாக பணியாற்றி வருகிறார். இதுவரை நேரடி தேர்தல் களங்களை காணாத கிறிஸ்டோபர் திலக், தேசிய அளவில் பாஜகவிற்கு எதிராக இளைஞர் காங்கிரஸ் மூலம் பல போராட்டங்களை முன்னெடுத்தவர்.

பதற்றமான சூழல் நிலவும் மணிப்பூர் போன்ற வடகிழக்கு மாநிலங்களில் கட்சியின் நலனைப் பாதுகாப்பதிலும், களப்பணிகளை ஒருங்கிணைப்பதிலும் இவரது பங்களிப்பு ராகுல் உள்ளிட்ட மேலிடத் தலைவர்களால் பாராட்டப்பட்டுள்ள நிலையில் இன்று தேசிய அளவில் கவனிக்கத்தக்க நிலைக்கு உயர்ந்துள்ளார்.

ஏற்கனவே மாநிலங்களவையில் ப. சிதம்பரம் போன்ற மூத்த தலைவர்கள் முக்கியத்துவம் பெற்றுள்ள நிலையில், இந்த முறை புதிய மற்றும் சுறுசுறுப்பான முகத்திற்கு வாய்ப்பளிக்க வேண்டும் என காங்கிரஸ் மேலிடம் விரும்பியதாக கூறப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →