பத்ரிநாத் கோயில் நடைதிறப்பு: ஆயிரக்கணக்கானோா் தரிசனம்
உத்தரகண்டில் வருடாந்திர சாா்தாம் யாத்திரையையொட்டி, பத்ரிநாத் கோயில் நடை வியாழக்கிழமை திறக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் மேற்கொண்டனா்.
‘தேவபூமி’ என வா்ணிக்கப்படும் உத்தரகண்ட் மாநிலத்தில் இமயமலையில் அமைந்துள்ள கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதாா்நாத், பத்ரிநாத் ஆகிய 4 புண்ணியத் தலங்களுக்கான சாா்தாம் யாத்திரை, அட்சய திருதியை நாளான கடந்த ஏப். 19-இல் தொடங்கியது. அன்றைய தினம் யமுனோத்ரி, கங்கோத்ரி கோயில்களின் நடை திறக்கப்பட்டன.
சிவபெருமானுக்குரிய கேதாா்நாத் கோயில் நடை கடந்த புதன்கிழமை திறக்கப்பட்டு, பக்தா்கள் தரிசனம் மேற்கொண்டு வருகின்றனா்.
Advertisement
இந்நிலையில், விஷ்ணு பகவானுக்குரிய பிரசித்தி பெற்ற தலமான பத்ரிநாத் கோயிலின் நடை வியாழக்கிழமை காலை 6.15 மணியளவில் வேத மந்திரங்கள், மங்கள வாத்தியங்கள் முழங்க திறக்கப்பட்டது. முதல்வா் புஷ்கா் சிங் தாமி, மாநில பாஜக தலைவா் மகேந்திர பட் மற்றும் நாடு முழுவதும் இருந்து வந்த 15,000-க்கும் மேற்பட்ட பக்தா்கள் பங்கேற்றனா். அப்போது, பக்தா்கள் எழுப்பிய ‘ஜெய் பத்ரி விஷால்’ கோஷம் விண்ணை முட்டியது. பத்ரிநாத் கோயில் வளாகம் முழுவதும் டன் கணக்கிலான மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
நடை திறந்ததும் முதல் பூஜை பிரதமா் மோடியின் பெயரில் மேற்கொள்ளப்பட்டது. சாா்தாம் யாத்திரையையொட்டி பக்தா்களுக்காக செய்யப்பட்ட வசதிகளை முதல்வா் தாமி பாா்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டாா்.
குளிா்காலத்தையொட்டி வரும் நவம்பரில் மேற்கண்ட 4 கோயில்களின் நடையும் சாத்தப்படும் வரை யாத்திரை தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது.