முகப்பு
தினமணி கதிர்

திரைக் கதிர்

"கற்றது தமிழ்', "தங்க மீன்கள்' என படத்துக்குப் படம் தமிழ் ரசிகர்களின் பரவலான பாராட்டுதல்களை பெற்று வருபவர் இயக்குநர் ராம்.

Updated On : 23 ஜூலை 2018, 11:45 am IST
பகிர்:

"காதலர் தினம்', "கண்ணோடு காண்பதெல்லாம்' உள்ளிட்ட  படங்களில் நடித்தவர் சோனாலி பிந்த்ரே. ஹிந்தி மற்றும் கன்னடப் படங்களிலும் நடித்த இவர், தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இத்தகவலை அவரே தனது இணையதளப் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் நோய்க்கான சிகிச்சைகளைப் பெற்று வருகிறார். சோனாலிக்கு நீண்ட கருங்கூந்தல். விதவிதமான ஹேர் ஸ்டைல் செய்து புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் காட்டுவார். தற்போது அந்த கூந்தலை வெட்டி ஆண்கள்போல் கிராப் வைத்துக் கொண்டுள்ளார். கூந்தல் வெட்டப்படுவதை விடியோவாக பதிவு செய்து அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார். முடியை வெட்ட வெட்ட அவரது முகத்தில் பாவங்கள் மாறிய வண்ணம் இருக்கிறது. சில சமயம் உணர்ச்சிவயப்பட்டு கைகளை முகத்தில் புதைத்து உருகுகிறார். தற்போதைய எனது வாழ்க்கைப் பயணத்தை எல்லாரிடமும் பகிர்ந்து கொள்கிறேன்.  நோய் பாதித்தவர்களில் சிலர் துணிச்சலாக அதை எதிர்கொண்ட அனுபவத்தை கடிதமாக எழுதி இருக்கிறார்கள். அது எனக்கு தைரியத்தையும், வலிமையையும் தந்து வருகிறது என்று அந்த வீடியோவில் உருக்கமாகச் சொல்லியிருக்கிறார் சோனாலி.


"கற்றது தமிழ்', "தங்க மீன்கள்' என படத்துக்குப் படம் தமிழ் ரசிகர்களின் பரவலான பாராட்டுதல்களை பெற்று வருபவர் இயக்குநர் ராம். இவரின் அடுத்த  படைப்பாக உருவாகியுள்ள "பேரன்பு' வெளிவருவதற்கு முன்பே பலத்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. படப்பிடிப்பு முடிந்த நிலையில், படம் சர்வதேசத் திரைப்பட விழாக்களுக்கு அனுப்பப்பட்டது. 

இதன் ஒரு பகுதியாக ஷாங்காய் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் படம் திரையிடப்பட்டது. பங்கு கொண்ட அனைத்து விழாக்களிலும் படக்குழுவினருக்கு விருதுகள் கிடைத்துள்ளன. இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன. சென்னையில் கடந்த வாரம் நடந்த இந்நிகழ்வில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். விழாவில் இயக்குநர் ராம், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர்ராஜா இருவரும் நா.முத்துக்குமார் இல்லாமல் பாடல்கள் உருவான தருணத்தைப் பகிர்ந்து கொண்டனர்.  மம்முட்டி,  அஞ்சலி,  தங்க மீன்கள் சாதனா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். 
  

