திரைக்கதிர்
"கடைக்குட்டி சிங்கம்' படத்துக்குப் பின் கார்த்தி நடித்து வரும் படம் "தேவ்'. கார்த்தி ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். பிரகாஷ்ராஜ், ரம்யாகிருஷ்ணன், விக்னேஷ், அம்ருதா, வம்சி உள்ளிட்டோர் கதையின்
* "கடைக்குட்டி சிங்கம்' படத்துக்குப் பின் கார்த்தி நடித்து வரும் படம் "தேவ்'. கார்த்தி ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். பிரகாஷ்ராஜ், ரம்யாகிருஷ்ணன், விக்னேஷ், அம்ருதா, வம்சி உள்ளிட்டோர் கதையின் பிரதான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கின்றனர். ஒளிப்பதிவு இயக்குநராக ஆர். வேல்ராஜ் பணியாற்றுகிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ரஜத் ரவிசங்கர். ஓர் இளைஞன் தான் நினைத்ததைச் சாதிக்க, எப்படிப்பட்ட சவால்களை எதிர்த்துப் போராடுகிறான் என்பது திரைக்கதை. ராமலிங்கம் என்ற பெயருடன், தன் அபிமான கிரிக்கெட் வீரர் கபில்தேவ் பெயரை சேர்த்து, தேவ் ராமலிங்கம் என்று மாற்றிக்கொள்கிறார் கார்த்தி. சுருக்கமாக, தேவ் என அழைக்கப்படும் அந்த கதாபாத்திரம் தனக்கான லட்சியம், இலக்கு என வாழ்க்கை சவால்களை எதிர்கொண்டு வெற்றிப் பெறுவதே கதை. படத்தின் பெரும்பான்மையான படப்பிடிப்புகள் முடிந்து விட்டன. இறுதிக் கட்ட படப்பிடிப்புக்கு தயாராகி வருகிறது படக்குழு. இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகள் இறுதி கட்டப் பணிகளில் உள்ளன. ஜனவரி மாத இறுதியில் படம் திரைக்கு வரும் என சொல்லப்படுகிறது. இம்மாத இறுதியில் படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியாகஉள்ளது.
* "சர்கார்' கதை விவகாரத்தில் பல திருப்பங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் "சர்கார்' கதை தொடங்கிய புள்ளி குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் தனது வலைப்பூ பக்கத்தில் நீண்ட விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளார். ""சென்ற 20 ஆண்டுகளில் நான் செய்த உச்சகட்ட உழைப்பே இந்தப் படம்தான். தொடர்ச்சியாக காலை முதல் இரவு வரை காட்சி காட்சியாக விவாதித்து உருவாக்கியது. எந்தக்காட்சியும் எவரேனும் ஒருவருக்குப் பிடிக்காது. பிடித்திருந்தால் விஜய்யின் இயல்புக்குச் சரிவருமா என்ற சந்தேகம். உடனே "இது முன்னாடியே வந்திருச்சோ?' என்ற அடுத்த சந்தேகம். உடனே "ரொம்ப புதுசா இருக்கோ? புரியலை என்பார்களோ'என்ற மேலும் பெரிய சந்தேகம். ஒரு நான்கு "வெண்முரசு' அளவுக்கு கதை விவாதிக்கப்பட்டிருக்கும். எங்கோ ஓரிடத்தில் இதிலுள்ள வேடிக்கையை நான் ரசிப்பதனால்தான் ஈடுபடவே முடிந்தது. வணிக சினிமா என சாதாரணமாகச் சொல்கிறோம். அது லட்சக்கணக்கானவர்களின் ரசனைக்கும் நமக்கும் நடுவே ஒரு சமரசப்புள்ளியைக் கண்டடைவதுதான். அவர்களுக்குப் பிடித்ததைக் கொடுக்கவேண்டும். அவர்கள் எதிர்பார்ப்பதைக் கொடுக்கவேண்டும். ஆகவே எதுவும் பெரிதாகப் புதுமைசெய்ய முடியாது. ஆனால் கண்டிப்பாக கொஞ்சம் புதிதாகவும் இருக்க வேண்டும்'' என குறிப்பிட்டுள்ளார் ஜெயமோகன்.
* 'திருடன் போலீஸ்', "உள்குத்து' ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் ராஜூ அடுத்து இயக்கி வரும் படம் "கண்ணாடி'. இந்த படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஆன்யா சிங் கதாநாயகியாக நடிக்கிறார். இது தமிழில் இவருக்கு முதல் படம்.
