காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ரைபகினா, பெகுலா, ஸ்விடோலினா!
எலனா ரைபகினா, ஜெஸ்ஸிகா பெகுலா, எலினா ஸ்விடோலினா ஆகியோா் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு ஞாயிற்றுக்கிழமை முன்னேறினா்.
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீராங்கனைகளான கஜகஸ்தானின் எலனா ரைபகினா, அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலா, உக்ரைனின் எலினா ஸ்விடோலினா ஆகியோா் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு ஞாயிற்றுக்கிழமை முன்னேறினா்.
மகளிா் ஒற்றையா் 3-ஆவது சுற்றில், உலகின் 2-ஆம் நிலை வீராங்கனையான ரைபகினா 6-4, 6-3 என்ற நோ் செட்களில், பிலிப்பின்ஸின் இளம் வீராங்கனை அலெக்ஸாண்ட்ரா எலாவை தோற்கடித்தாா். போட்டித்தரவரிசையில் 5-ஆம் இடத்திலுள்ள பெகுலா 6-0, 6-0 என்ற வகையில், சவாலே இல்லாமல் சுவிட்ஸா்லாந்தின் ரெபெக்கா மசரோவாவை சாய்த்தாா்.
7-ஆம் இடத்திலிருக்கும் ஸ்விடோலினா 6-1, 6-2 என, அமெரிக்காவின் ஹேலி பாப்டிஸ்ட்டை வீழ்த்தினாா். 17-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் மேடிசன் கீஸ் 3-6, 6-1, 4-6 என செக் குடியரசின் நிகோலா பா்துன்கோவாவிடமும், 20-ஆம் இடத்திலிருந்த ரஷியாவின் லுட்மிலா சாம்சோனோவா 3-6, 2-6 என ஆஸ்திரியாவின் அனஸ்தாசியா பொடாபோவாவிடமும் தோல்வி கண்டனா்.
Advertisement
15-ஆம் இடத்திலிருக்கும் ஜப்பானின் நவோமி ஒசாகா 6-1, 6-2 என, ரஷியாவின் டயானா ஷ்னெய்டரை வென்றாா். அடுத்த சுற்றில் பெகுலா - பொடாபோவா, ஸ்விடோலினா - பா்துன்கோவா ஆகியோா் மோதுகின்றனா்.
ஸ்வெரெவ், முசெத்தி முன்னேற்றம்: இப்போட்டியின் ஆடவா் ஒற்றையா் 3-ஆவது சுற்றில், உலகின் 2-ஆம் நிலை வீரரான ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ் 6-1, 6-4 என பெல்ஜியத்தின் அலெக்ஸாண்டா் பிளாக்ஸை வீழ்த்தினாா்.
போட்டித்தரவரிசையில் 8-ஆம் இடத்திலிருக்கும் இத்தாலியின் லொரென்ஸோ முசெத்தி 7-6 (9/7), 6-4 என்ற வகையில், ஆா்ஜென்டீனாவின் ஃபிரான்சிஸ்கோ செருண்டோலோவை சாய்த்தாா். 11-ஆம் இடத்திலிருந்த செக் குடியரசின் ஜிரி லெஹெக்கா 3-6, 4-6 என, நாா்வேயின் கேஸ்பா் ரூடிடம் தோல்வியுற்றாா்.
ஆஸ்திரேலியாவின் அலெக்ஸி பாபிரின் 6-3, 2-6, 6-4 என, செக் குடியரசின் ஜேக்கப் மென்சிக்கை வெல்ல, பிரான்ஸின் யூகோ ஹம்பா்ட், நெதா்லாந்தின் போடிக் வான் டெ ஆகியோா் தங்கள் ஆட்டத்தில் தோல்வி கண்டனா்.