Advertisement

Advertisement

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார் காஜல் அகர்வால்.  தமிழில் விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் ஒரே நேரத்தில் நடித்தார். காஜலின் பெற்றோர் திருமணத்துக்கு வற்புறுத்திய போதிலும், அதை ஏற்காமல் சினிமாக்களில் கவனம் செலுத்தி வருகிறார்.  இந்த ஆண்டு 3 படங்களில் நடிக்கும் அவர் அடுத்த ஆண்டிற்கும் 3 படங்களில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார். இந்நிலையில் தெலுங்கில் என்.டி.ராமராவ் வாழ்க்கை படத்தில் காஜல் அகர்வால் நடிப்பதாக இருந்தது. முதலில் இப்படத்தை தேஜா இயக்கவிருந்தார். ஆனால் ஹீரோ என்.டி.பாலகிருஷ்ணாவுக்கும், தேஜாவுக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதையடுத்து அப்படத்திலிருந்து தேஜா விலகினார். தற்போது கிரிஷ் இயக்குகிறார். இயக்குநர் தேஜா படத்திலிருந்தபோது நடந்த நட்சத்திர தேர்வில் தற்போது மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. அதன்படி என்.டி.பாலகிருஷ்ணா ஜோடியாக வித்யாபாலன் நடிக்கிறார். முக்கிய வாய்ப்பாக இந்தப் படத்தைக் கருதிய காஜலுக்கு பலத்த ஏமாற்றமே கிடைத்துள்ளது.


கமல்ஹாசன் இயக்கி நடித்த "விஸ்வரூபம்' கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியானது. பல்வேறு சர்ச்சைகள், தடைகளைக் கடந்து வெளியான இப்படம் வசூல் ரீதியாக சாதனை புரிந்தது.  இந்தப் படத்தின் முதல் பாகம் எடுக்கும் போதே, இரண்டாம் பாகத்துக்கான பாதியளவு படப்பிடிப்பு முடிந்து விட்டதாகவும், மீதமுள்ள  காட்சிகள் உருவாக்கப்பட்டு வருவதாகவும் சொல்லப்பட்டது. இந்நிலையில் இதை உறுதி செய்த கமல்ஹாசன், அதற்கான கிராபிக்ஸ் பணிகளுக்காக அமெரிக்காவில் ஒரு மாத காலம் தங்கியிருந்தார். இந்நிலையில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில், பல்வேறு காரணங்களால் படத்துக்கான வேலைகள் பாதியில் நின்றன.  "விஸ்வரூபம் -2' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை நடிகர் கமல் சமீபத்தில் தொடங்கி முடித்தார். சென்னை ராணுவப் பயிற்சி மையத்தில் நடந்த இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கமலுடன், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தற்போது படப்பிடிப்பு  முடிந்து இறுதிக் கட்ட வேலைகள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில் "விஸ்வரூபம் -2'  படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்
பட்டுள்ளது.  


சில ஆண்டுகளுக்கு சத்யசிவா இயக்கத்தில் வெளிவந்த படம் "கழுகு'. விமர்சனரீதியாக இப்படத்துக்கு வரவேற்புகள் கிடைத்த நிலையில், இப்படத்தின்  இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. முதல் படத்தில் இணைந்த அதே சத்யசிவா - கிருஷ்ணா - பிந்துமாதவி கூட்டணி இப்படத்திலும் இணைகிறது. காளி வெங்கட் உள்ளிட்டோர் கதையின் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். கோபி கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார்.  ராஜா பட்டாசார்ஜி படத்தொகுப்பு செய்கிறார்.  முழுக்க முழுக்க கொடைக்கானல், மூணாறு பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. அண்டை மாநில முதலமைச்சர் பயணம் செய்யும் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் விழுந்து விடுகிறது. அதை ராணுவம் தேடி அலைகிறது. இருந்தாலும், நொறுங்கிய ஹெலிகாப்டரின் பாகங்களோ, அதில் பயணம் செய்த முதலமைச்சர் உள்ளிட்டவர்களின் உடல்களோ கிடைக்கவில்லை. செந்நாய்கள் அடர்ந்து வாழும் அந்த வனப்பகுதிக்குள்  செல்ல ராணுவமே அஞ்சுகிற நிலையில், அதை வேட்டையாடும் திறன் படைத்த கிருஷ்ணா காட்டுக்குள் செல்கிறார். பின் செந்நாய்களோடு மோதி சண்டையிட்டு ராணுவத்துக்கு உதவி செய்கிறார். படத்தின் இறுதிக் காட்சியான இது பிரமாண்டமாக எடுக்கப்பட்டுள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments