பாரதி கனவு கண்ட பாப்பா!
சமூக அவலங்களுக்கு தீர்வு காண தன் பேனா மையை கவிதைகளாக மாற்றியவன் பாரதி! துப்பாக்கிகளும், தோட்டாக்களும் தந்துவிடாத அச்சத்தை வெள்ளைக்காரர்களுக்கு கவிதைகள் மூலம் காட்டியவன். காலத்தை கடந்து சிந்தித்த அந்த
சமூக அவலங்களுக்கு தீர்வு காண தன் பேனா மையை கவிதைகளாக மாற்றியவன் பாரதி! துப்பாக்கிகளும், தோட்டாக்களும் தந்துவிடாத அச்சத்தை வெள்ளைக்காரர்களுக்கு கவிதைகள் மூலம் காட்டியவன். காலத்தை கடந்து சிந்தித்த அந்த மகாகவிஞனின் மீது ஒரு 12 வயது சிறுமிக்குத் தான் அப்படி ஒரு காதல். ஆம், மரணத்தை வென்ற அந்த மகாகவிஞனின் பாடல்களை எந்த விழாவாக இருந்தாலும் எந்த துண்டு சீட்டிலும் எழுதி வைத்துக்கொண்டு படிக்காமல் தன் அற்புத குரல் வளத்தினால் பாடி அத்தனை பார்வையாளர்களையும் கட்டிப்போட்டு விடுகிறார் அந்தப் புதுமைப்பெண்!
ராமநாதபுரம் நேஷனல் அகாதெமி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறார் நான்சி சில்வியா. தந்தை ராஜேந்திரன் மதுரையில் ஒரு தனியார் நிறுவனத்திலும் தாய் ராணி இவர் பயிலும் அதே பள்ளியில் அறிவியல் ஆசிரியையாகவும் பணி செய்து வருகின்றனர். ராமநாதபுரம் தமிழ்ச் சங்கம் நடத்திய பாரதி விழாவில் நான்சி பாடிய பாரதி பாடல்களைக் கேட்டு ரசித்து மகிழந்தோம். அவரை அவரது இல்லத்தில் கொண்டாட்டத்துக்காக சந்தித்தோம்.
பாடல்கள் பாடுவதில் ஆர்வம் வந்தது எப்படி?
நான் 5 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது விவேகானந்தா கேந்திரம் சார்பில் நடந்த மாவட்ட அளவிலான பாட்டுப்போட்டியில் முதல்பரிசு பெற்றேன். பின்னர் மாநில அளவிலான பாட்டுப் போட்டியிலும் முதல் பரிசு பெற்றேன். பலரின் பாராட்டு எனக்குள் ஒரு ஆர்வத்தை தூண்டியது. தொடர்ந்து பாட இதுவே ஒரு காரணமாகவும் அமைந்து விட்டது.
பாரதியார் பாடல்களை மட்டும் பாடுவதற்கு என்ன காரணம்?
காந்தியடிகள் அரிச்சந்திரன் நாடகத்தைப் பார்த்த பிறகு இனிமேல் பொய்யே பேசக்கூடாது என்று முடிவெடுத்ததைப் போல நான் பாரதியாரின் வாழ்க்கை வரலாறு பற்றிய படம் பார்த்தேன். வறுமையிலும் அவரது நேர்மை, துணிவு உள்ளிட்ட பல அம்சங்கள் என் மனதை ஆழமாக பாதித்ததால் அவர் மீது எனக்கு ஒரு தணியாத பற்று ஏற்பட்டது.
பாரதியார் பாடல்கள் மொத்தம் எத்தனை தெரிந்து வைத்திருக்கிறீர்கள்?
புத்தகத்தைப் பார்க்காமல் 20 பாடல்களை பாடுவேன். மனப்பாடமாகத் தெரியும். எந்த விழா மேடையாக இருந்தாலும் எதையும் பார்க்காமல் பாரதி பாடல்களைப் பாடுவதே எனது பாணி. புதிதாக ஏதேனும் ஒரு விழா மேடையில் பாடப் போகும் போது பாரதியின் புதிய பாடல் ஒன்றையும் மனப்பாடம் செய்து கொண்டு போய் பாடுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறேன்.