"மதுரவீரன்' படத்தை தயாரித்த வி ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தைத் தயாரிக்கிறது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வருகிறது. ஆனந்த் ராஜ், கருணாகரன், பூர்ணிமா பாக்யராஜ், முரளி சர்மா, பிரகதி, திவ்யா கணேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இது ரொமண்டிக் த்ரில்லர் கதையாக உருவாகி வருவதாக இயக்குநர் கார்த்திக் ராஜு தெரிவித்துள்ளார். எஸ்.எஸ்.தமன் இசையமைக்கும் இந்த படத்திற்கு பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் இசை விரைவில் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
* "அபூர்வ சகோதரர்கள்' படத்துக்காக குள்ள மனிதராக நடித்து புகழ் பெற்றார் கமல்ஹாசன். அந்தப் படத்துக்கான அவரது உழைப்பு பற்றி இன்றும் ரசிகர்கள் மத்தியில் பரவலான பேச்சு உண்டு. இது போன்று பல நடிகர்கள் அவ்வப்போது முயற்சித்தாலும், கமல் அளவுக்கு யாரும் வரமுடியவில்லை. இப்போது மம்முட்டி குள்ள மனிதராக நடிக்க இருக்கிறார். மம்முட்டி நடிப்பில் "டபுள்ஸ்' மலையாளப் படத்தை இயக்கியவர் சோஹன் சீனுலால். இதையடுத்து குள்ளர் வேடத்தில் ஹீரோ நடிக்க வேண்டிய கதை ஒன்றை உருவாக்கினார். இதில் திலீப் நடிக்க இருந்தார். திடீரென சில காரணங்களால் அவர் நடிக்கவில்லை. இதையடுத்து மம்முட்டியிடம் சோஹன் கதை சொல்லி அவரது சம்மதமும் வாங்கிவிட்டார். விரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இப்படத்துக்காக பிரத்யேக பயிற்சிகளில் இறங்கியுள்ளார் மம்முட்டி. "அபூர்வ சகோதரர்கள்' படத்துக்காக கமல் வகுத்த வியூகங்கள் பற்றியும் அவர் கேட்டு தெரிந்து கொண்டுள்ளார். இருந்தாலும், மம்முட்டி, கமலை மிஞ்சுவாரா என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். இதற்கிடையில் இப்போது ஹிந்தியில் "ஜீரோ' படத்தில் ஷாருக்கான் குள்ள மனிதனாக நடித்திருக்கிறார். இந்த படம் வரும் டிசம்பரில் திரைக்கு வருகிறது.
* 2000-ஆம் ஆண்டில் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்ட பிரியங்கா சோப்ரா, தமிழில் விஜய் ஜோடியாக "தமிழன்' படத்தில் அறிமுகமானார். பிறகு ஹிந்தி படங்களில் கவனம் செலுத்திய அவர், ஹாலிவுட் படத்தில் நடிக்க சென்றார். அங்கும் தனித்துவ நடிப்பால் பல ரசிகர்களைப் பெற்றார் அமெரிக்காவில் வசிக்கும் பாடகரும் நடிகருமான நிக் ஜோனஸ் என்பவருடன் அவருக்கு காதல் மலர்ந்தது. சில வருடங்களாக அவர்கள் காதலித்து வந்தனர்.
சமீபத்தில் அவர்கள் நிச்சயதார்த்தம் நடந்தது. வரும் நவம்பர் 29-ஆம் தேதி திருமணம் நடக்கிறது. இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதற்கிடையே, பிரியங்கா சோப்ராவுக்கு நிக் ஜோனஸ் ஆடம்பர பங்களா பரிசளித்துள்ளார். அமெரிக்காவில் கலிபோர்னியா பகுதியிலுள்ள இயற்கை அழகு நிறைந்த பெவர்லி மலைப்பகுதியில், பல ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பங்களாவில் பெரிய படுக்கை அறை, நீச்சல் குளம், நூலகம், நவீன வசதிகளுடன் கூடிய பாத்ரூம், கண்ணை கவரும் வரவேற்பு அறை என பல்வேறு வசதிகள் இருக்கிறது. இதன் மதிப்பு இந்திய ரூபாயில், 47 கோடியே 54 லட்சம் என்கிறார்கள்.
- ஜி.அசோக்
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.