எந்தெந்த நிகழ்ச்சிகளுக்கு பாடப் போகிறீர்கள்?
எந்த ஊருக்கும், எந்த விழாவுக்கும் பாடப் போகிறேன். தமிழ்ச்சங்கம், கம்பன் கழகம், அறக் கட்டளை துவக்க விழாக்கள், தமிழகம் முழுவதும் நடைபெறும் தமுஎச வின் கலைஇரவு நிகழ்ச்சிகள், முக்கியப் பிரமுகர்களின் நினைவு தினங்கள் போன்றவற்றில் என்னை அழைத்து பாடச் சொல்கிறார்கள். என் அம்மாவின் உதவியுடன் எல்லா விழாக்களிலும் கலந்து கொள்கிறேன்
.
பாரதி பாடல்களை குறுந்தகடாக வெளியிடும் எண்ணம் எப்படி ஏற்பட்டது?
தமுஎச உறுப்பினர் சங்கை திருவுடையான் பாரதியார் பாடல்களைப் பாடி சி.டி. போட்டிருந்தார். அதன் வெளியீட்டு விழாவுக்கு என்னையும் அழைத்திருந்தார். அங்கு போயிருந்த எனக்கும் சி.டி. போடலாம் என்ற எண்ணம் வந்தது. பாரதியார் பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த 10 பாடல்களைத் தேர்வு செய்து சி.டி.யாக போட்டிருக்கிறேன். இதன் முதல் சி.டி.யை தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன் ராமநாதபுரம் தமிழ்ச்சங்க விழாவில் வெளியிட அதனை சமூக சேவகர் டாக்டர்.மதுரம் அரவிந்தராஜ் பெற்றுக் கொண்டது எனக்கு மேலும் பெருமை சேர்ப்பதாக அமைந்து விட்டது.
உங்களின் செயல்பாடுகளுக்கு ஊக்கம்
தந்தவர்கள் யார்?
பாரதியின் மகள் வயிற்றுப் பேத்தி லலிதா பாரதி, கங்கை அமரன், எழுத்தாளர்கள் விக்கிரமன், நடராஜன், கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் நல்லகண்ணு, தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன், பாடகர் சங்கை திருவுடையான், சாத்தூர் ராம்மோகன், கிராம நிர்வாக அதிகாரி நவநீத கிருஷ்ணன் இவர்கள் தவிர பல தமிழ் அறிஞர்கள், எழுத்தாளர்கள் உள்பட பலரும் பாராட்டி
யுள்ளனர். இவர்களோடு என் பெற்றோரின் ஒத்துழைப்பும் ஊக்குவிப்பும் பெருமைக்குரியது.
சினிமாவில் பாடியிருக்கிறீர்களா?
பிரபல திரை இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனியின் இசையமைப்பில் உருவாகியுள்ள ""அவள் பெயர் தமிழரசி''என்ற திரைப்படத்தில் ஒரு பாடல் பாடியுள்ளேன்.அந்தப் படத்தில் நடிக்கவும் செய்துள்ளேன்.
அடிக்கடி வெளியூர் நிகழ்ச்சிகளுக்கு போவதால் படிப்பு பாதிக்கிறதா?
அதிகமாக பள்ளிக்கு லீவு போடுவதால் படிப்பு கொஞ்சம் பாதிக்கத்தான் செய்கிறது. மிகவும் மோசமில்லை. படிப்பு பாழாகி விடக்கூடாது என்பதில் ஜாக்கிரதையாக இருக்கிறேன்.
பாரதியாரின் கருத்துக்களில் உங்களை மிகவும் கவர்ந்த கருத்து எது?
அவரது பல கருத்துக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று பாரதி குழந்தைகளுக்கு சொல்லும் அறிவுரை மிகவும் முக்கியமானது.